
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் முக்கிய நிகழ்வாகும். திருமணம் செய்துகொள்ள சரியான வயது பெண்ணுக்கு 18 என்றும், ஆணுக்கு 21 என்றும் சட்டம் சொல்கிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு 25 வயதுக்குள் திருமணங்கள் நடைபெற்று விடும். ஆனால், தற்போதெல்லாம் இது 30 வயது முதல் 32 வரையாக அதிகரித்துள்ளது.
திருமணச் சந்தையில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக இருப்பது, ஆண்களைவிட பெண்கள் படிப்பிலும், வருமானத்திலும் உயர்நிலையில் இருப்பது, மகளின் வருமானத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெற்றோர், குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொள்ளத் தயங்கும் பெண்கள், ஆணாதிக்க குடும்ப வன்முறைகள், வழிகாட்டுதலில் குறைவுபட்ட பெரியவர்கள், சமூகத்தில் அடிக்கடி நிகழும் விவாகரத்துகள் போன்றவை பெண்களுக்கு திருமணத்தின் மேலான நாட்டத்தைக் குறைத்து வருகின்றன.
மேலும், பணியில் உள்ள பெண்கள் ஓரளவு வாழ்க்கையை அனுபவித்த பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் மேலும் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய தனிக் குடும்ப வாழ்க்கை முறையில் உதவிக்கு உறவுகள் எதுவும் இல்லாத நிலையில், இவ்வாறானவர்கள் தனக்கு இணக்கமான துணையைத் தேடிப்பிடிக்க திருமண இணையதளங்களில் உலா வருகிறார்கள். ஆனால், அவற்றில் பதிவிடப்படும் வரன்களின் பின்புலத்தின் நம்பகத்தன்மை தற்போதெல்லாம் கேள்விக்குறியாகி வருகின்றன.
பல ஆண்கள் போலியான சுய விவரங்களை இவ்வாறான திருமண இணையதளங்களில் பகிர்ந்து வரன் தேடும் பெண்களிடமிருந்து பணம் பறிக்கும் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. மோசடிக் கும்பல்கள் சில போலியான இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் பெண்களை ஏமாற்றுகின்றன. எனவே, சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது பெண்களுக்கு தற்போது ஒரு சவாலான செயலாக மாறியுள்ளது.
தங்களின் இணையதளத்தில் பதிவு செய்யும் வரன்களைப் பற்றிய முழுமையான விவரத்தை திருமண இணையதளங்கள் வழங்குகின்றன. சரியான துணையைத் தேர்வு செய்வதற்கு இது பெரிய அளவில் உதவியாக உள்ளது. எனினும், ஒரு திருமண இணையதளம் நம்பத் தகுந்ததாக இல்லையென்றால் அங்கு மோசடிக்கான வாய்ப்புகள் பல இருக்கலாம்.
அண்மையில் தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்டிபிசி காவல் நிலையப் பகுதியில் தயாளி உப்பல் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கு மணமகள் தேவை என்னும் விளம்பரத்தை திருமண இணையதளத்தில் பொய்யான சுயவிவரங்களுடன் பதிவு செய்துள்ளார். இதற்காக, கடந்த ஆறு ஆண்டுகளாக இவர் மத்திய அரசின் ராணுவம், தேசியப் புலனாய்வு நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை, மத்தியக் காவல் படை ஆகிய அமைப்புகளின் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார். தன்னை ராணுவ அதிகாரி என்றுகூறி மூன்று பெண்களை அவர் திருமணம் செய்துள்ளார். அந்த மூவரில் ஒருவர்தான் உத்தர பிரதேசம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த சந்தவுலி என்னும் பாதிக்கப்பட்ட பெண். இவர் தங்களது
திருமணத்தைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்களைக் கேட்டபோது, அவரது கணவர் அவற்றைக் காட்டத் தயாராக இல்லை. தவறு எங்கோ நடப்பதை உணர்ந்த அந்தப் பெண், தன் கணவரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை தனது நேரடிப் பார்வையில் விசாரணை செய்த தமிழரான வாரணாசியின் துணை காவல் ஆணையர் டி.சரவணன், தயாளி உப்பல் பெண்களை ஏமாற்றும் ஒரு குற்றவாளி என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த தயாளி உப்பல் மீது சிதைபூர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தற்போது பதிவாகி உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்ட தயாளி
உப்பல் தெலங்கானா, ஆந்திரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், தில்லி, பஞ்சாப், உத்தரகண்ட், மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பெண்களிடமிருந்து சுமார் ரூ.40 லட்சம் வரை பெற்றுள்ளதாக ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
திருமண இணையதளங்களில் அறிமுகமாகும் நபர்கள் மீது பெண்கள் முழுமையான நம்பிக்கை வைக்கக் கூடாது. அதில் பதிவிடப்படும் விவரங்களை களத்தில் இறங்கி ஆய்வு செய்து உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு முடிவெடுப்பது நல்லது.
அரசின் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவும் திருமண இணையதள மோசடிகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த மோசடிகளைத் தடுக்க, திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து நீதிமன்றங்களும் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இணையதளத்தில் தனக்கான துணையைத் தேடும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது முக்கியம்.
முதலில் அவர்கள் இணையதளத்தின் பயனர்கள் வழங்கும், பின்னூட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் தேர்வு செய்யும் திருமண இணையதளம் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க, இணையதளத்தில் அறிமுகமாகும் நபர்களிடம் உடனடியாக நம்பிக்கை வைக்காமல், அவர்களின் பின்னணியைச் சரிபார்த்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மொத்தத்தில் தெரிந்த உறவுகள், நட்புகள் வட்டாரத்தில் வரன்கள் அமைய வாய்ப்புகள் இல்லாத நிலையில் மட்டுமே, திருமண இணைய தளத்தின் உதவியை நாட வேண்டும். ஆயிரம் காலத்துப் பயிர் என்று அழைக்கப்படும் திருமணத்தில் அவசரமும் வேண்டாம்; பின்னர், வாழ்க்கையில் தேவையற்ற அல்லல்களும் வேண்டாம். இதேபோன்று பொய்யான சுயவிவரங்களையும், புகைப்படத்தையும் திருமண இணையதளத்தில் பதிவிடும் பெண்களும் இல்லாமல் இல்லை. எனவே, வாழ்க்கைத் துணையை இணையதளத்தில் தேடும் ஆண்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.