இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

தமிழ்த்தாய் வாழ்த்து: மாநில உரிமை!

ஒரு மொழியை அழித்துவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும் என்று வரலாறு கூறுகிறது. அதற்கு நாம் இடம் தரக் கூடாது. தாய்மொழியை வாழ்த்துவோம்.

கோப்புப் படம்

Published On :

"ஒரு குழந்தையால் தனது தாய்மொழியின் மூலமே இந்தியாவைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது அவசியம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். மும்பையில் 6-ஆவது அனைத்திந்திய அலுவல் மொழி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

இந்திய மொழிகளை நிர்வாகம் மற்றும் அறிவியலின் மொழிகளாக ஆக்குவதற்கே மத்திய அரசு விரும்புகிறது. கல்வியின் மூலம் அனைத்து மொழிகளையும் செழுமைப்படுத்துவதே அரசின் இலக்காகும் என்று பேசியுள்ளார்.

அண்மையில் தில்லியில் நடைபெற்ற "பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு வந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது, ரஷிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை அவருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இத்தகைய அறநூலைப் பெற்ற செம்மொழியே தமிழாகும். தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளிலும், இலக்கிய நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம்.

அண்மைக் காலமாக இந்த முறை மாற்றப்பட்டு வருகிறது. முதலிடத்தில் இருந்த தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இந்த முறை மாற்றம் ஏன் என்று கேட்டால் மத்திய அரசைக் காரணம் காட்டுகின்றனர். இதை அரசியல்வாதிகளும், தமிழ் ஆர்வலர்களும் அவமதிப்பாக நினைக்கின்றனர்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கலந்து கொண்டார். இந்த அரசு விழாவிலும் முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

தொடர்ந்து, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலும் இந்த நிலையே நீடித்தது.இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருக்குக் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். இத்தகைய செயல்பாடுகள் தமிழ்மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் இழைக்கப்படும் பெரும் அவமானமாகும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, கடந்த தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் உரையாற்றிய

போது, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்ட நல்லிணக்க நடைமுறையை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9 அன்று புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது என்றும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நிர்வாக வசதிக்காக மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. முதலில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் உருவானது. அதற்காக 1952}ஆம் ஆண்டு பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். நாடு எங்கும் கலவரமானது. இதனால், அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தனி ஆந்திர மாநிலத்தை அறிவித்தார்.

இதன்பிறகு மாநிலங்கள் மறு உருவாக்கச் சட்டம் 1956 ஆகஸ்ட் 31 அன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் அமலாக்கம் 1956 நவம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம் நவம்பர் 1 என பொதுவாகக் கூறப்படுகிறது.

அதுவரை மதராஸ் ஸ்டேட் என அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலம் 1969 ஜனவரி 14 அன்று அறிஞர் அண்ணாவால் "தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1967 ஜூலை 18 அன்று சட்டப்பேரவையில் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதி 1970}ஆம் ஆண்டு முன்மொழிந்த தனித் தீர்மானத்தின்படி, அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என்று 23.11.1970-இல் முதல்முதலில் அரசாணை வெளியிடப்பட்டது.

இப்போது மத்திய, மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இது தமிழ் உணர்வாளர்களுக்கு அவமானமாகவும் இருக்கிறது. உயர்தனிச் செம்மொழிக்குப் பெருமை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை இல்லையா? தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் நாலாவது நாளான ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் அரசின் தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்தார். பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் அவர் முன்மொழிந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு "தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்பது தீர்மானமாகும்.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்படும். இதில் எவ்வித சமரசத்துக்கும் இடம் இல்லை என்று முதல்வர் ஜோசப் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழ்மொழி நமது உயிர், நமது உணர்வு, தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ அதுபோலத்தான் தாய் மொழியும். தமிழ்த்தாய் வாழ்த்தை 1891}இல் எழுதிய "மனோன்மணீயம்' சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாகப் பாடினார். தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழி, மதம், இனத்தையும், எந்தத் தனி மனிதனையும் தாழ்த்திப் பேசவில்லை. சிறிதும் காயப்படுத்தவில்லை.

தமிழ்மொழியின் அடையாளம்தான் தமிழ்த்தாய் வாழ்த்து. ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத் தன்மையை உயர்த்திப் பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து நம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்க வேண்டும். நம் அரசமைப்பு சாசனமே ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும், பண்பாட்டுக்கும், பாரம்பரியத்துக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதுதான் மாநில உரிமை.

தமிழ்த்தாய் வாழ்த்தை 23.1.1970 முதல் அரசு விழாக்களில் பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டு நடைமுறைக்கு வந்தது. அதன்பின்னர் 17.12.2021}இல் முதல் மாநிலப் பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைத்துத் தொழில், பொது நிறுவனங்களின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை உள்ளது. இவற்றை முதல்வர் முன்மொழிந்து பேசியுள்ளார்.

கடந்த ஜனவரி 28-இல் மத்திய அரசு, அரசு விழாக்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி சில அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் மாநிலப் பாடல் பற்றி எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்ததால் அரசு விழாக்களில்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என பிரதமருக்கு கடந்த ஜூலை 9-இல் கடிதம் எழுதப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையைக் காப்பதில் நமது அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசமைப்புக்கும், இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது அல்ல. மாறாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துவது ஆகும். இது அரசியல் விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும், தமிழின் தொன்மையையும், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையையும், பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இந்தத் தீர்மானத்தைஒருமனதாக ஆதரித்தன.

ஒரு காலத்தில் மொழி என்பது மனிதர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் கருவியாக இருந்தது. காலப்போக்கில் அந்நிலை மாறி மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகவே உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு மொழியை அழித்துவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும் என்று வரலாறு கூறுகிறது. அதற்கு நாம் இடம் தரக் கூடாது. தாய்மொழியை வாழ்த்துவோம், வணங்குவோம்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.