அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

காதில் விழுகிறதா?

மக்கள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

News image

கர்நாடகத்தில் வாடிக்கையாளார் ஆர்டர் செய்த உணவில் வழங்கப்பட்ட கெட்டுப்போன இறைச்சி - ANI

Updated On :19 ஆகஸ்ட் 2026, 4:55 am IST

நாடு முழுவதும் விற்பனையாகும் பாக்கெட் உணவுகளில் இடம்பெற்றுள்ள உப்பு, சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து குறித்த எச்சரிக்கை வில்லைகளை (லேபிள்) ஒட்ட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் கடந்த ஆக. 13-இல் விசாரணைக்கு வந்தபோது, 'மக்கள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா' என மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

'வர்த்தகம் பாதிக்கும் என்பதால் எச்சரிக்கை வில்லை ஒட்டுவதை வர்த்தகர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். அதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் மீது உள்ள அழுத்தம் தெரிகிறது. வர்த்தகர்களின் நலன்களைவிட மக்களின் உடல் நலனே முக்கியம். இது தொடர்பாக அரசு தானாகவே முடிவு எடுக்கவில்லை எனில் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம் முழுவதுமே கடந்த சில பத்தாண்டுகளாக பாக்கெட்டுகளில் சந்தைப்படுத்தப்படும் உணவுப் பொருள்கள், நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. ஆனால், இவற்றில் சுவைக்காக அதிகமான சர்க்கரை, செயற்கை நிறமூட்டிகள், சோடியம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. சிறிது காலம் கெடாமல் இருப்பதற்காகவும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள், நார்ச் சத்து போன்றவை இருப்பது இல்லை. இதை ஒரு முறை சாப்பிடும் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும்கூட இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

அதிகமான சர்க்கரை, ரசாயனங்கள் உடலில் பல உபாதைகளைக் காலப்போக்கில் ஏற்படுத்துகின்றன. அதிகரித்த உடல் எடை (பருமன்), அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயப் பிரச்னைகள், சில வகையான புற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட 26 உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடந்த ஆக. 8-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். கையேந்தி உணவகங்களில்தான் சுகாதாரம் இல்லாமல், ஓரளவு தரமற்ற பொருள்களைக் கொண்டு உணவு தயாரிப்பார்கள் என்ற பொதுவான (தவறான) கருத்துக்கு மாறாக, ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் சுகாதாரமற்ற சமையல் அறை, மோசமான நிலையில் குளிர்சாதனப் பெட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த உணவகங்களில் இருந்து 500 கிலோவுக்கும் அதிகமான ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், 200 கிலோவுக்கும் அதிகமான அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இறைச்சி வகைகளை சில மாதங்கள்வரைகூட குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சமைத்துக் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே நிலவுகிறது.

இளைஞர்கள் படிப்புக்காக, வேலைக்காக வெளியூர்களில் தங்குவது, நுகர்வுக் கலாசாரம் போன்றவை காரணமாக வீடுகளில் சமைத்துச் சாப்பிடுவது மெல்ல குறைந்து உணவகங்களில் சாப்பிடுவது, உணவகங்களில் இருந்து வீட்டுக்கே உணவை வரவழைத்துச் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் வாடிக்கையாளரின் நலனில் அக்கறை இல்லாமல், குறைந்த முதலீடு - அதிக லாபம் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தரம் குறைந்த பொருள்கள், அழுகிய காய்கறிகள் ஆகியவற்றைக் கொண்டு சமைத்து அளிப்பது உடல் நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொடர்ச்சியாக, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பொருள்களைச் சாப்பிடுவோரும் உணவகங்களில் சாப்பிடுவோரும் 30-40 வயதுக்குள்ளாகவே நோயாளிகளாகி விடுவர். இதைத்தான் அண்மைக்காலமாக நாம் பார்த்து வருகிறோம்.

எந்தத் துறையில் இருந்தாலும் தனது நேர்மையான அதிரடிச் செயல்பாடுகளுக்காக அறியப்பட்ட மகாராஷ்டிர ஐஏஎஸ் அதிகாரி துகாராம் முண்டே தன் 20 ஆண்டு பணிக் காலத்தில் 25 முறை பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்.

அவரை உணவுப் பாதுகாப்பு ஆணையர் பதவியில் கடந்த மே 25-இல் அரசு அமர்த்தியது. அவர் கடந்த இரண்டு மாதங்களில் மாநிலம் முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட உணவகங்கள், நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.49 கோடி மதிப்புள்ள கலப்பட உணவுப் பொருள்கள், 1.6 லட்சம் லிட்டர் பால் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்துள்ளார்.

துகாராம் முண்டே போன்ற நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு சோதனை நடத்துவது ஓரிரு நாள்களுக்கு வர்த்தகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், பொதுமக்களின் விழிப்புணர்வு, வர்த்தகர்களின் மனமாற்றம், தொடர்ந்த கண்காணிப்பு, தண்டனை கடுமையாக்கப்படுவது ஆகியவைதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

அதிக அளவு உப்பு, சர்க்கரை, கொழுப்பு உள்ள 'ஜங்க் ஃபுட்' என்றழைக்கப்படும் நொறுக்குத் தீனிகள், எண்ணெய்யில் பொறித்த பதார்த்தங்களை விற்பது, விநியோகிப்பது, விளம்பரப்படுத்துவது ஆகியவற்றை குறைந்தபட்சம் பள்ளிக்கூடங்களுக்கு அருகிலாவது தடை செய்ய வேண்டும். 30 கிராமுக்கு அதிகமாக சர்க்கரை கலந்த எந்த உணவுப் பொருளையும் குழந்தைகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும். வருங்கால சந்ததியினரின் உடல் நலன் கருதி பூனைக்கு மணி கட்டியாக வேண்டும்!

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

திருக்குறள் (எண் 429) அதிகாரம்: அறிவு உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.