குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

நாவினால் சுட்ட வடுக்கள்!

இனியனவாகிய நற்பெயர்கள் கனிபோலிருக்கிறபோது, காயாகக் கசந்து குமட்டலைத் தருகிற இன்னாதனவாகிய இந்த பட்டப் பெயர்கள் தேவையா?

Published On :15 வினாடிகள் முன்பு

மனிதனுக்குப் பெயர்களே முதன்மையானவை; அடையாளத்தைத் தருபவை. இயற்பெயர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் தன்னறிவு பெறுவதற்கு முன்னரே தோன்றியவை. பெரும்பாலும் பெற்றோரால் சூட்டப்படுபவை; சிலருக்குப் பெரியோர்கள் பலரால் அமைந்த சிறப்பும் உண்டு. எப்படியானாலும் பெயர்கள் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவ அடையாளங்கள். இவற்றை இயற்பெயர்கள் என்கிறோம்.

மனிதர்கள் தங்கள் அறிவு முதிர்ந்த பின்னர் அல்லது தாங்கள் சமுதாயத்தில் தனித்துவம் பெற்றபின்னர், தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொள்ளும் ஆர்வம் தோன்றி விடுகிறது. அவைதாம் புனைபெயர்களாக அமைகின்றன.

இலக்கியவாதிகள், விமர்சகர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் இது தேவையாக இருக்கிறது.

இயற்பெயருக்கும் விருப்பமிருந்து புனைபெயருக்கும் விருப்பமிருக்கிறவர்கள் இரண்டையும் இணைத்துக் கொள்கிறார்கள். அவர்களில் பலர் தங்கள் இயற்பெயருடன் தந்தை பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். சிலரோ தாங்கள் பிறந்த மண்மீது பற்றுக் கொண்டு தங்கள் பெயருக்கு முன்னால் ஊர்ப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். தாசர்களையும், அடியார்களையும் மறக்க முடியுமா?

கல்வியின் பயனாகப் படித்து வாங்குகிற பட்டம் குறித்து நாம் அறிவோம். அவை வரிசையாக ஆங்கில எழுத்துகளால் அடுக்கப்பட்டதாகப் பெயருக்குப் பின்னால் அமையும்.

ஆனால், பட்டப் பெயர்கள் குறித்தும் நாம் அறிந்திருக்க வேண்டும். இயற்பெயர்கள், புனைபெயர்கள் வரிசையில் பட்டப் பெயர்களும் தனித்த இடம்பெறுகின்றன. இவை ஆதிகாலத்திலிருந்தே தோன்றிய பெருமைக்குரியவை.

பட்டப் பெயர்களிலும் பலவகை உண்டு. தாமே தமக்குச் சூட்டிக் கொள்கிற பட்டப் பெயர்களும் உண்டு. அரசர்கள், அறிஞர்கள், மன்றங்கள், அவை தருகிற பட்டங்களாகிய விருதுப் பெயர்களும் உண்டு.

இந்தப் பெயர்கள் மனிதர்களுக்குத்தான் என்றில்லை. வழிபாடு தோன்றிய காலத்தில் இந்த உலகத்தைப் படைத்த கடவுள்களுக்கும் பல பெயர்கள் பட்டங்களைப் போல வழங்கப்பட்டன. 'ஒருவனே தேவன்' என்றாலும் அத்தேவன் பல பெயர்களால் அழைக்கப்படுவதையும் காண்கிறோம்.

சகஸ்ரநாமம் என்னும் ஆயிரத்தெட்டு நாமாவளிகள் கடவுளின் பெருமைகளைப் பரக்கப் பேசுவன. அவை பெரும்பாலும் கடவுள்களின் ஆற்றல்களையும் பெருமைகளையும் குறித்தனவாகத் திகழ்வன.

கடவுள்களுக்கு நிகராக மன்னர்களும் போற்றப் பெற்றனர். 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்று களிக்கிறார் நம்மாழ்வார்.

சேர மன்னர்கள் குட்டுவன், வானவன், வில்லவன் என்றும், சோழ மன்னர்கள் கிள்ளி, வளவன், செம்பியன் என்றும், பாண்டிய மன்னர்கள் மாறன், வழுதி, தென்னவன், செழியன் என்றும் தங்களைப் பட்டங்கள் சூட்டி அழைத்துக் கொண்டார்கள். இந்தப் பட்டங்கள் அவர்களின் பெருமைகளுக்குச் சான்றாக அமைகின்றன.

பிற்காலங்களில் தோன்றிய மெய்க்கீர்த்திகள் என்னும் அரசர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் தொடக்கத்தில் அவர்களின் உண்மையான புகழைச் செதுக்கி வைக்கப்பதற்கு இந்தப் பட்டப் பெயர்கள் பெரிதும் துணைபுரிந்தன.

மெய்க்கீர்த்திகள் மன்னரின் ஆட்சிச் சிறப்பு, போர் வெற்றிகள், கொடைத்தன்மை, சாதனைகளை விவரிக்கும் வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அச்சான்றுகளுக்குப் பட்டப் பெயர்கள் மணிமகுடம் போலத் திகழ்கின்றன. இந்தப் பட்டப் பெயர்கள் அவர்களின் தனித்த அடையாளங்களைச் சுட்டுகின்றன.

முற்கால மன்னர்களுக்கு அமைந்த 'பெருஞ்சோற்றுதியன், யானைக்கட் சேய், சிக்கற்பள்ளித் துஞ்சியவன், கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சியவன், கோட்டம்பலத்துத் துஞ்சியவன், அரசு கட்டிலிற்றுஞ்சியவன், சித்திரமாடத்துத் துஞ்சியவன், ஆரியப்படை கடந்தவன், கடலுள் மாய்ந்தவன், முடத்திருமாறன் உள்ளிட்ட பல பட்டப் பெயர்கள் கால வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.

பிற்கால மன்னர்களுக்கு அமைந்த 'பரகேசரி, இராஜகேசரி, கேரளாந்தகன், மும்முடிச் சோழன், கங்கை கொண்டான், கடாரங்கொண்டான், சுங்கம் தவிர்த்தவன், திரிபுவனச் சக்கரவர்த்தி, கோனேரின்மை கொண்டான், எம்மண்டலமும் கொண்டருளியவன்' உள்ளிட்ட பட்டப் பெயர்கள் வரையிலும் அவை நீண்டன.

அக்காலங்களில் மூவேந்தர்கள் தங்களுக்கு விருப்பமான குறுநில மன்னர்களுக்கும் வேளிர்களுக்கும் பெருங்குடி மக்கட்கும் காவிதி, ஏனாதி முதலிய பட்டங்களைத் தந்து நட்புப் பாராட்டியிருக்கிறார்கள்.

புலவர்கள் தாங்கள் படைக்கிற படைப்பின் பெருமையாலும், வாழ்வின் சிறப்பினாலும் இதே பட்டங்களை ஏற்றிருக்கிறார்கள். குறிஞ்சித் திணைப் பாடல்களை மிகுத்துப் பாடியதனால் கபிலருக்குக் குறிஞ்சிக் கபிலர் என்றே பெயர் அமைந்து விட்டது. இது அவர்தம் புலமைக்குச் சான்று. அதே வேளையில், அவர்தம் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் புகழ்ந்து புலனழுக்கற்ற அந்தணாளர், பொய்யாநாவிற் கபிலர், நல்லிசைக் கபிலர், வாய்மொழிக் கபிலர் என்ற பெயர்களெல்லாம் அமைந்தன. அதுபோலவே பரணருடன் கொண்ட நட்பின் காரணமாக, கபிலபரணர் என்ற பெயரும் இணைந்தே அமைந்து விட்டது. சங்கப் புலவர்கள் பலரது பெயர்களை அறிய முடியாத சூழலில் அவர்கள் பாடிய பாடல் வரிகளில் அமைந்த உவமைகளைக் கொண்டே அவர்களுக்குப் பெயர்கள் வழங்கப்பட்டன.

விட்ட குதிரையார், ஓரேருழவனார், அணிலாடு முன்றிலார், கழைதின் யானையார் முதலிய பெயர்கள் அவற்றுள் குறிக்கத்தக்கவை.

திருவள்ளுவருக்கு அமைந்த சிறப்புப் பட்டப் பெயர்களுள் தெய்வப்புலவர் என்பதே அவர்தம் படைப்பாற்றலுக்குச் சான்றாக அமைந்துள்ளது.

பின்னாள்களில் பலருக்கு முன்னோர்களின் பட்டப் பெயர்களே இயற்பெயர்களாக அமைந்து விட்டன.

பட்டப் பெயர்களில் இரு வகை உண்டு. அவை புகழ்ச்சிப் பெயர்கள், இகழ்ச்சிப் பெயர்கள் என்று இரு வகையாக அமைகின்றன. புகழ்நிலையில் முதல்நிலைப் பட்டப் பெயர்கள் அமைந்தால் இரண்டாம் நிலையில் பழிப்பெயர்களாகவும், வசைப்பெயர்களாகவும் அவை மாற்றம் பெற்றன. குறிச்சொற்களாக விளங்கும் அவை குத்தீட்டிகளைப் போல ஒருவரை மனம் நோகச் செய்பவை.

உடலில் உள்ள குறைகளைச் சுட்டி இகழ்வாகப் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. தூய தமிழ்ப் பெயர்களிலிருந்து பிறமொழிப் பெயர்களுக்கு மாறியதுகூட இந்தப் பட்டப் பெயர்களின் தாக்கத்தால்தான் என்பதை மறுக்க முடியாது.

தாத்தாவுக்கு வைத்த பெயரையே ஏற்றதால் 'பெயரன்' என்னும் பெயர் பொருந்தியது. குடிப்பெயர்கள் என்னும் குலப்பெயர்களில் பட்டப் பெயர்களும் சேர்ந்தன. என்றோ, எவரோ பல தலைமுறைகளுக்கு முன்னர் செய்த செயலின் விளைவால் எழுந்த இப்பெயர்கள் காலங்கடந்தும் இன்றும்கூட வழக்கிலே இருந்து வருகின்றன.

இந்த வரிசையில் தங்களின் ஜாதிப் பெயர்களைப் பெருமையாகப் பட்டப்பெயர்களாக இணைத்துக் கொள்வோரும் உண்டு. ஆனால், அதே ஜாதிப் பெருமையை இழிவென்று கருதி அதை விலக்கி விடுவோரும் உண்டு. தொழில் பெயர்களே ஜாதிப் பெயர்களான காரணத்தால் தவிர்க்க முடியாமல் இருப்போரும் உண்டு.

திருமணம் உள்ளிட்ட இல்ல நிகழ்வுகளில் இந்தக் குல, கோத்திரப் பட்டப்பெயர்கள் வந்து சேர்ந்து கொள்கின்றன. நவீனத் திருமண அழைப்பிதழ்களில் அவை மறைந்தும் போய்விட்டன.

பட்டப் பெயர்கள் இளவயதுப் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விடுகின்றன. பால்மணம் மாறாப் பச்சிளம் குழந்தைகள் தங்களை அறியாமல் தங்களுக்குள் ஒவ்வொருவருக்கும் பெயர் சூட்டி அவ்வாறு அழைத்துக் கொள்வார்கள். அந்தப் பட்டப் பெயர்கள் தரும் வலியை அவர்கள் அந்தப் பருவத்தில் உணர்ந்திருக்க மாட்டார்கள். பட்டப் பெயர் ஆசிரியர் வரையிலும் நீளும்.

தீச்சொல், இன்னாச்சொல், பயனிலசொல் என்று திருவள்ளுவர் சொல்லுகிற இச்சொற்களின் வரிசையில் முன்நிற்பது இந்த இரண்டாம் நிலைப் பட்டப் பெயர்கள்தான்.

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்கிறது தமிழ் மரபு.

பெரியோரை வியந்து போற்றி அவர்தம் செயற்சிறப்பைப் பாராட்டிக் குறிக்க, பட்டப் பெயர்கள் இருக்கலாம். ஆனால், பிற மனிதர்களைச் சிறியோர் என இகழ்ந்து அவர்களைப் பழித்தும் இழித்தும் பேசக்கூடிய பட்டப்பெயர்கள் தேவையா? தமிழுக்கு அமுதென்று பேரிட்டு அந்த அமுதில் நஞ்சு கலப்பது நன்றாகவா இருக்கிறது?

விலங்குகளைக்கூட வளர்ப்புப் பிராணிகளாக்கி அவற்றுக்குச் செல்லப் பெயர்சூட்டி மகிழ்கிற நாம் நம்முடன் வாழ்கிற சக மனிதர்களை, சகோதரர்களை விலங்குகளின் பெயர் சொல்லி அழைப்பதும் பட்டப் பெயராக்கி மகிழ்வதும்தான் மானுடப் பண்பா? கல்லாதவர்கள் இவ்வாறு பேசினால் பரவாயில்லை. கற்றுத் துறை போகியவர்களும் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய மனிதர்களும் பேசினால் என்ன செய்வது? அன்புமொழிகளால் சக மனிதர்களை அரவணைக்க வேண்டியவர்கள் பட்டப் பெயர்களிட்டு நாவினால் சுட்டு மனங்களை நோகச் செய்வதா?

இனியனவாகிய நற்பெயர்கள் கனிபோலிருக்கிறபோது, காயாகக் கசந்து குமட்டலைத் தருகிற இன்னாதனவாகிய இந்த பட்டப் பெயர்கள் தேவையா? சிந்தித்துப் பார்க்கலாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.