சேவை உரிமை சட்டம், நீர்வளத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. கல்விக்கு நிதி குறைப்பு, வேலைவாய்ப்பு அறிவிப்பு இல்லாமை ஏமாற்றம் அளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்தது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதில், பெண்கள், இளைஞா்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்றது.
இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், சேவை உரிமை சட்டம், நீர்வளத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. கல்விக்கு நிதி குறைப்பு, வேலைவாய்ப்பு அறிவிப்பு இல்லாமை ஏமாற்றம் அளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு தாக்கல் செய்திருக்கும் அதன் முதல் நிதிநிலை அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் நகரம், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது அந்த சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்திருப்பதன் மூலம் எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் திட்டம், முதியோர் நலனைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் நூலகம், தியான மையம், உள்ளரங்க விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும், அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுத்திறன் நகரம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களாகும்.
வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக பாமக வலியுறுத்தி வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பாசனத் திட்டங்களை செயல்படுத்தும்படி வலியுறுத்தினேன். அதற்கு ஓரளவு பயன் கிடைத்திருக்கிறது. காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும், தென்பெண்ணையாறு மற்றும் பாலாறு இணைப்புத் திட்டம், தென்பெண்ணையாறு மற்றும் செய்யாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி பாசன மாவட்டங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி மற்றும் கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
அதே நேரத்தில் தருமபுரி மற்றும் காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் & சோழர் பாசனத் திட்டம், காவிரி மற்றும் சரபங்கா மற்றும் திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த குறைந்தது 15,000 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு வெறும் ரூ.150 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதாது. பாசனத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு குறைந்தது ரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தவெக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.2500, மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இலவச பயணம், மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுப்பு உள்ளிட்ட சுமார் 400 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. ஆனால், அவற்றில் 40 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் குறைந்தது 6 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அது குறித்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை ஆகும். ஆனால், அதற்கான அறிவிப்புகளும் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு ரூ.44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு தாக்கல் செய்த நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இது ரூ.48,534 கோடியாகவும், கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.46,767 கோடியாகவும் இருந்தது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை விட ரூ.4007 கோடி நிதி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை நிதி ஒதுக்கீடு குறைப்பாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக பள்ளிக் கல்வித்துறை வேகமாக சீரழிந்து வருவதையே இந்த நிதிக்குறைப்பு காட்டுகிறது.
பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 85% முதல் 90% நிதி ஊதியத்திற்காக மட்டும் தான் செலவு செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கக் கூடும் என்பதையே காட்டுகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும். அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயங்கும் நிலையை உருவாக்கும்.
அதேபோல், தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான நிதியை இந்த அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை மற்றும் அரியலூர் இடையே ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப் படும் என்று கடந்த 2024 ஆம் ஆண்டில் திமுக அரசில் அறிவிக்கப்பட்டது. மின்துறையை தனியார்மயமாக்கும் இந்த திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அத்திட்டம் தனியார் முதலீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 10.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696 கோடியிலிருந்து 55,775 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மூலதன செலவுளுக்கான ஒதுக்கீடு சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பலவீனமான நிதி மேலாண்மையையே இது வெளிப்படுத்துகிறது.
அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Summary
The first Budget presented by the newly elected TVK government in Tamil Nadu contains several welcome announcements, including the introduction of the Right to Public Services Act, irrigation projects, an Artificial Intelligence City, and recreational centers for senior citizens.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

பட்ஜெட் 2026: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள் என்னென்ன?

நிதிப் பற்றாக்குறையை அரசு கையாள்வது நிதிநிலை அறிக்கையில் தெரியும்

வரும் பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்..நிதிஅமைச்சர் முழு உரை| CM Vijay | TVK | TN Budget 2026- 2027




