ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

வளர்ச்சியை நோக்கிய நிதிநிலை அறிக்கை

ஒரு நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறார்கள் என்பதை மட்டுமே பார்க்காமல், அந்தத் துறையின் வளர்ச்சியும், அந்தத் துறையின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையும்தான் மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

முதல்வர் விஜய்யுடன் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன்

Published On :9 வினாடிகள் முன்பு

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறார்கள் என்பதை மட்டுமே பார்க்காமல், அந்தத் துறையின் வளர்ச்சியும், அந்தத் துறையின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையும்தான் மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

"தாய்மாமன் தங்கமோதிரம்' திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அன்பளிப்பாக ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையில் ரூ. 560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் திட்டத்துக்கு ரூ. 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அரசின் சார்பாக வழங்கப்படுவதற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

பெரியார் ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளான செப். 17 அன்று இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர். இந்தத் திட்டத்துக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சமூக நலன் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ. 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சுய உதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் முதலீடு மானியம் வழங்கப்படும். இதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் மூலம், முதன்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரு.25 ஆயிரம் மானியம், ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுவது பாராட்டத்தக்கது. அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நிகழாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் "வெற்றி 150' அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 125 நாள்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்க உறுதி செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. மொத்தம் 150 நாள்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்ய ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.139 கோடியில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டமும் 3,734 அரசுப் பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டமும், பள்ளிப்பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், போதையில்லா தமிழ்நாடு உருவாக்குவதற்கு ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், அரசு மற்றும் அரசின் உதவிபெறும் பள்ளிகளில் நிகழாண்டு 11-ஆம் வகுப்பு "ஜென் ஸீ' தலைமுறை மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டமும், உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

அதைப் போலவே, 10 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 57 கோடி ஒதுக்கீடு செய்ததும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஒரு மாற்றத்துக்கான பாதையாகும்.

2025-26 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் ஜிடிபி ரூ. 35,67,818 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் வருவாய் வரவுகள், வருவாய் செலவினங்கள், மூலதனச் செலவுகள், நிதிப் பற்றாக்குறை இவற்றைச் சரியாக நிர்வகிப்பதும், ஒரு தெளிவான பார்வையுமே அரசை நல்வழிப்படுத்தும். இவற்றை வெறும் வரவு- செலவு கணக்குடன் நாம் ஒப்பிடக் கூடாது. மாநிலத்தின் வளர்ச்சி, அரசின் வருவாய், நலத் திட்டங்கள், முதலீடுகள், கடன், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு பெரிய பொருளாதாரப் பாடம்.

மாநில உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சி, வேளாண்மை உற்பத்தி, சேவைத் துறை வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, அரசின் வருவாய், அரசின் கடன், நிதிப் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு, முதலீடு- இவற்றை உள்ளடக்கியதுதான் நிதிநிலை அறிக்கை. மாநிலத்தின் வருவாய் ஆதாரங்கள் என்று கருதப்படுவது ஜி.எஸ்.டி, மதுபான வருவாய், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம், மோட்டார் வாகன வரி, பெட்ரோலியப் பொருள்கள் மீதான மாநில வரிகள் போன்றவையாகும்.

வரி அல்லாத வருவாயாக கட்டணங்கள், அரசின் நிறுவனங்களிடம் இருந்து வரும் வருவாய், கனிம வளங்கள் போன்றவையாகும். 2025-26-இல் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகள் ரூ. 3,31,569 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் சொந்த வருவாய் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், ஒரு முக்கியமான சிக்கல் வருவாய்ப் பற்றாக்குறையே ஆகும். ஆகவே, அன்றாட அரசு செலவுகளை சமாளிக்கத் தேவையான அளவுக்கு வருவாய் போதவில்லை. இவற்றை நாம் ஆழ்ந்து பார்க்கையில், நிதிப் பற்றாக்குறை வேறு, வருவாய்ப் பற்றாக்குறை வேறு என்று புரிந்து கொள்ள வேண்டும். அரசின்

அன்றாட வருவாய் மற்றும் அன்றாடச் செலவுகளுக்கு இடையிலான இடைவெளி வருவாய்ப் பற்றாக்குறையே ஆகும். அரசின் மொத்த செலவு மற்றும் கடன் அல்லாத மொத்த வருவாய்க்கு இடையிலான இடைவெளி நிதிப் பற்றாக்குறையே ஆகும். அரசு கடன் வாங்குவது தவறு என்று கூற முடியாது. எதற்காகக் கடன் வாங்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். உதாரணமாக, சாலை, பாலம், தொழில் பூங்கா, துறைமுகம், மின்சாரம், குடிநீர், எதிர்கால பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கும் முதலீடு- இதற்காக கடன் வாங்கினால் அது வளர்ச்சிக்கு உதவலாம். ஆனால், கடன் வாங்கிய பணம் தொடர்ந்து அன்றாட செலவுகளுக்கே சென்றால், எதிர்காலத் தலைமுறைக்கு நிதிச்சுமையை அதிகரிக்கலாம். மூலதனச் செலவு அதிகரிப்பது ஒரு நல்ல மாற்றத்துக்கு வித்திடும். ஏனெனில், இன்றைய செலவு, நாளை உற்பத்தி, நாளை மறுநாள் வருவாய் என்ற சுழற்சியை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இருக்கும் மிகப் பெரிய சமநிலை சவால்கள் என்னவென்றால், பெண்கள், மாணவர்கள், முதியோர், விவசாயிகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றுவது ஆகும். மறுபுறம் பார்க்கையில், தொழில், சாலை, மின்சாரம், நீர்வளம், வங்கி, சுகாதாரம், நகர்ப்புற கட்டமைப்பு போன்ற துறைகளில் முதலீடு செய்வதும் அவசியமான ஒன்றாகும்.

நலத் திட்டங்கள் மக்களின் தற்போதைய வாழ்க்கையைப் பாதுகாக்கிறது. மூலதன முதலீடு மக்களின் எதிர்கால வருமானத்தை உருவாக்குகிறது. ஒரு நல்ல நிதிநிலை அறிக்கை என்பது இந்த இரண்டுக்கும் இடையே சமநிலையை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மிகப் பெரிய பொருளாதார பலன்கள், தொழில்மயமாக்கல், சேவைத் துறை, துறைமுகங்கள், மனிதவளம், நகரமயமாக்கல்- இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சவால்கள் என்றால், கடன்கள் அதிகரித்தால் வட்டி செலவு அதிகரிக்கும். ஆகவே, அரசின் அன்றாடச் செலவுகளை சொந்த வருவாயில் சமாளிக்கும் திறன் மேம்பட வேண்டும். ஜிடிபி வளர்வது மட்டுமே போதாது. அந்த வளர்ச்சி அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

சென்னை மற்றும் சில தொழில் மையங்களைக் கடந்து தென்மாவட்டங்கள், டெல்டா, மேற்கு மாவட்டங்கள் போன்ற பகுதிகளிலும் முதலீடுகள் பரவ வேண்டும்.

தமிழகத்தின் மொத்த பொருளாதாரம் வளர்வதுடன், குடும்பங்களின் உண்மையான வருமானமும் உயர வேண்டும். வளர்ந்துவரும் பொருளாதாரம், அதே நேரத்தில் அதிகமான நலத் திட்டம் மற்றும் அன்றாடச் செலவுகளால் அழுத்தம் காணும் அரசின் நிதிநிலை- இதைச் சமாளிக்க வருவாய்ப் பெருக்கமும், மூலதன முதலீடும், பற்றாக்குறை கட்டுப்பாடும் அவசியம். 2025-26 தமிழக நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பது, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது, மூலதனச் செலவுகளை அதிகரிப்பது ஆகிய மூன்று திசைகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.