இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்

கிராமத்துத் தேவைகள் குறித்த முன்னுரிமைகளைவிட தரவுகள் கூறும் புள்ளிவிவரங்களே முன்னுரிமை பெறுகின்றன.

News image

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள் - சித்திரிப்பு

Updated On :15 வினாடிகள் முன்பு

ராம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்றழைக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் கிராம சபைகள் முக்கியப் பங்காற்றின. தங்களின் தேவைக்கேற்ற வேலைகளை, சொத்துகள் உருவாக்கத்தை நிறைவேற்றும் வாய்ப்பையும், அதிகாரத்தையும் அந்தத் திட்டம் கிராம சபை வாயிலாக மக்களுக்கு வழங்கியது.

இந்திய மக்கள் பட்டினியில் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதே மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு 100 நாள்கள் வேலையும் ஊதியமும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வேலை கிடைக்காத காலத்தில் மக்களுக்கு வேலை கொடுத்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதுடன் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கேற்ற வேலைகளைத்தான் வழங்க வேண்டும் என்கிறது உணவு உத்தரவாத சட்டம். இந்தத் திட்டம் உணவை உத்தரவாதப்படுத்தும் சட்டப் பாதுகாப்புள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் பெயர் 'விபி ஜி ராம் ஜி' என மாற்றப்பட்டது. மாநில அரசின் பங்களிப்பு 40% என உயர்த்தப்பட்டது. விதைப்பு மற்றும் அறுவடைக் காலத்தில் கட்டாயமாக வேலைகளை நிறுத்தி வைப்பதற்கு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

ஒரு குக்கிராமத்துக்கான தேவைகளை, அந்தக் கிராமம் குறித்து ஏதும் அறிந்திராத, சென்னையில், தில்லியில் உள்ள அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். தங்களுக்கு எந்த மாதிரியான தேவைகள் உள்ளன? இயற்கை வள ஆதாரங்களின் நிலை என்ன என்பதெல்லாம் அந்தந்த உள்ளூர் மக்களுக்கே நன்கு தெரியுமென்பதால் கிராம சபையில் முன்னுரிமை கொண்ட வேலைகளை மக்கள் முடிவு செய்வர். இந்தத் திட்டமானது உள்ளூரின் முதன்மைத் தேவைகளை உள்ளூர் மக்களே முடிவு செய்து, அதற்கான திட்டங்களை உருவாக்கிச் செய்யும் திட்டமாகும்.

இந்நிலை இப்போது மாற்றப்படுகிறது. பல்லாண்டுகளாக கிராமங்கள் குறித்துத் திரட்டப்பட்ட பல்வகையான புள்ளிவிவரங்கள் அதிகாரிகளிடம் உள்ளது. யுக்தாரா திட்ட இணைய தளம், 'பிரதமரின் கதி சக்தி' உள்கட்டமைப்பு முறைகள் பதிவேற்றப்பட்டுள்ள தளங்கள், புவிசார் விவரத் தளங்கள், செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட படங்கள், நீர்வள விவரத் தொகுப்புகள் உள்ளிட்டவை பல்வகைகளில் சேகரிக்கப்பட்டு கணினியில் தொகுக்கப்பட்டுள்ளன.

கிராம அளவில் ஒவ்வொரு விவசாயியின் விளைநிலத்தின் விவரங்களும், பிற விவரங்களும் தேசிய அளவில் உள்ள விக்சித் பாரத் தேசிய ஊரக உள்கட்டமைப்பு தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்புகளைக் கொண்டு அறிவியல்பூர்வமான திட்டமிடலை விக்சித் பாரத் தேசிய ஊரக உள்கட்டமைப்பு தொகுதி செய்யப்பட உள்ளது. மேற்கண்ட தொழில்நுட்பங்களை கிராம வளர்ச்சித் திட்டமிடலுக்காக பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், இந்தத் திட்டமிடலில் கிராம மக்கள் கையிலிருக்கும் அதிகாரம் முழுவதும் தொழில்நுட்ப செயலிக்கு மாற்றப்படுகிறதா என்பதே கேள்வி.

வழக்கமாக, கிராம சபையானது, தங்களது மக்களுக்கான அத்தியாவசியத் தேவை எது?, கிராமத்தவர்களில் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள் எவர், எத்தகைய தேவை உடனடியாகக் கவனிப்பட வேண்டும்? என்பதிலிருந்து ஆலோசிக்கத் தொடங்கும். ஆனால் வெளியிடப்பட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிகளின்படி, புள்ளிவிவரங்களால் நிரம்பி வழியும் தரவுத் தளங்களும் அல்காரிதங்களும் இனி முடிவு செய்யும். அல்காரிதங்கள் இந்திய அரசின் வளர்ச்சிக் கனவுக்கான திட்டங்களின் அடிப்படையிலேயே கிராமத்துக்கான திட்டங்கள் முடிவு செய்யுமே தவிர கிராமத்தின் முன்னுரிமைக்கு ஏற்ப அல்ல.

கிராமங்களில் செய்யப்பட வேண்டிய வேலையை முடிவு செய்து தில்லியில் உள்ள அலுவலகம் பரிந்துரைகளாக (உண்மையில் இறுதி முடிவுகள்) அனுப்பும், அதை கிராம சபை மதிப்பீடு செய்து மெüனமாக ஒப்புதல் அளிக்கும் இடத்துக்கு நகர்த்தப்படுகிறது. கிராம சபையிடமிருந்த திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம், அல்காரிதங்களுக்கும், கணினிகளின் மென்பொருள்களுக்கும், அவற்றை வடிவமைத்தவர்களுக்கும் கைமாறுகின்றன. கிராமத்துத் தேவைகள் குறித்த முன்னுரிமைகளைவிட தரவுகள் கூறும் புள்ளிவிவரங்களே முன்னுரிமை பெறுகின்றன.

கிராமத்தில் உள்ளவர்களில் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள் எவர், எத்தகைய தேவைகள் உடனடியாகக் கவனிப்பட வேண்டும் போன்ற கேள்விகளில் கிராம சபை ஆலோசனைகள் தொடங்கும். மக்களின் உள்ளார்ந்த தேவைகளையொட்டி முடிவெடுக்கும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் கண்கள் இல்லாத அல்காரிதங்கள் முதன்மை இடத்துக்கு நகர்த்தப்படுகிறது. எப்படி கட்டமைப்பட வேண்டும், எந்தெந்தத் தரவுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்? என்பதையெல்லாம் மென் பொறியாளர்கள் முடிவு செய்து வைத்துள்ளபடி அல்காரிதங்கள் இயங்கும்.

ஜனநாயகம் அளிப்பதை அல்காரிதங்களால் வழங்க முடியாது எனக் கூறுவதை தொழில்நுட்பங்களின் தோல்வியாகக் கொள்ளக் கூடாது. இது தொழில்நுட்பத்தின் தவறல்ல. ஜனநாயகமும், அல்காரிதங்களும் எவற்றையெல்லாம் கொடுக்க முடியும், கொடுக்க இயலாது என்ற எல்லையையே காட்டுகின்றன. சமூகங்கள் பல்வேறு காரணிகளின் மதிப்புகளை கலந்தாய்வு செய்யும். ஆனால், அல்காரிதங்கள், காரணிகளில் அதிக பயன்தரக் கூடியதையே முடிவு செய்யும். இவ்விரண்டும் வெவ்வேறான செயல்களாகும் என்பதை உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.