இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தேர்தலை திறம்பட நடத்துவது என்பது மிகப் பெரிய சவாலான ஒன்றாகும்.

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :15 ஏப்ரல் 2026, 11:09 pm

கோ.ஏ. இரமேஷ்

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தேர்தலை திறம்பட நடத்துவது என்பது மிகப் பெரிய சவாலான ஒன்றாகும். மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. பொதுவாக, இரு கட்சி ஆட்சி முறை, பல கட்சி ஆட்சி முறை என இரு வகை உண்டு. அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. அங்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பல கட்சி ஆட்சி முறையில் நன்மைகளும் உண்டு. மக்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்யலாம்; சமூகத்தின் பல தரப்பினரின் கருத்துகள் அரசில் பிரதிபலிக்கலாம்; ஒரே கட்சியின் ஆதிக்கம் குறையும்; அதிகாரம் பகிரப்படும். சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கூட்டணி அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டு, அதனால் பல கட்சிகளின் ஆலோசனையுடன் சமநிலை முடிவுகள் எடுக்கப்படும்.

அதே நேரத்தில், பல கட்சி ஆட்சி முறையில் சில பாதகமான சூழ்நிலைகளும் உள்ளன. நிலையான அரசு இல்லாமல் போகலாம்; கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம்; கூட்டணி உடைந்து அரசு வீழ்ச்சி அடையலாம்; அரசியல் பேரம், கொள்கைப் பற்று உள்ள கட்சி தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்யும் நிலையும் ஏற்படும்.

இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தல்களில் ஒரு தொகுதியில் போட்டியிடும் பல வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுவார். அவர் 50%-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வேட்பாளர்களைவிட ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் அவரே வெற்றியாளர்.

ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் பெற்ற வாக்கு 35%, மற்றொரு வேட்பாளர் பெற்ற வாக்கு 32%, அவரைத் தொடர்ந்து மற்றொரு வேட்பாளர் பெற்ற வாக்குகள் 33% எனில், 35% வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதேநேரத்தில் பிற வாக்காளர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தையும் சேர்த்துக் கணக்கிடும்போது, அவை வெற்றி பெற்றவருக்கு எதிராக வாக்களித்தவர்கள் என்றும் கருத இடம் உண்டு.

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் ஒவ்வொரு கட்சியும் தான் பெற்ற வாக்கு சதவீதங்களுக்கு ஏற்ற வகையில் சட்டப்பேரவையில் இடங்கள் கிடைக்கும். 40 சதவீத வாக்குகள் பெறும் கட்சிகளுக்கு 234 தொகுதிகளில் 40 சதவீத சட்டப்பேரவை இடங்களும், 8 சதவீத வாக்குகள் பெறும் கட்சிகளுக்கு 234 தொகுதிகளில் 8 இடங்களும் கிடைக்கும். இந்த முறை பின்பற்றப்பட்டால் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம், அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பு, சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பு போன்றவை உருவாகும்.

தற்போது அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது. இந்தத் தேர்தல் நடைமுறையைப் பின்பற்றும் நாடுகளில் வேட்பாளர்கள் கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் சின்னங்களுக்கு மட்டுமே வாக்குகள் செலுத்தப்படும். ஒவ்வொரு கட்சியும் அவை பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், அந்தந்தக் கட்சிகளுக்கு அவையில் இடங்கள் ஒதுக்கப்படும். அனைத்துக் கட்சிகளுக்கும் அவை பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

நாட்டில் தற்போது உள்ள தேர்தல் முறையை மாற்றி விட்டு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ வலியுறுத்தினார்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் இப்போதைய ஜனநாயகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் வாய்ப்புகள் கிடைக்கும். சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளிடம் சீட்டுக்காக காத்திருக்கத் தேவையில்லை. கூட்டணிக்காக கொள்கையை சமரசம் செய்ய வேண்டியதில்லை.

சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான், சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்ற பிம்பத்தை, விகிதாசார பிரதிநித்துவ முறை மாற்றும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறலாம். கூட்டணி பேரங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.

அமெரிக்கா போன்ற ஒரே மொழி, இரண்டு அல்லது மூன்று இனங்கள் கொண்ட நாடுகளில்கூட, விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், பல மொழிகள், மதங்கள், கலாசார-பழக்கவழக்கங்கள் கொண்ட நம் நாட்டில் விகிதாசார பிரநிதித்துவ தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் மாற்றத்துக்கு வித்திடும்.

அறிவார்ந்த தளத்திலும், அரசியல் தளத்திலும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்த விவாதங்கள் எழ வேண்டும். தேர்தல் ஆணையமும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.