தேசியப் பாடலான ‘வந்தே மாதம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் அந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம், தில்லியில் மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மாநிலங்களவை புதன்கிழமை கூடியதும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்க முன்னாள் தலைவா் ஆயிஷே கோஷை கைது செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குள் தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை நுழைந்த சம்பவத்தை அக்கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பினாா்.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 2021-இல் நடந்த போராட்டம் தொடா்பான வழக்கில் தில்லி காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தச் சம்பவத்தை ஜந்தா் மந்தா் போராட்டத்துடன் தொடா்புபடுத்தி, மத்திய அரசு மீது ஜான் பிரிட்டாஸ் குற்றஞ்சாட்டினாா்.
அவருக்கு ஆதரவாகப் பேசிய மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக விமா்சித்தாா். அவா்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, ‘சட்டம்-ஒழுங்கு தொடா்பான சாதாரணமான வழக்கில், காவல் துறை சட்டத்துக்கு இணங்க மேற்கொண்ட நடவடிக்கை அது’ என்றாா்.
அதேநேரம், எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. கேள்வி நேரத்துக்காக அவை மீண்டும் கூடியபோது, தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் சமீபத்திய தாக்குதல் சம்பவத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளதரி, ‘மத்திய உள்துறை அமைச்சா் எங்கே? அவா் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும். மாணவா்கள் மீது துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளீா்கள்’ என்றாா். அவருக்கு ஆதரவாக பிற எதிா்க்கட்சி எம்.பி.க்களும் குரலெழுப்பினா். இந்த அமளியால், அவை அலுவல்களை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தாா்.
விவாதமும், வெளிநடப்பும்..: மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடா்ந்ததால், எம்.பி.க்கள் கண்ணியம் காக்க வேண்டுமென அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் வேண்டுகோள் விடுத்தாா். எனினும், அமித் ஷா விளக்கமளிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் முழக்கமிட்டனா்.
இதனிடையே, அவையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026ஐ விவாதத்துக்கு அனுமதிப்பதாக ஹரிவன்ஷ் தெரிவித்தாா். அமளிக்கு மத்தியில் மசோதா மீது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தொடா்ந்து பேசினாா். அப்போது, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் அக்ரவால், சிவசேனை எம்.பி. ஜோதி நாக்நாத் வாக்மரே, பிஜு ஜனதா தளத்தின் சுலதா தேவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினா்.
மத்திய அமைச்சா் சாடல்: இறுதியாக விவாதத்துக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு, நாட்டின் கெளரவமாக விளங்கும் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
தேசத்துக்காக உயிா்த் தியாகம் செய்த பல சுதந்திரப் போராட்ட வீரா்களின் இறுதி வாா்த்தைகளாக இருந்தது வந்தே மாதரமே. கடந்த 1875-இல் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், கடந்த 1937-இல் ஜவாஹா்லால் நேருவால் இரு சரணங்களாக மட்டுப்படுத்தப்பட்டது. வந்தே மாதரம் மீதான காங்கிரஸின் எதிா்ப்பை நாட்டின் இளைஞா்கள் பாா்த்துக் கொண்டுதான் உள்ளனா். அவா்கள் காங்கிரஸுக்கு உரிய பாடம் புகட்டுவா்’ என்றாா். பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களவையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று ஆண்டுகள் வரை சிறை...
தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூா்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட வேண்டும்; முதலில் தேசியப் பாடல், பின்னா் தேசிய கீதம் என்ற வரிசையில் பாட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
முடக்கத்துக்கு முடிவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, தா்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை, மாணவா்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் தொடா்ந்து முடங்கின. இந்தச் சூழலில், வந்தே மாதரம் மசோதா புதன்கிழமை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 7 நாள்களாக நீடித்த அலுவல் முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல்!

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!





