காலம் வழங்கிய கொடை!

சோழர்களின் வரலாறு குறித்தும் அவர்களின் நினைவுச்சின்னங்கள் குறித்தும்...
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையா் திருக்கோயில்
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையா் திருக்கோயில்
Published on
Updated on
3 min read

சோழர்களின் கட்டடக் கலைக்கு ஆகச்சிறந்த உதாரணம் கங்கைகொண்டசோழபுரம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரமாய் காட்சியளிக்கிறது. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழைமையான கங்கைகொண்ட சோழபுரம், சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றுகிறது. தற்போதிருக்கும் டெல்டா மாவட்டம் முழுவதும் தனித்துவமான கட்டடக் கலையின் மூலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தோற்ற அமைப்பு சற்று தஞ்சை பெரிய கோயிலைப் போல இருந்தாலும், இந்த இரண்டு கோயில்களும் தனித்துவமான கலைநயத்தை அடையாளப்படுத்துகின்றன.

சோழர்களின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். ராஜேந்திர சோழனால் நிறுவப்பட்டு சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் அதிகார மையமாக விளங்கியது. கங்கை வரை படையெடுத்துச் சென்று பல வெற்றிகளைப் பெற்ற முதலாம் ராஜேந்திர சோழன் அந்த வெற்றியின் நினைவாக இந்த நகரத்தையும், கோயிலையும் கட்டினார். கங்கையை வென்ற சோழனின் நகரம் என்பதே கங்கை கொண்ட சோழபுரத்தின் பொருளாகும்.

இன்றளவும் உலக அளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சோழர்களின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாசாரத்தின் உன்னதத்தை இன்றும் தாங்கி நிற்கிறது. ஆனால், கோயிலின் மேல்பகுதி சுமார் 55 மீட்டர் உயரம் கொண்டது. இது தஞ்சாவூர் பெரிய கோவிலைவிட சற்று குறைவான உயரம் உடையது என்றாலும், அதன் வளைந்த மற்றும் நேர்த்தியான அமைப்பு தனித்துவமானது.

கோயிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது தினமும் சூரிய ஒளி நேரடியாக விழுந்து நந்தியின் மீது பிரதிபலித்து சிவலிங்கத்தை ஒளிர்விப்பது காணக் கிடைக்காத கட்டட கலையின் அரிய நிகழ்வாகும். தொல்காப்பியம் மேற்கோளிட்டுக் காட்டிய, 'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை, வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும்' என்றிருந்த தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றி அமைத்தவர் ராஜேந்திர சோழன்.

தனது ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியதுடன் கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவர் ராஜேந்திர சோழன். கி.பி. 1014-இல் அரசனாகப் பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் 1017-இல் இலங்கை மீது படையெடுத்து வென்றார். இந்த வெற்றியை இலங்கை வரலாற்றைக் கூறும் மகா வம்சம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

இலங்கையில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் புலனுருவ, திரிகோண மலை, அத்தரகுழளியா, பெரியகுளம், மாதோட்டம், நித்தவினோதம், கனதாரவ முதலிய இடங்களில் உள்ளன. அதேபோல் கடாரம் வெற்றியும் ராஜேந்திர சோழனின் முக்கிய சாதனையாகும். லெய்டன் செப்பேட்டில் கடார வெற்றி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

"நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்' என விவரித்து கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியது, தமிழ் மாமன்னனின் பராக்கிரமத்தைப் பறைசாற்றுகிறது. வெற்றி பெற்ற இடங்களை மண்டலங்களாகப் பிரித்து ஆக்க பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் கைதேர்ந்தவர்களை அப்பகுதிக்குத் தலைமை நிர்வாகிகளாக ராஜேந்திர சோழன் னம் செய்தார்.

ராஜேந்திர சோழனின் படைத்தலைவனாக விளங்கிய அரையன்ராஜராஜன் சாளுக்கிய அரசர்களையும், வங்காள மன்னரையும் வெற்றி கொள்ள உதவியாக இருந்தார். கிருஷ்ணன், ராமன், பிரம்மராயன் ஆட்சிக்காலம் முழுவதும் உடனிருந்து போர்களில் வென்றெடுக்கப் பேருதவியாக இருந்தவர். அருண்மொழியான் உத்தமச்சோழர் பல்லவராயன் உள்ளிட்ட அதிகாரிகளும், பாண்டியன், சிவல்லையன், வல்லவரையன், உத்தமச்சோழ மிலாடுடையான், கங்கைகொண்ட சோழ மிலாடுடையான், சத்திரிய சிகாமணி, கொங்கால்வான் போன்ற குறுநில மன்னர்களின் ஒத்துழைப்பும், ராஜேந்திர சோழனின் உள்நாட்டு நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருந்தது.

ராஜேந்திரனின் பிறந்தநாள் நட்சத்திரம் 2014-க்கு முன்பு வரை தவறுதலாக மார்கழி, திருவாதிரை என்று குறிப்பிடப்பட்டது. சில வரலாற்று ஆய்வாளர்கள் திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டைச் சான்றாகக் காட்டி, மார்கழி திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் என்றும் கூறினர். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் சந்நிதானத்தின் மேற்குப்புற சுவரில் உள்ள குமுதப்படையில் உள்ள கல்வெட்டு, ஆடி திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் என்று தெளிவாக உறுதிப்படுத்துகிறது. கோனேரியின்மைகொண்டான் என்று தொடங்கும் அந்த அரசாணையில், "யாம் பிறந்த ஆடித் திருவாதிரையும், ஐயனின் ஐப்பசி சதயமும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மெளரியர்களின் ஆட்சிக்காலம் 137 ஆண்டுகள், குப்தர்கள் 223 ஆண்டுகள், பல்லவர்கள் 325 ஆண்டுகள், சோழர்கள் 430 ஆண்டுகள், விஜயநகரப் பேரரசு 340 ஆண்டுகள் என நிலைத்திருந்தன. ஆங்கிலேயர்கள் 187 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர். ஆனால், சோழப் பேரரசு மட்டும்தான் 430 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் நிலைத்திருந்த ஒரே பேரரசு ஆகும்.

ராஜேந்திர சோழன் 32 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதையும், தந்தை ராஜராஜ சோழனின் போர்த்தளபதியாகத் திகழ்ந்து அவரின் வெற்றிகளுக்கு தன்னையே ஒப்புக்கொடுத்த வீரம் மிக்க அடையாளமாகத் திகழ்ந்து, 13 ஆண்டுகள் மட்டுமே போரை நடத்தியதாகவும், கடைசி 19 ஆண்டுகள் எந்தப் போரையும் நடத்தவில்லை என்றும் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. ராஜேந்திரனின் கங்கை வெற்றியையும், கடாரம் வெற்றியையும் ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில், "கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்' என்று எழுதியிருந்தார்.

சோழர்களின் நீண்ட கால ஆட்சியில் உறையூர், பழையாறை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களும் தலைநகராக இருந்தன என்றாலும்கூட 254 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகராக இருந்த ஊர் என்ற பெருமை ராஜேந்திர சோழன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்துக்கே உண்டு.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் கொணர்ந்து இதை நிரப்பும் முன்பாக தான் வடக்கே படையெடுத்துச் சென்றபோது, கங்கை ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குடம் குடமாக ஊற்றிய பின் கொள்ளிடம் ஆற்றை தண்ணீர் விட்டு நிரப்பியதாக வரலாறு பேசுகிறது.

உட்கோட்டை மாளிகை மேடு, ஆயிரக்கலம், வாணத்தரையன்குப்பம், கொல்லாபுரம், வீரசோழநல்லூர், மெய்க்காவல்புத்தூர், சுண்ணாம்புக்குழி, குருகைபாலப்பன் கோவில் முதலிய இடங்கள் சோழர் காலத்து வரலாற்றைச் சுமந்த ஊர்களாகும். சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே மாளிகை மேடு ஆகும். சோழர் தலை

நகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது.

தவிர பருவமழையால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் தில்லைக்குச் சென்று நடராஜப் பெருமானைக் காண விரும்பிய போதெல்லாம் தடை உண்டாவதைக் கண்ட முதலாம் ராஜேந்திர சோழன், சோழ நாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்க எண்ணினான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரை நிர்மாணித்து அதைக் கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணி, தன்படையைக் கங்கை நீரைக் கொண்டு வர வடநாட்டுக்கு அனுப்பி வைத்தான்.

அப்படையும் வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் ராஜேந்திர சோழனுக்கு "கங்கைகொண்டான்', "கங்கை கொண்ட சோழன்' என்ற பெயரும் உருவானது.

தமிழ்ப் புலவர்களான ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெருமக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது.

உக்கிரமசோழர் உலா, இரண்டாம் குலோத்துங்க உலா முதலியவையும் பாடப்பட்டன. சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது இப்பகுதிதான்.

முதலாம் ராஜராஜன் காலத்தில் இருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டியயர்கள் 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்த்தனர். அப்போது சோழ மன்னர்கள் பலமுறை பாண்டியர்கள் மீது படையெடுத்து மதுரையை அழித்தனர். இதனால் மனம் குமுறிய பாண்டியர்கள் சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு பாண்டிய மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தில்தான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த பாதிப்புக்கு உண்டானது. மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. சோழர் குலம் 1279-இல் முடிவுறவே அரண்மனைகள் உள்பட, நகரின் இடிந்த செங்கற்களை ஊர் மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து கங்கைக்குச் சென்று வடபுலத்தை வென்று கங்கை நீரைக் கொண்டுவந்த சோழ மன்னனுடைய வரலாறு என்றும் வணங்கத்தக்க ஒன்றாகும் என்பதை அறிந்து, அந்த வரலாற்றை மீட்டுருவாக்கத்துக்கும், புத்துருவாக்கத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நான் என்பது என்னோடு முடிவதில்லை என்பதை மாமன்னன் ராஜேந்திர சோழனின் வரலாறு உணர்த்துகிறது.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com