பூவுலகு எனும் நம் விமானம்

ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் புத்தகம் ஒன்றில் "பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்' என்று குறிப்பிட்டார்.
பூவுலகு எனும் நம் விமானம்
Published on
Updated on
3 min read

பூமியை விட்டு வெளியே சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் "பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்' என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் 1937-இல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூலில் எடுத்தாண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்றழைத்து, அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணியும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இதைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.

கென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம் எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர், 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த ஊ தாண்ட் தனது "பூமி நாள்' உரையில் குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உயிர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாள்கள் மட்டுமே வந்து சேரட்டும் என்று வாழ்த்தினார்.

சர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவியார் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.

நமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 823 கோடி மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.

நமது விமானத்தில் குறிப்பிட்ட அளவு உணவும், நீரும், எரிபொருளுமே இருக்கின்றன. உணவுப் பற்றாக்குறை, போதிய தண்ணீரின்மை, காற்று மாசு, எண்ணெய் வளம் தீரப்போவது எனப் பல பிரச்னைகளை எதிர்கொண்டவாறே நமது விமானப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரமும் அதீதப் புகழும் பொருளும் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புக்களும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

முதல் வகுப்புக்கு அடுத்த "பிசினஸ்' (வணிக) வகுப்பில் வியாபார விற்பன்னர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர் பயணிக்கின்றனர். இல்லாமை, போதாமை என்ற பிரச்னைகளையே அறியாத ஓர் அற்புத வாழ்வை இவர்களும் அனுபவிக்கிறார்கள். சிறந்த கல்வி, சக்திமிக்க வேலைகள்--தொழில்கள், நிலையான வருமானம், ஏராளமான சொத்து சுகங்கள், முக்கிய நபர்களின் தொடர்புகள், அதீத சக்தி என விரிந்து பரந்திருக்கிறது இவர்களின் வாழ்க்கை.

"எகானமி' (சிக்கன) வகுப்பில் சாதாரண மக்கள் பயணம் செய்கின்றனர். இங்கே எல்லோருக்கும் தேவையான உணவு கிடைத்தாலும், அளவிலும், தரத்திலும் குறைந்த உணவுகளே கிடைக்கின்றன. அதேபோலத்தான் தண்ணீரும்! முதல் வகுப்பு பயணிகளுக்குக் குளிப்பதற்குகூட தண்ணீரும், வசதியும் இருக்கின்றன. ஆனால், கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு உயிரைப் பிடித்து வைப்பதற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

உயர் வகுப்புக்களில் உள்ள பெரிய இருக்கைகள், அதிக இடைவெளி, இருக்கையைப் படுக்கையாக்கிக் கொள்ளும் வசதி, மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி போன்றவற்றுக்கு நேரெதிராக அதிக மக்கள்தொகை, இட நெருக்கடி, கால் வைப்பதற்குக்கூட போதுமான இடமின்மை, மூச்சுமுட்டும் அளவுக்குக் கூட்டம் என்று கீழ் வகுப்பு அமைந்திருக்கிறது.

மேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கிடையே வாழ்க்கைத்தரம் கடுமையாக வேறுபடுகிறது. உயர் வகுப்புகளில் உள்ளவர்களின் கலாசார அனுபவங்கள், இசை, நாடகங்கள், விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் எல்லாமே தரமிக்கவை. அவர்களுக்கு தகவல் பரிமாற்றத் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. தேவைப்படும் சேவைகள் அனைத்தும் தடைகள் ஏதுமின்றி தக்க நேரத்தில் தேவைக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. அவர்கள் மரியாதையோடும், முக்கியத்துவத்தோடும், கண்ணியத்தோடும் நடத்தப்படுகின்றனர். ஆனால், கீழ் வகுப்புகளில் இவை எதுவுமில்லை. வாழ்வின் அடிப்படை பாதுகாப்போ, கண்ணியமோ ஏதுமின்றி வாழ்க்கை நகர்கிறது. வாழ்வே ஒரு பெரும் போராட்டமாக நடக்கிறது.

விமானப் பணியாளர்கள் விமானத்தின் நிர்வாகத்தை நடத்துகின்றனர்; வளங்களை மேலாண்மை செய்கின்றனர்; சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கின்றனர்; அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றனர். இந்த விமானப் பணியாளர்களை ஒத்தவர்கள்தான் நமது ஆட்சியாளர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அல்லது நேர்மையற்ற வியாபார முறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும், தேவைக்கதிகமான வளங்களை தங்களுக்கெனப் பதுக்கி, ஒதுக்கிவைத்துக் கொள்கிறார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும்; சேவை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனாலும், இவர்கள் முதல் வகுப்புப் பயணிகளின் காலடிகளில்தான் உட்கார்ந்திருப்பார்கள். கீழ் வகுப்புப் பயணிகள் மீண்டும் மீண்டும் அழைத்த பிறகு என்ன வேண்டும்? என்று முறைத்துக் கொண்டே கேட்பார்கள், தொந்தரவாகப் பார்ப்பார்கள்.

நமது பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.

இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, ஈரான் போன்ற சில பயணிகளும் கடத்தல்காரர்களுடன் கைகோத்து எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; இந்த விமானக் கடத்தலில் உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி அந்த அக்கிரமக்காரர்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர். இந்தக் கடத்தல்காரர்களும், கையாட்களும் போட்டி, பொறாமை, அச்சம், வெறுப்பு போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஆட்சி செய்பவர்கள்.

இயற்கை, மாந்தநேயம் எனும் இரண்டு சிறந்த விமானிகள் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்க, கடத்தல்காரர்களும், அவர்களின் கைத்தடிகளும் மிரட்டிக் கொண்டும், விரட்டிக் கொண்டும் செயல்படுகிறார்கள்.

விமானப் பயணிகளில் பெரும்பாலானோர் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளனர். பலர் எந்தவிதமான பொறுப்புணர்வும், கடமையுணர்வுமின்றி தன்னலத்தோடு தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எங்கே இருக்கிறோம், என்ன நடக்கிறது என்கிற எந்த விழிப்புணர்வுமின்றி அறியாமையில் உழல்கின்றனர்.

விமானத்துக்குள் என்ன நடக்கிறது என்ற அறிவும், தெளிவும், சமூக அக்கறையும் கொண்டவர்கள் தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால், அருகில் இருப்பவர்களை வைத்து அவர்கள் மீது அவதூறுகள் பரப்புவதும், அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. அங்கீகரிக்காமை, அவதூறு சொல்லல், அடக்க-அழிக்க முயற்சித்தல் போன்ற அணுகுமுறைகளோடு அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள், செயல்பாட்டாளர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.

அணு ஆயுதங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், அவற்றை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து உலக அரங்கில் ஒரு புதிய முன்னெடுப்பு நடக்கிறது.

ஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 16 லட்சம் மைல் தொலைவு பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது? அது அணு ஆயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா? அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா? நமது வருங்காலம் என்னவாகும்? நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது!

கட்டுரையாளர்:

பச்சைத் தமிழகம் இயக்கத்தின்

ஒருங்கிணைப்பாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com