
அண்மையில் இந்திய குடிமைப் பணித்தேர்வு 2024 -ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளிவந்தன. சுமார் 1056 பணியிடங்களுக்கான தேர்வாக அது நடந்தது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்டது அத்தேர்வு. இறுதி முடிவுகளின்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏறத்தாழ 57 தேர்வர்கள் வெற்றி பெற்றனர். இது சுமார் 5.3 சதவீதம் ஆகும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் சற்றேறக்குறைய 10 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை இருந்து வந்தது. பாடத்திட்டம் மாற்றம், தேர்வு முறையில் மாற்றம் போன்ற புதிய சூழலில் தமிழ்நாட்டின் தேர்ச்சி என்பது 3 சதவீதம் முதல் 4 சதவீதம் சரிந்தது. தற்போது 5.3 சதவீதமாக சற்றே உயர்ந்து மாற்றம் கண்டுள்ளது.
முன்பு இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்ற முதல் 100 தேர்வர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 முதல் 15 தேர்வர்கள் வரை இருப்பார்கள். தற்போது 2 அல்லது 3 தேர்வர்களே இருக்கிறார்கள். தரநிலை பின்னடைவால் 400 - ஆவது இடம்பெற்று வெற்றி பெறுபவருக்குகூட ஐஏஎஸ் பணி வாய்ப்பும், 700 -ஆவது இடம் பெற்று வெற்றி பெறுபவருக்கு ஐபிஎஸ் பணி வாய்ப்பும் தமிழ்நாடு ஒதுக்கீடும் கிடைக்கிறது. இது மகிழ்ச்சியோ, நல்ல மாற்றமோ அல்ல. இது நாம் தரநிலையில் பின்தங்கியுள்ளதை அறிவிக்கும் ஓர் எச்சரிக்கை மணி ஆகும். தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் இன்னும் உயர வேண்டிய சூழலில், தர நிலையிலும் உயர்ந்து வரவேண்டும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏனெனில், 2007 - ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 31-ஆம் இடம் பெற்று ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர் பா. ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாடு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதேபோல 2013 - ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 33 -ஆம் இடம்பெற்று ஐஏஎஸ் பணி வாய்ப்புப்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர் கி. விஜயாவுக்கு தமிழ்நாடு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காரணம், தரநிலையில் அவர்களுக்கு முன்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 முதல் 5 தேர்வர்கள் இருந்தனர் என்பதைக் கவனத்தில் கொண்டால் கடந்த கால சூழலுக்கும் இன்றைய சூழலுக்குமான உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளைவிட 10 முதல் 15 பணியிடங்களைக் கூடுதலாக தமிழ்நாட்டுத் தேர்வர்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எழுதுகிற தகுதியான தேர்வர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும் உதவித்தொகையும் இதற்கு ஒரு காரணம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
அதுமட்டுமல்ல, அத்திட்டம் சில ஆண்டுகளாக கடும் முயற்சி செய்தும் , நேர்முகத் தேர்வுவரை சென்றும், நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டும் கையறு நிலையில் உள்ள தேர்வர்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைத்து மீண்டும் அவர்கள் நம்பிக்கையோடு போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கியும் தந்துள்ளது. அதே வேளையில், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சி என்பது இன்னும் தரம் உயர்த்தப்பட வேண்டும். தேர்வர்களுக்கு புது நம்பிக்கையும் வெற்றியை நோக்கிய வழிகாட்டுதலும் தரும் சிறந்த பயிற்றுநர்களை அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும்.
தமிழக அரசு போதுமான நிதியைப் பயிற்சி தருவதற்காக ஒதுக்கியும் தரமான பயிற்சிக்கான இலக்கில் இத்திட்டம் சற்றே பின்தங்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தமிழக அரசு நடத்தி வருகிற அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வனே செயல்படுகிற ஓர் அமைப்பாகும். சிறந்த பயிற்றுநர்களை அங்கே பயன்படுத்துவதன்மூலம் இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களை மீண்டும் அதிக அளவில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் எதிர்கொள்ளக்கூடிய மற்றொரு முக்கியப் பிரச்னை பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். அது வருவாய்த் துறையில் இருந்து பொருளாதார ரீதியாக நலிவுற்றோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் போன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் அதற்கான சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படுகிற அசெüகரியங்கள் மற்றும் தேவையற்ற தாமதங்கள் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மகாராஷ்டிரத்தில் பூஜா கேத்கர் என்னும் தேர்வர் தேர்வாணையத்தில் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஐஏஎஸ் பணி வாய்ப்பும் பெற்றுள்ளார். அவரது சான்றிதழ் குறித்து ஐயம் எழுந்தது . அதை விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ் குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. பூஜா கேத்கர் சமர்ப்பித்தது போலிச் சான்றிதழ்கள் என்பது நிரூபணமாகி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தேர்வு எழுதவும் தடை பிறப்பிக்கப்பட்டது. குற்றவியல் வழக்கும் அவர் மீது தொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் சான்றிதழ்கள் சரிபார்ப்பில் அதீத கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் சிறிய சிறிய எழுத்து மாற்றங்கள், ஜாதியின் பெயர்களில் மத்திய மற்றும் மாநில பட்டியல்களில் உள்ள எழுத்து மாற்றம் போன்றவற்றில் தேர்வாணையம் திருப்தி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சான்றிதழில் திருத்தம் செய்து பெற்றுத் தருமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்துகிறது.
பொதுவாக, இதுபோன்ற அறிவுறுத்தல்கள் தேர்வர் ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு செல்கிற போது நிகழ்கிறது.தேர்வாணையம் முடிவுகளை வெளியிடுகிற குறுகிய கால வரையறைக்குள் தேர்வர்களால் வருவாய்த் துறையிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற முடிவதில்லை.
இது தொடர்பாக தமிழக அரசும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வருவாய்த்துறை செயலாளர் மூலம் தக்க உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனாலும், நடைமுறைச் சிக்கல்களை காரணம் காட்டி சான்றிதழ்களை வழங்கக்கூடிய இடத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய காலத்துக்குள் சான்றிதழ்களை வழங்குவதில்லை. இதனால், தேர்வின் இறுதி முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தேர்வர்கள் தேர்வுக்கும் படிக்க முடியாமல் சான்றிதழ்களும் பெற முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, அண்மையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள் சிலர் தேர்வாணையம் கோரும் சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களின் நேர்முகத் தேர்வுக்கு முன்னும் , முடிந்த பின்னும் சான்றிதழ் பிரச்னையால் மிகுந்த கவலையோடு தான் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அதிருஷ்டவசமாக சிலர் வெற்றி பெற்றுள்ளனர். சிலருக்கு சான்றிதழ் காரணமாகவே கூட வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடம் உண்டு.
தற்போது வெற்றி பெற்ற தேர்வர் ஒருவரின் சான்றிதழ் பிரச்னையை நாம் எடுத்துக் கொள்ளலாம். அவரது 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தந்தையின் முதல் எழுத்து இல்லாமல் தேர்வரின் பெயர் மட்டும் உள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் அடிப்படையில் தந்தையின் முதல் எழுத்தோடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வாணையம் 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளது போல்தான் இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வேண்டுமென அறிவுறுத்தியது. தேர்வு முடிவு வெளியிடக்கூடிய குறுகிய கால இடைவெளிக்குள் சான்றிதழ் திருத்தத்துக்காக வருவாய்த்துறையை அணுகியபோது இச்சான்றிதழை ரத்து செய்த பின்னர்தான் புதிய சான்றிதழை வழங்க முடியும் என்று கூறி ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தைப் பெற்றது. அதை ரத்து செய்வதற்கு மட்டுமே ஒரு வாரத்துக்கு மேல் வருவாய்த் துறையில் தாமதமாகிறது. இறுதியில் மாவட்ட ஆட்சியர் வரை அணுகி முறையிட்ட பிறகே அச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் புதிய சான்றிதழுக்காக விண்ணப்பித்து மீண்டும் பல்வேறு முயற்சிகளின் மூலம் சான்றிதழ் பெற்று தேர்வாணையத்தில் அத்தேர்வர் சமர்ப்பித்தார். மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், அத்தேர்வர் வெற்றியும் பெற்று விட்டார்.
ஆனால், எல்லாராலும் மாவட்ட ஆட்சியரை அணுக முடியுமா? சான்றிதழ்களை வழங்கக்கூடிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் உள்ளபோது அனைத்துக்கும் மாவட்ட ஆட்சியரை அணுகுவது அவசியமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. எனவே, பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சான்றிதழ்களை வழங்கும் அலுவலர்கள் போட்டித் தேர்வு எழுதுகிற தேர்வர்களுக்கு மட்டுமல்ல, உயர் கல்விக்காகவோ அல்லது அரசு உதவி பெறுவதற்காகவோ மாணவர்கள் அணுகும்போது அவர்களின் நெருக்கடியான நிலையைப் புரிந்து கொண்டு விதிகளுக்குட்பட்டு விரைவான சேவையை இன்முகத்தோடு வழங்க வேண்டும்.
மாணவர்களின் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதம் தேர்வர்களுக்காக அரசு முன்னெடுத்துள்ள ஆக்கபூர்வமான திட்டங்களைப் பயனற்றதாக்கிவிடக் கூடும். ஆகவே, சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது.
கட்டுரையாளர்:
கல்வியாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.