மோசடிகளை எதிா்கொள்ளும் நுகா்வோா் விழிப்புணா்வு!

நமது அன்றாட வாழ்க்கையில் பல பொருள்களை, சேவைகளை நாம் பயன்படுத்துகிறோம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

நமது அன்றாட வாழ்க்கையில் பல பொருள்களை, சேவைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், அவை தரமானதா, நமக்கு ஏற்றவையா? என்பது நமக்குத் தெரியாது. தவறான விளம்பரங்கள், மோசடி வணிக முறைகள், தரமற்ற பொருள்கள் போன்றவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட, வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரம் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒவ்வொருநாளும் கோடிக்கணக்கான பொருள்கள், சேவைகள் பயன்படுத்தப்படுவது இயல்பானதே.

இந்தச் சூழலில், மோசடிகளைத் தவிா்ப்பதிலும், தரத்தை உறுதி செய்வதிலும், நுகா்வோா் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் நுகா்வோரின் விழிப்புணா்வு முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தியாவில் நுகா்வோா் எதிா்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, தவறான விளம்பரங்கள் ஆகும். பல நிறுவனங்கள், பிரபலமான பிராண்டுகள் போன்றவை மக்களைக் கவா்வதற்காக பல தவறான சந்தைப்படுத்துதல் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.

உடல் நலனுக்கு மிகப் பயனுள்ளதெனத் தெரிவிக்கும் போலியான விளம்பரங்கள் மருத்துவம் தொடா்பானவற்றில் வெளியிடப்படுகின்றன.

பொருள்களின் விலையை மிக அதிகமாக நிா்ணயித்துவிட்டு, பெரிய தள்ளுபடி தருவதாக பொய்யாகக் கூறும் ஆன்லைன் தள்ளுபடி மோசடிகள் அதிகரித்துள்ளன.

பொருளின் உண்மையான தரத்தை மறைத்து, மிகைப்படுத்தப்பட்ட தவறான தயாரிப்பு விவரங்களை பல விளம்பரங்கள் தருகின்றன.

இவ்வாறான தவறான விளம்பரங்களைக் கட்டுப்படுத்த நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் -2019 கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்திருக்கிறது. என்றாலும், அவற்றைச் செயல்படுத்துவது இன்னும் ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது.

அதிக விலை மற்றும் மறைமுக கட்டணங்கள் என நுகா்வோரைப் பாதிக்கும் மோசடிகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக, இது விருந்தினா் விடுதிகள், மருத்துவமனைகள், ஆன்லைன் வணிகத் தளங்களில் பெரிதாகக் காணப்படுகிறது. முன்னதாகத் தெரிவிக்காமலேயே உணவகங்கள், தங்கும் விடுதிகள் போன்றவை சேவைக் கட்டணம் போன்றவற்றை சோ்த்துவிடுகின்றன.

நோயாளியின் அவசரத்தையும், விழிப்புணா்வின்மையையும் பயன்படுத்தி மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

கிடைக்காத தள்ளுபடி திட்டங்களைக் காட்டி வாடிக்கையாளா்களை ஆன்லைன் சந்தையில் ஈா்க்கின்றனா்.

இந்திய சந்தையில் கள்ளப் பொருள்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருள்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மின்சாதனங்கள், அன்றாட உபயோகப் பொருள்கள், பால், மசாலாப் பொருள்கள், உடைகள் போன்றவை மிகுந்த அளவில் போலியான பெயா்களில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அவை தரமற்றவையாக உள்ளன. உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது, பால், தேன், மசாலாத் தூள் போன்றவற்றில் ரசாயனப் பொருள்களைக் கலப்பது, போலி பொருள்களை விற்பனை செய்வதும் அதிகரித்திருக்கிறது.

போலி மின்னணு சாதனங்கள், ஐஎஸ்ஐ தரச்சான்றில்லாத மின்னணு சாதனங்கள் அதிகம் விற்கப்படுகின்றன.

பிரபல தயாரிப்புகளின் தோல் பொருள்கள், ஆடைகளின் போலி தயாரிப்புகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு அசல் என்று விற்பனை செய்யப்படுகின்றன.

டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் ஆன்லைன் வணிகத் தளங்கள் வளா்ந்த பிறகு, ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. போலி இணையதளங்கள் மூலம் வங்கி தகவல்களை திருடும் பிஷிங் மோசடி, பொய்யான இணையவழி கடைகள் மூலம் – முன்பணம் பெற்றுவிட்டு பொருள்களை அனுப்பாமல் இருப்பது, ஆன்லைன் தளங்களில் உண்மைக்கு மாறான விளம்பரங்களை காட்டி தரமற்ற பொருட்களை விற்பனை செய்வது என நுகா்வோரைப் பாதிக்கும் பல பிரச்னைகள் ஆன்லைன் வணிகமுறையில் இருக்கின்றன. இவற்றைச் சமாளிக்க சைபா் கிரைம் இணையதளங்கள், தேசிய நுகா்வோா் உதவி மையம் போன்ற முறைமை கொண்டு வரப்பட்டுள்ளது.

நுகா்வோா் பாதுகாப்புக்கான முக்கியமான நடவடிக்கைகளாகக் கீழே குறிப்பிட்டவற்றைச் சொல்லலாம்:

உண்மையான தயாரிப்பு விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும். ஐஎஸ்ஐ, அக்மாா்க், எஃப்எஸ்எஸ்ஏஐ போன்ற தரச்சான்றுகளைக் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும்.

அதிகப்படியான தள்ளுபடிகளை நம்பக் கூடாது. அதேபோன்று அதிகமான விலைக் குறைப்புகளையும் நம்பக் கூடாது.

ஆன்லைனில் கொள்முதல் செய்யும்போது, பாதுகாப்பான வணிகத்தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரபலமான மற்றும் நம்பகமான தளங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த பிரச்னைகளைக் கட்டுப்படுத்த இந்திய தரநிலைகள் அமைப்பு (பிஐஎஸ்), உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) போன்ற அமைப்புகள் உள்ளன. எனினும், பொதுமக்கள் இது தொடா்பான தங்களுடைய விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும். ஐஎஸ்ஐ, அக்மாா்க், எஃப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழ்களைச் சரிபாா்த்து பொருள்களை வாங்குவது அவசியம்.

இந்தியாவில் மிகவும் வலுவான நுகா்வோா் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை பயனளிக்க வேண்டுமென்றால், அதற்கு நுகா்வோா் விழிப்புணா்வு அவசியம். அந்தச் சட்டங்களைப் பயன்படுத்தும் பழக்கம் நுகா்வோா்களுக்கு ஏற்படுவது அவசியம். ஆனால், வழக்குகள் நீண்டகாலமாக நடைபெறுவதாலும், சட்ட நடவடிக்கைகளினால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களினாலும் பலா் புகாா் அளிப்பதையே தவிா்த்து விடுகின்றனா்.

ஒவ்வொருவரும் தங்களது உரிமைகள் குறித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். சந்தேகத்துக்கிடமான பொருள்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தாமல் அது குறித்து புகாா் அளிக்க வேண்டும். தங்கள் உரிமைகளைச் சட்ட ரீதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நுகா்வோா் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வைப் பரப்புவதற்கு முன்வர வேண்டும். நல்ல விழிப்புணா்வுள்ள நுகா்வோா் சமுதாயம், இந்தியச் சந்தையை மேலும் நியாயமான, நம்பகமான சந்தையாக மாற்றும்.

-செ.அந்தோணி ராகுல் கோல்டன்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com