உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

வீணாகும் பொன்னான மணித்துளிகள்!

முதல் ஒரு வாரம் எந்த விவாதமும் நடைபெறாமல் ஏதாவது ஒரு காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்ப, ஆளுங்கட்சி அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்க, அதைத் தொடர்ந்து அமளி மற்றும் அவை ஒத்திவைப்பு என்பதுதான் தொடராக இருக்கிறது.

நாடாளுமன்றம் - பிடிஐ

Published On :11 வினாடிகள் முன்பு

கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். முதல் ஒரு வாரம் எந்த விவாதமும் நடைபெறாமல் ஏதாவது ஒரு காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்ப, ஆளுங்கட்சி அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்க, அதைத் தொடர்ந்து அமளி மற்றும் அவை ஒத்திவைப்பு என்பதுதான் தொடராக இருக்கிறது. நாடாளுமன்றம் கூடும் நாள்கள், விவாதம் நடைபெறும் நேரம் என நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் எல்லாமே குறைந்து கொண்டே வருவதை நான் பார்க்கிறேன். அது சென்ற வாரம் முடிவடைந்த மழைக்கால கூட்டத் தொடருக்கும் பொருந்தும்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மொத்தம் 19 நாள்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒரு நாள்கூட கூட்டத் தொடர் அமைதியாக நடைபெறவில்லை. நீட் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், அதைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம், அதில் வன்முறை ஏற்பட்டதால் நடத்தப்பட்ட பெல்லட் துப்பாக்கிச்சூடு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் முறைகேடு போன்ற பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

"குறிப்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?, இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், முழு மழைக்கால கூட்டத்தொடரிலும் ஆக்கபூர்வமான அலுவல்கள் நடைபெறாமல் முடங்கின.

நான் (கட்டுரையாளர்) பத்து ஆண்டுகள் (1967-77) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இருந்த நாடாளுமன்றத்துக்கும், இப்போதுள்ள நாடாளுமன்றத்துக்கும், குறிப்பாக அதன் நடைமுறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதைக் காண்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று பிரத்யேக சலுகை எதுவும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வழங்கப்படவில்லை; அப்படியே ஏதாவது சலுகை கேட்டால் அன்றைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய், "நீங்கள் மக்களுக்குப் பணி செய்ய வந்திருக்கிறீர்களா அல்லது சலுகைக்காக வருகிறீர்களா' என்று கேள்வி கேட்டு அந்தச் சலுகைகளை மறுத்து விடுவார்.

ஆனால், இப்போது தங்களுக்கு வேண்டிய சலுகைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு எளிதாகப் பெறுகிறார்கள். சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது என்பதுதான் காரணம்; இப்படித்தான் அவர்கள் நினைத்ததெல்லாம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் ஜனநாயகம் குறித்து 1967}இல் என்னுடன் சக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்றைய நாடாளுமன்ற ஜனசங் குழுத் தலைவர், பாரதிய ஜனதாவின் முதல் பிரதமராக இருந்த வாஜ்பாய் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. மராட்டியப் பழமொழி ஒன்றை மேற்கோள் காட்டி "நம்மை விமர்சிப்பவர்களை அருகில் வைத்திருக்க வேண்டும். நம்மைத் திருத்திக்கொள்ள விமர்சனங்கள் உதவும். அரசுகள் மாறும், கட்சிகள் அழியும், ஆனால், நாடு நிலைத்திருக்க வேண்டும்; விவாதங்கள் நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும். முகஸ்துதி செய்பவர்கள் நம்மைக் கெடுத்து விடுவார்கள்' என்றார். இன்றைய ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நண்பர் வாஜ்பாயின் அறிவுரை இப்போது அவசரத் தேவை என்பதை நான் உணர்கிறேன்.

மக்களவை இயங்குவதற்கு ஒரு நிமிஷத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது. நிகழ் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 7,023 நிமிஷங்கள் வீணாகின. இதனால், மக்களின் வரிப் பணம் ரூ. 175 கோடி வரை விரயமாகி இருக்கிறது என்று தனது கவலையைப் பதிவு செய்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, கூட்டத்தொடர் முடியும் நிலையில் இறுதி உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த முறை அதை அவர் தவிர்த்தார்; காரணம், அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விவாதங்கள் குறைந்துவிட்டன. தொடர் அமளி காரணமாக மக்களவையின் செயல்பாடு வெறும் 19% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது.

இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இதற்கு காங்கிரஸ் கட்சியே முழு காரணம். மத்திய அரசு சில பிரச்னைகள் குறித்து விவாதிக்க முன்வந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதற்குத் தயாராகாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் இப்படித் தெறித்து ஓடியது இதுவே முதல் முறை' என்கிறார் அவர்.

அதாவது, முழுப் பழியையும் அவர் எதிர்க்கட்சியினர் மீது போட்டுவிட்டு நகர்ந்து விட்டார். அதேசமயம் இந்த மழைக் காலத் தொடரில் 12 மசோதாக்கள் நிறைவேறின. இதில் வினாத்தாள் மசோதாவைத் தவிர மற்ற 11 மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி, சராசரியாக 3 முதல் 14 நிமிஷத்துக்குள் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. இதுவும் சரியான ஜனநாயக நாடாளுமன்ற நடைமுறை அல்ல.

சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் துணைத் தலைவராகவும், பின்னர் மக்களவைத் தலைவராகவும் இருந்தவர் அனந்தசயனம் அய்யங்கார். அவர் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாதபோதுகூட, அனைத்து உறுப்பினர்களையும் பாரபட்சமின்றி மிகுந்த கண்ணியத்துடன் நடத்தினார். விமர்சனங்களுக்கும் அவர் வாய்ப்பு தந்தார். சில சமயம் விவாதங்கள் திசைதிருப்பப்படும்போது, தனது நகைச்சுவை பேச்சால் அவையை உயிரோட்டமாக வைத்திருந்தார் அய்யங்கார்.

ஒத்திவைப்புத் தீர்மானங்கள், மசோதாக்கள் அறிமுகம், தீர்மானங்கள், நிலைக் குழுக்கள் அமைத்தல், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றில் அவர் கையாண்ட அணுகுமுறை ஒரு முன்மாதிரி. நாடாளுமன்ற நூலகத்தில் அவற்றை எடுத்துப் படித்தாலே, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தை அந்தக் காலத்தில் எப்படி கட்டிக் காத்தார்கள் என்பது குறித்த ஒரு தெளிவு வரும். நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதிக நேரத்தை நாடாளுமன்ற நூலகத்தில்தான் செலவிடுவேன்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி, அதன் தோழமைக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அத்தனைப் பேருக்கும் பொறுப்பு உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெருந்தன்மை வேண்டும். எதிர்ப்புக் குரல் கேட்கும்போது பொறுமையும் வேண்டும். ஒரே காரில் வந்திறங்கி, கணவர் எதிர்க்கட்சிப் பக்கமும், மனைவி ஆளுங்கட்சிப் பக்கமும் சென்று பணியாற்றிய ஆச்சார்ய கிருபளானி } சுசேதா கிருபளானி தம்பதியை வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் வாஜ்பாய், ஆச்சார்ய கிருபளானி, ராம் மனோகர் லோகியா, இந்திரஜித் குப்தா, ஏ.கே. கோபாலன், என்.ஜி. ரங்கா, பிலுமோடி, மது லிமயே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், எஸ்.ஏ. டாங்கே மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பி. ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் போன்ற மாபெரும் தலைவர்கள் இருந்தும் மக்களவையில் கலவரம் கிடையாது; அவை ஒத்திவைப்புகள் இல்லை. அந்தப் பொற்காலம் திரும்ப வரவேண்டும் என விரும்புகிறேன்.

மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், "மக்களின் குரலை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை மாநிலங்களவை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மூத்தோர் அவை என்ற அடிப்படையில், பகுத்தறிவுள்ள விவாதம், கண்ணியமிக்க மாற்றுக்கருத்துகள், சிந்தனைமிக்க சட்டமியற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. தொடர்ச்சியான இடையூறுகள் மாநிலங்களவை மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளைப் பாதிக்கும்' என்று கடைசி நாள் உரையில் தனது கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

இதுதான் உண்மை.

அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் இறுதி உரையின் போது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் விவாதங்கள் குறித்து மிக முக்கிய எச்சரிக்கைகளையும் கருத்துகளையும் தெரிவித்தார். "அரசியல் சமத்துவம் மட்டும் போதாது; சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லாமல் நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமை பெறாது' என்று குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், "சமூக மாற்றங்களை ரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசுக்கு எதிரான வழிமுறைகளில் ஜாதியப் போராட்டங்கள், ஒத்துழையாமை மற்றும் சத்யாகிரகங்களைக் கைவிட வேண்டும்' என்றும் அறிவுறுத்தினார்.

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் அன்று தேசியப் பாடல் அந்தஸ்து பெற்ற "வந்தே மாதரம்' பாடல் முதல்முறையாக முழுவதுமாகப் பாடப்பட்டது.

அப்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி என அனைத்து முக்கியத் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்த அவையில் முழுவதுமாகப் பாடல் ஒலித்தது. பாடல் பாடப்பட்ட மூன்று நிமிஷங்கள் வரை மக்களவை அமைதியாகக் காணப்பட்டது; மாநிலங்களவையிலும் இதேதான் நடந்தது. அதன் பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதை நான் நேரலையில் பார்த்தேன்.

"வந்தே மாதரம்' பாடப்பட்ட அந்த மூன்று நிமிஷங்கள்போல், தொடர் அமளியால் வீணான அந்த 7,023 நிமிஷங்களும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று யோசித்துப் பார்த்தேன். இதே எதிர்பார்ப்புதான் வாக்களித்த பொதுமக்களுக்கும் இருந்திருக்கும்.

கட்டுரையாளர்:

வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.