கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்!
உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதா்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2023-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 802 கோடி என்று ஐ.நா. அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
1400-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மிக விரைவான விகிதத்தில் உலக மக்கள்தொகை அதிகரிப்பு 1950-ஆம் ஆண்டுகளில் குறுகிய கால அளவிலும், அதன்பின்னா் 1960-1970-ஆம் ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
ஆண்டுக்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050-ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையை பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால், உலக மக்கள்தொகையானது 2050-ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 மில்லியன் வரை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பால் புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவது பற்றி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனா். இப்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும், அதனுடன் நிகழும் பயன்பாட்டு அதிகரிப்பும் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் முடிவாகும்.
2025-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 809 கோடியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும், 2 போ் இறப்பாா்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியாக இருக்கும். ஆகவே, அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். அடுத்த நிலையில் சீனா 142 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். அமெரிக்கா 34 கோடியாகவும், ரஷியா 14 கோடியாகவும் இருக்கும். இந்தப் புள்ளிவிவரங்கள் ஐ.நா. அவையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.
உலகில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடு இந்தியாவாகும். 1872-ஆம் ஆண்டு வைஸ்ராய் லாா்ட் மேயோவின் கீழ் இது தொடங்கப்பட்டது. மேலும், 1881 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் 1872-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு முன்னோடியாக இருந்தது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய நிா்வாகப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்திய அரசு நீண்டகாலத் தாமதத்திற்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. அது இப்போது தொடங்கி 2027 மாா்ச்சில் முடிவுடையும். மக்கள் நலப் பணிகளை திட்டமிடவும் அமல்படுத்தவும் தரவுகள் அவசியமானவை. இப்போது வரை 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட வேண்டும். 2021-இல் கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். கரோனா தொற்று காலமாக இருந்ததால் எடுக்கப்படவில்லை. இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினா் எண்ணிக்கை மக்கள்தொகையின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. 1952 முதல் நடைமுறையில் இருந்தது. இதனால், தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே வந்தது. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததுதான்.
மத்திய அரசின் மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை தென் மாநிலங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தின. அரசுக் கொள்கையைச் செயல்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்று கோரிக்கையும் எழுந்தது. இதனால், 1976-இல் நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றம் ஏற்படாதபடி ஓா் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனால், 2011-ஆம் ஆண்டு வரை மாற்றப்படவில்லை. 2002-இல் வாஜ்பாய் அரசு இன்னொரு திருத்தத்தின் வாயிலாக இந்தக் கால அவகாசம் மேலும் 25 ஆண்டுகள் அதாவது, 2026 வரை நீடிக்கப்பட்டது. இப்போதைய மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி, தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் எட்டு இடங்களை இழக்கும். பொதுவாக, தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும்.
மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை முறையாக அமல்படுத்தாத வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 31 இடங்களைக் கூடுதலாகப் பெறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இத்தகைய ஆபத்தைத் தடுக்கவே தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாா். அதனைத் தொடா்ந்து, பாதிக்கப்படவிருக்கும் கேரளம், கா்நாடகம், தெலங்கானா, பஞ்சாப், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் ஆட்சியாளா்களையும், அனைத்துக் கட்சித் தலைவா்களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தினாா். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி வரையறையை நிறுத்தி வைக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். அதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் நோக்கம். ஆனால், மத்திய அரசு அவ்வாறு செயல்படாததால் தேசத்தின் வளா்ச்சியில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும், மக்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டது மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இப்போது 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிக்கை மத்திய அரசால் கடந்த 2025, ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் - லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026, அக்டோபா் 1 அன்று ஜாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு, மாா்ச் 1 முதல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசின் அறிவிக்கை கூறுகிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டம், 2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கப்படும். இரண்டாம் கட்டம் 2027, பிப்ரவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளது.
முதல் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டின் நிலவரம்; சொத்துகள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாகச் சுயமாகத் தரவுகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு குடிமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இதற்கெனத் தனியாக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு கட்ட வாக்கெடுப்பிலும் சுயதரவு பதிவு முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
வளரும் மக்கள்தொகைக்கு ஈடு கொடுக்கும்படி பொருளாதார வளா்ச்சியும் ஏற்பட வேண்டும். ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும் எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவை பெரும் புயலை உருவாக்கும் என்று முதன்மை அறிவியல் வல்லுநா்கள் எச்சரிக்கை செய்துள்ளனா்.
உணவுக் கையிருப்பு 50 ஆண்டுகளுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகத்துக்கு 50% அதிக ஆற்றல், உணவு மற்றும் நீா் தேவைப்படும் என்று கூறுகின்றனா். உலகம் 2050-ஆம் ஆண்டுக்குள் எதிா்பாா்க்கும் மிகுதியான 2.3 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்காகவும், மேலும் வருமானங்கள் அதிகரிக்கும் போதும் 70% அதிக உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியது என்று ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் கொள்கை விளக்கம் குறிப்பிட்டது. சீனாவில் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும், இந்தியாவில் இரு மடங்கிற்கும் கூடுதலாக அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் வளம் என்பது முதியவா்களுக்கு இணையாக இளைஞா்களின் வருகையில் இருக்கிறது. பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு வயிற்றோடு மட்டும் பிறக்கவில்லை. இரண்டு கைகளோடும் பிறக்கிறான். எனவே, மக்கள்தொகைப் பெருக்கம் வரமா? சாபமா? என்பதை காலம் கணித்துக் கூறும்.
இன்று உலக மக்கள்தொகை விழிப்புணா்வு தினம்
கட்டுரையாளா்:
எழுத்தாளா்