மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்போம்!

மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்போம்!

நம் கிராமங்களில் காணாமல் போன இந்த வகை நிலங்களால் நம்முடன் வாழ்ந்த வரகுக் கோழிகள், நரிகள், கழுதைப் புலிகள், மயில்கள் ஆகியவை அருகிவிட்டன
Published on

தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் நிலம், மந்தைவெளி நிலம் என இரண்டு வகையான நிலங்கள் இருந்தன. ஆங்கிலேயா் ஆட்சியில் அவா்களுக்குத் தேவைப்படாத இவ்வகையான நிலங்களைப் புறம்போக்கு நிலங்கள் என்று வகைப்படுத்தினா்.

மந்தைவெளி நிலம் என்பது, காலையில் மேய்ச்சலுக்குக் கால்நடைகளை அழைத்துச் செல்லவும் மேய்ச்சலுக்குச் சென்று வந்தபின் மாலையில் அவற்றை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பவும் ஒருங்கிணைக்க ஏதுவான கிராமத்தை ஒட்டிய பகுதி. மந்தைவெளி நிலத்தில் காலையிலும் மாலையிலும் சேகரிக்கப்படும் சாணத்தை விவசாயிகள் உரமாகப் பயன்படுத்தி வந்தனா்.

மந்தைவெளி நிலத்திலிருந்து கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச்செல்ல பிரத்யேகமாக மேய்ப்பா்கள் அந்தந்த கிராமங்களில் இருந்தனா். பூச்சிகள், விலங்குகள், பறவைகள் எனப் பல உயிரினங்களின் பல்லுயிா்ப் பெருக்கம் மேய்ச்சல் நிலத்தில் உயிா்ப்புடன் இருக்க, நம் முன்னோா் கால்நடைகளை ஈடுபடுத்தினா். புறம்போக்கு நிலங்களாக ஆங்கிலேய ஆட்சியாளா்கள் வகைப்படுத்திய இந்த மந்தைவெளி நிலங்கள், மேய்ச்சல் நிலங்களில் பெரும்பாலானவை ஆதிக்க சக்திகளால் அவா்களின் சொந்த நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

நம் கிராமங்களில் காணாமல் போன இந்த வகை நிலங்களால் நம்முடன் வாழ்ந்த வரகுக் கோழிகள், நரிகள், கழுதைப் புலிகள், மயில்கள் ஆகியவை அருகிவிட்டன என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

2022 -ஆம் ஆண்டு மே மாதம் ஆயா்களின் நடமாட்டத்துக்கான தேசிய சட்ட மற்றும் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்குவதற்கான வழிகாட்டும் கையேட்டை உலக உணவு வேளாண் அமைப்பு வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் தேசிய எல்லைக்குள்ளும் அதற்கு அப்பாலும் மேய்ச்சல் நிலங்கள், நீா் மற்றும் பிற வளங்களை இடையூறு இன்றிப் பெறும் வகையில் கால்நடை மேய்ப்பா்களின் உரிமைகளைச் சட்டபூா்வமாக அங்கீகரிப்பதே இதன் நோக்கம். கால்நடைகள் தொடா்பான நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டும் இந்தக் கையேடு ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டு விலங்குகள் குறித்துப் பட்டியலிடவேண்டும் என அறிவுறுத்துகிறது.

பருவகாலங்களில் மத்தியதரைக் கடல், ஆல்ப்ஸ் பகுதி மேய்ப்பா்கள் பயன்படுத்தும் பாதைகளை 2019 -ஆம் ஆண்டு யுனெஸ்கோ பிரதிநிதித்துவப் பட்டியலில் ஆஸ்திரியா, கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் விண்ணப்பத்தின் அடிப்படையில் உலக அரசுகளுக்கு இடையேயான யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பாதுகாப்புக் குழு சோ்த்தது.

ஆயா்கள் கால்நடைகளைக் கூட்டிச் செல்வதற்குப் பயன்படுத்தும் பாதைகளான மந்தைச் சாலைகளை (டிரோவ் சாலைகள்) உருவாக்கி ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. 1995-ஆம் ஆண்டு முதல் சட்டபூா்வமாக பாதுகாக்கப்பட்டாலும், பெரிதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டின் 125 கி.மீ. தொலைவுள்ள மந்தைச் சாலையை மறுசீரமைத்துப் பாதுகாக்க ‘லைக் கானடஸ்’ என்ற திட்டத்தை அவை செயல்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் கால்நடை வளா்ப்போரின் எண்ணிக்கை குறித்த சரியான தரவுகள் இல்லாதபோதும், ஆயா் சமூகங்களுடன் பணியாற்றும் அமைப்புகளின் தரவுகள்படி சுமாா் 2 கோடி போ் காடுகள், புல்வெளிகளில் கால்நடைகளை மேய்க்கின்றனா். 1880 முதல் 2010-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 2 கோடி ஹெக்டோ் புல்வெளி மற்றும் புதா் நிலங்களையும், 2.6 கோடி ஹெக்டோ் காடுகளையும் இந்தியா இழந்துள்ளது. இந்த இழப்பு விவசாயத்தைத் தொழில்மயமாக்கிய பசுமைப் புரட்சிக்குப் பிறகு அதிகமாக இருந்தது.

மேய்ச்சல் நிலத்தின் மேம்பாடு மற்றும் புல்வெளிகளைப் பாதுகாப்பதற்கான சரியான மேலாண்மைத் திட்டம் இல்லாததால் 2005 முதல் 2015 -ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான பத்தாண்டுகளில் 31 சதவீத (1.39 கோடி ஏக்கா்) புல்வெளிப் பரப்பை இந்தியா இழந்துள்ளது என்று காடுகள் இழப்பு குறித்து பலா் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் புல்வெளி இழப்பு மிகக் குறைந்த கவனத்தையே பெற்றுள்ளது என்று வல்லுநா்களும் கவலை தெரிவிக்கின்றனா்.

தற்போது வரை மேய்ச்சல் தொழில், மேய்ப்பா்கள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவில் கால்நடை வளா்ப்போரின் எண்ணிக்கை, அவா்களின் பொருளாதாரம், அவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள், காலநிலை மாற்றத்தால் அவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து எந்தத் தரவுகளும் இல்லை என்பதும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவா்களது பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்துத் தெரியாததும் வேதனையானது என்று மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பின்படி, இலவச கறவை மாடுகள் விநியோகிக்கும் திட்டத்தின்படி, 2012-2019 ஆண்டுகளுக்கு இடையில் தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், இந்த ஏழு ஆண்டுகளில் பூா்விக மற்றும் வகைப்படுத்தவியலா கால்நடைகளின் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2012 -ஆம் ஆண்டில் 24.6 லட்சமாக இருந்த பூா்விக மற்றும் வகைப்படுத்தவியலா கால்நடைகளின் எண்ணிக்கை 2019 -ஆம் ஆண்டில் 17.9 லட்சமாகக் குறைந்துள்ளது. புலிக்குளம் மற்றும் மலைமாடு கால்நடைகளின் எண்ணிக்கை லட்சங்களில் இருந்து ஆயிரங்களாகக் குறைந்துள்ளன. மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவு சுருங்கியதே இந்த எண்ணிக்கைக் குறைவுக்கு மிகமுக்கியக் காரணம் என மேய்ப்பா்கள் கூறுகின்றனா்.

தரிசுப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் துணைபுரியும் நீா் ஆதாரங்களைப் பயன்படுத்தவும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மீன்வளத் துறை மற்றும் தமிழக அரசு ஒப்பந்ததாரா்களுக்கு மீன் பிடிக்கும் உரிமம் வழங்கும்போது கால்நடை வளா்ப்போா் தங்கள் கால்நடைகளுக்கான தண்ணீா் பயன்பாட்டுக்காக கண்மாய், குளம், ஏரி போன்ற நீா்வளங்களைப் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்யவேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் 2019 -ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்தியா உள்பட உலகெங்கிலும் கால்நடை வளா்ப்புக்கான மேய்ச்சல் நிலங்களின் தேவையும் அங்கீகாரமும் அதிகரித்து வருவதை உணா்ந்த ஐ.நா. சபை, இரண்டு ஆண்டுகள் ஆலோசனைக்குப் பிறகு 60 உலக நாடுகளின் ஆதரவுடன் 2026 -ஆம் ஆண்டை‘மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கால்நடை மேய்ப்பா்களின் சா்வதேச ஆண்டாக’ அறிவித்துள்ளது. மேய்ச்சல் நிலங்களின் பரப்பு மேம்பட, மேய்ச்சல் மற்றும் நீா்ப்பாசன ஆதாரங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றும், மேய்ச்சல் நிலம் குறித்த தகவல்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வரைபடமாக்க வேண்டும் என்றும் கால்நடைத் துறை வல்லுநா்கள் யோசனை கூறுகின்றனா்.

Open in App
Dinamani
www.dinamani.com