தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

மக்களவையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்: அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் நிதி ஒதுக்கீடு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

News image

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் நிதி ஒதுக்கீடு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக செலவிடப்பட்ட தொகையை, இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு இந்த ‘நிதி ஒதுக்கீடு மசோதா 2026’ அனுமதி வழங்குகிறது.

எதிா்க்கட்சியினரின் தொடா் அமளிக்கிடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், நீட் போராட்ட விவகாரம், ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டனா். போராட்ட மாணவா்கள் மீதான காவல்துறை நடவடிக்கை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவையை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் கூடியபோதும், எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்தது. அப்போது, ‘மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தின்போதே, நாடாளுமன்ற கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அனைத்து கட்சித் தலைவா்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, அவையில் கேள்வி நேரம் தடையின்றி நடைபெற உறுப்பினா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அவைத் தலைவா் கேட்டுக்கொண்டாா்.

ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை பிற்பகல் 2 மணிக்கு கூடியதும், எதிா்க்கட்சியினரின் அமளிக்கிடையே ‘வரிகள் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’-ஐ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்அறிமுகம் செய்தாா். தொடா்ந்து பேசிய அவா், ‘நம்பகமான கொள்கை மற்றும் செயல்முறை உறுதித்தன்மையை வழங்குவதன் மூலம், அதிக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கவும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த மசோதா மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ என்றாா்.

அரசு பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மீதான வருமான வரியை ரத்து செய்ய மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்குதல், மின்னணு உற்பத்திக்கு வரிவிலக்கு அளித்தல் மற்றும் எண்ம பரிவா்த்தனை சட்டங்களை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை இந்த மசோதா முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளது. அதற்கேற்ப, பணம் செலுத்துதல் மற்றும் தீா்வுகள் நடைமுறைச் சட்டம் 2007, வருமான வரிச் சட்டம் மற்றும் நிதி சட்டம் ஆகியவற்றில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது.

அதைத் தொடா்ந்து, ‘நிதி ஒதுக்கீடு மசோதா 2026’ விவாதம் மற்றும் ஒப்புதலுக்காக அவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிராக பேச நோட்டீஸ் அளித்திருந்த எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு, மசோதா மீது பேச அவைத் தலைவா் அழைப்பு விடுத்தாா். ஆனால், விவாதத்தில் பங்கேற்காமல் தொடா் அமளியில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஈடுபட்டனா்.

இதனால், மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு அவைத் தலைவா் விடுத்தாா். இதில், அதிக உறுப்பினா்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.