கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மன நலனுக்கும் மருந்தாகும் நாவடக்கம்

மனிதர்களின் உடல் உறுப்புகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், கூர்மையானதுமான உறுப்பு எதுவென்றால், அது நாக்குதான்.

மாதிரிப் படம்

Published On :5 வினாடிகள் முன்பு

மனிதர்களின் உடல் உறுப்புகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், கூர்மையானதுமான உறுப்பு எதுவென்றால், அது நாக்குதான். நாவால் நாம் சிறந்த உணவுகளை ரசித்து ருசித்துச் சாப்பிட முடியும். நாவைக் கொண்டுதான் நல்வார்த்தைகளைப் பேச முடியும். அதே நாக்கைக் கொண்டுதான் மற்றவர்களின் மனங்களைப் பதம் பார்க்கவும் முடியும்.

ஒருவருக்கு வாய்த்துள்ள செல்வங்களிலேயே மிகச் சிறந்த செல்வம் எதுவென்றால் ஆரோக்கியம் மட்டுமே. மகத்தான செல்வமான ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.

அனைத்துவித ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும் மூல காரணம், நாம் உண்ணும் உணவுதான். அளவுக்கு மீறி உணவு உண்பதால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் அழையா விருந்தாளிகளாக நம்மை ஆட்கொள்ளும். அதைத்தான் திருவள்ளுவரும்,

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுஉய்க்கு மாறு

என்கிறார். ஏற்கெனவே நாம் சாப்பிட்ட உணவு செரித்துவிட்டதை உறுதி செய்துவிட்டு, தகுந்த அளவு உணவை உட்கொள்ள வேண்டும். அதுவே மனிதன் தனது உடலை நெடுங்காலம் பாதுகாத்து வாழும் வழியாகும் என்கிறார் வள்ளுவர்.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் சுவைப்பதில் மிகுந்த விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் தெருவுக்குத் தெரு ஏராளமான உணவகங்கள் பெருகிவிட்டன. கையில் காசு இருந்தால் மட்டும் போதும், வாய்க்கு ருசியாக சாப்பிட்டுவிட்டு வர முடியும். போதாக்குறைக்கு நள்ளிரவைத் தாண்டியும் தூண்டில்போட்டு இழுக்கும் பிரியாணி கடைகள் நகரங்களில் புற்றீசல்போல முளைத்துவிட்டன.

வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் வெளியே செல்பவர்கள், உணவகங்களைத் தேடிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். விதவிதமாக மணக்கும் உணவுகளில் அதீத ருசிக்காக உப்பு, காரம், புளிப்பு, மசாலா, நிறமூட்டிகள் போன்றவை கூடுதலாகவே சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரணமாக நாம் வீட்டில் சமைத்துண்ணும் உணவுக்கும், உணவகங்களில் சாப்பிடும் உணவுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

அதனால், தேவையற்ற கலோரிகளை உடலுக்குள் தள்ளுகிறோம். அதிகப்படியான கலோரிகள் உடலில் சேர சேர, உடல் பெருத்துப் போகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் உடல் எடையைக் குறைக்க என்ன முயற்சி செய்தாலும் முடியாமல் போகிறது. உடல் பருமனே இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல வகையான நோய்களுக்கும் மூல காரணமாகிறது.

நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவர்கள் நாவடக்கம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். நாக்கை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் கட்டுப்பாடின்றி உண்பவரின் உடல், நோய்களின் கூடாரமாக மாறிப் போவது உண்மை.

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்

நோயளவு இன்றிப் படும்

என்ற குறளில், தன் வயிற்றுப் பசியின் அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்பவனின் உடலில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவப் பேராசான்.

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 3. 80 கோடி குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

நாவைக் கட்டுப்படுத்துவதை பெரியவர்கள் கற்றுக் கொள்வதுடன், தம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதனால் மட்டுமே ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததிகளை உருவாக்க முடியும். சிறு வயது முதலே குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக, பெற்றோரும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதைக் கைவிடவேண்டும்.

இன்றைய எண்ம உலகில், சமூக ஊடகங்களின் தாக்கம் பெருமளவில் உள்ளது. யூடியூபர்கள், இன்ப்ளூயன்சர்கள், அரசியல்வாதிகள், பிரபலமானவர்கள் என்று யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடிகிறது. நாவடக்கம் இல்லாமல் வீசப்படும் வார்த்தைகள், அவர்களையே திருப்பித் தாக்குவதையும் பார்க்கிறோம்.

"யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'

என்று வள்ளுவர் சொல்லியிருக்கும் குறளில் அடங்கியிருக்கும் உயர்ந்த கருத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து கவனமாகப் பேச வேண்டும். இல்லாவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு, அது நீங்காத வடுவாக அவர்கள் வாழும் காலம்வரை நிலைத்து விடும்.

"தூயவாய் சொல்லாடல் வன்மை' என்ற வரியை அறநெறிச்சாரம் என்னும் நூலில் வரும் பாடல் ஒன்றில் முனைப்பாடியார் என்ற புலவர் குறிப்பிடுகிறார். குற்றம் மற்றும் தீமை தராமல், என்றும் நன்மை பயக்கும் தூய சொற்களை மட்டுமே பேசும் வலிமை வேண்டும் என்பதே அந்தப் பாடலின் பொருள்.

நமது சொற்கள் பிறர் மனத்தைக் காயப்படுத்துவதுபோல் இருக்கக் கூடாது. இதை உயர் பதவியிலிருப்போர் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பேசும் சொற்களே உங்கள் குணத்தை வெளிப்படுத்திவிடும் என்பதால் சொற்குற்றத்திலிருந்து காத்துக்கொள்வதே சிறப்பு.

ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் நாம் பேசும் வார்த்தைகள் அவரது நெஞ்சில் ஈட்டிபோல் பாய்ந்து ஆறாத ரணத்தை ஏற்படுத்தி விடும்.எனவே, நம்முடனே இருக்கும் நாக்கை என்றும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது எல்லோராலும் முடியக்

கூடிய செயல்தான். தேவையில்லாத சொற்களைப் பேசாமல் இருப்பது நல்லது. சொல்லாத சொல்லுக்கு மதிப்பு அதிகம். நாவடக்கம் என்பது நம் உடல் நலனுக்கு மட்டுமல்ல, மன நலனுக்கும் மிகவும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.