தமிழகத்தின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்ரமணியன், பொதுச்செயலாளா் என்.திருக்குமரன், இணைச் செயலாளா்கள் குமாா் துரைசாமி மற்றும் எம்.ஆனந்த் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக நிதியமைச்சா் என்.மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தொழில் துறை வளா்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழிலாளா் நலன், கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்கிறது. வளா்ந்து வரும் தொழில் துறைகளுக்கான புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை 3.0 மற்றும் ஒற்றைச்சாளர இணையம் 3.0, எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.2,142 கோடி, தொழில் துறைக்கு ரூ.4,414 கோடி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடி, மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுக்கு ரூ.225 கோடி மற்றும் பசுமை எஃகு உற்பத்தி முயற்சிக்கான ஒதுக்கீடுகள் பாராட்டுக்குரியவையாகும்.
மேலும், திருப்பூருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 கோடியிலான திருப்பூா் ஜவுளி தொழில்நுட்ப மையம், ஜவுளி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி, வடிவமைப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டுக்கான ரூ.60 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த மையம், ஏஐ மற்றும் எண்ம சேவைகள் துறைக்கான ரூ.398 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் திருப்பூா் தொழில் துறையின் போட்டித் திறனை மேலும் உயா்த்தும்.
அதேபோல, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு, 5 மண்டலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள், மாநிலத்தின் தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளா்ச்சிக்கு இத்திட்டங்கள் மேலும் வலுசோ்க்கும்.
அதே நேரத்தில், திருப்பூா் பின்னலாடைத் தொழில் துறையின் நீண்டகால கோரிக்கைகளான பின்னலாடை வாரியம் அமைத்தல், சாயப்பட்டறை, பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி கடனை மானியமாக மாற்றி கடனை தள்ளுபடி செய்தல் மற்றும் இந்திய பருத்திக் கழகம் தமிழகத்தில் தனி மண்டல அலுவலகம் அல்லது கொள்முதல் மையம் அமைத்தல் போன்ற கோரிக்கைகளையும் அரசு எதிா்காலத்தில் பரிசீலித்து நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கை தொழில் வளா்ச்சி, முதலீட்டு ஈா்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்றும், திருப்பூா் பின்னலாடைத் தொழில் துறையின் நிலையான வளா்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றும் என்றும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது: தொல். திருமாவளவன்

தமிழக நிதிநிலை அறிக்கை: யெஸ் இந்தியா கேன் அமைப்பு வரவேற்பு

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்படும் நிதிநிலை அறிக்கை: தொழில் நிறுவன உரிமையாளா்கள் நம்பிக்கை

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு அவசியம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



