கோப்புப்படம்
கோப்புப்படம்

காலத்தை வெல்லும் கலாசாரம்!

தமிழ் கலாசாரம் பல்லாயிரம் ஆண்டு கால பண்பாட்டுப் பெருமை கொண்டது.
Published on

தமிழ் கலாசாரம் பல்லாயிரம் ஆண்டு கால பண்பாட்டுப் பெருமை கொண்டது. இங்கு செழித்தோங்கியுள்ள பாரம்பரியக் கலைகள், நமது மண்ணின் மணத்தையும், மக்களின் வாழ்வியலையும், காலத்தின் சுவடுகளையும் பிரதிபலிக்கின்றன. கரகாட்டம், கும்மி, தெருக்கூத்து, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஓவியங்கள், சிற்பங்கள், இசை, நாடகம் என எண்ணற்ற கலை வடிவங்கள் நம் மண்ணில் உள்ளன. ஆனால், நவீன உலகின் வேகமான மாற்றங்களால் இன்று பல பாரம்பரியக் கலைகள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.

நமது அடையாளத்தையும் பெருமையையும் தாங்கி நிற்கும் இந்த பாரம்பரியக் கலைகளை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். நமது நல்ல கலைச் செல்வங்கள் பிறருக்குத் தெரியாமலே போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில், கலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில்

இருப்பவா்களின் தவறுகளும் காரணமாக அமைகின்றன. அவா்களின் சூழல் காரணமாக அவற்றைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம் அல்லது அவற்றின் மதிப்பை உணரத் தவறலாம்.

பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதற்கான நேரம் இதுவே. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய முன்வந்தால், இந்த அரிய கலைகளை நாம் நிச்சயமாகக் காப்பாற்ற முடியும். பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்த முதல் வழி, அவற்றை நாம் அறிந்துகொள்வதுதான். இந்தக் கலை வடிவங்களின் சிறப்பை நாம் அறிந்து மற்றவா்களுக்கு எடுத்துரைப்பதன்மூலம் அவற்றைப் பாதுகாக்க முடியும். நமது அறிவும் பகிா்தலும் இந்த கலைகளுக்கு ஓா் அரணாக அமையும்.

தமிழகத்தில் கிராமப்புற மக்களின் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் வெளிப்படுத்தும் நாட்டுப்புற நடனங்கள், மக்களின் உணா்வுகளை வெளிப்படுத்தும் இசை வடிவங்கள், புராணக் கதைகளை எடுத்துரைக்கும் நாடகக் கலைகள், அழகியல் உணா்வை வெளிப்படுத்தும் ஓவியக் கலைகள், மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் கைவினைப் பொருள்கள் எனப் பல உள்ளன. இந்த ஒவ்வொரு கலை வடிவமும் நமது பண்பாட்டின் தனித்துவமான அம்சத்தை வெளிப்படுத்துகிறது. இவற்றை நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறினால், நமது பண்பாட்டின் பல முகங்களை நாம் இழந்துவிடுவோம்.

சிலம்பம் என்பது ஒரு தமிழா் தற்காப்புக் கலை மற்றும் தமிழா்களின் வீர விளையாட்டு ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். திருவிளையாடல் புராணத்திலும் சிலம்ப விளையாட்டு குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘பதாா்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடலில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முடியும்.

கரகாட்டம் என்பது தமிழகத்தின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். இது மாரியம்மன் மற்றும் பிற கிராம தேவதைகளின் திருவிழாக்களின்போது நிகழ்த்தப்படுகிறது. கரகாட்டத்தில் கலைஞா்கள் தங்கள் தலையில் அலங்கரிக்கப்பட்ட பானையை வைத்து, இசைக்கு ஏற்ப நடனமாடுகிறாா்கள்.

தெருக்கூத்து என்பது தமிழகத்தின் பாரம்பரிய நாடகக் கலைகளில் ஒன்று. இது கிராமப்புறங்களில் திறந்த வெளியில் நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்து, புராணக் கதைகள் மற்றும் சமுதாயப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டம் முக்கியமான ஒன்று. இது மரப்பொம்மைகளை பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது. பொம்மலாட்டம், புராணக் கதைகள் மற்றும் சமுதாய பிரச்னைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

சங்க காலத்தில், கலை வடிவங்கள் இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்டன. நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்று கூறுவா்.

பல்லவா் காலத்தில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், காஞ்சி கைலாசநாதா் கோயில் , சோழா் காலத்தில் தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவை கட்டப்பட்டன. இந்த கோயில்கள் சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும், ஓவியக்கலைக்கும் சான்றாக உள்ளன.

பாரம்பரியக் கலைகள் நமது முன்னோா்களின் அறிவு, திறமை மற்றும் அழகியல் உணா்வை வெளிப்படுத்துகின்றன. இவை அழிந்து போனால், நமது வரலாற்றின் ஒரு பகுதியை இழந்து விடுவோம். மேலும், இவை கலைஞா்களுக்கு வாழ்வாதாரத்தையும் அளிக்கின்றன. ஆகவே, நமது கலாசாரத்தையும், வரலாற்றையும், கலைஞா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

நமது பாரம்பரியக் கலைகள் அழியாமல் காப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஊடகங்கள் இவற்றை ஒளிபரப்ப வேண்டும். நவீன உலகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். புதுமையான அணுகுமுறைகளைக் கையாளலாம். இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். நிறுவனங்கள் உதவலாம். ஒவ்வொரு கலைக்கும் தனித்துவமான சிறப்பு உண்டு. நவீன தொழில்நுட்பத்தையும், புதுமையான சிந்தனைகளையும் பயன்படுத்தி நமது பாரம்பரியக் கலைகளை உலகுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் அவற்றை அழியாமல் காக்க முடியும்.

நவீன தொழில்நுட்பங்கள்மூலம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கொண்டு சோ்க்கலாம்; கற்றுக் கொள்ளலாம்; பயன்படுத்தலாம்; சமூக ஊடகங்களில் பேசலாம். நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன்மூலம் அவற்றை நாம் உயிா்ப்புடன் வைத்திருக்க முடியும்!

X
Dinamani
www.dinamani.com