FOLLOW US

ON GOOGLE DISCOVER

எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

எல்லோருக்கும் ஏதாவது ஒரு புத்தி இருக்கும்; எனக்குதான் எதுவுமே இல்லாது போயிற்று! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 9

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் ஒன்பதாம் பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...

News image

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைத் தொடரின் ஒன்பதாம் படி நறுக்கு... - தினமணி

Updated On :18 ஆகஸ்ட் 2026, 6:47 pm IST

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 9.

*

ஒன்பதாம் படி

ஒரு பாடலாசிரியர் மொத்தம் முப்பது பாடல்கள் சினிமாவுக்கு எழுதியுள்ளார். அவர் ஒரு அழகான வீடு கட்டியுள்ளார், பத்துப் படங்களில் மட்டுமே நடித்தவர், இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார். நானோ காலையில் ஒரு பாட்டு மாலையில் ஒரு பாட்டு என்று அந்த நேரத்தில் எழுதினேன். காலணா மிஞ்சவில்லை.

நான் அடிக்கடி மேடைகளில் சொல்வது வழக்கம். "பணத்தைச் சம்பாதிப்பதற்கு ஒரு புத்தி, சேர்த்து வைப்பதற்கொரு புத்தி, செலவழிப்பதற்கு ஒரு புத்தி வேண்டும்'' என்று.

இதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு புத்தி இருக்கும். என் ஒருவனுக்குத்தான் எதுவுமே இல்லாது போயிற்று.

கிராமத்துப் பெரியவர்களின் பொருளாதாரக் கணக்கை நான் எவ்வளவு அலட்சியப்படுத்திவிட்டேன்?

"தம்பி, ஏதாவது காலைக் கையை இழுத்துக் கொண்டால் வேண்டாமா, கொஞ்சம் சேர்த்து வை" என்பார்கள்.

ஆரோக்கியத்திற்கு ஆண்டவன் ஒரு கெடு வைக்கிறான். அந்த ஆரோக்கியம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் என்பதுபோல மனிதன் தவறு செய்து விடுகிறான்.

இன்று அதை நினைத்தேன். நடக்கவில்லை; இதை நினைத்தேன் என்று பிரலாபிக்க முடிகிறதே தவிர, பணம் வெள்ளமாக வந்தபோது சேமிக்கத் தெரியவில்லை.

கம்பெனியில் பெரும்பாலும் திருடர்களே இருந்ததால், பணம் பாழாவதே சுலபமாக இருந்தது. 'மானேஜர் திருடன், புரொடக்.ஷன் மானேஜர் திருடன்' என்று, 'கண்ணதாசன் புரொடக்.ஷன்ஸில் இருந்ததுபோல், வேறு எந்தக் கம்பெனியிலும் இருந்திருக்க முடியாது.

கோவை செழியனும், கே. முருகேசனும் கணக்கு வழக்கை ஒழுங்காகப் பார்த்து, என்னுடைய பணத்தைப் பத்திரப்படுத்தினார்கள். ஆனால், அவர்களையும் மீறி திருடர்கள் கொள்ளையடித்தார்கள்.

முள்ளின் மீது நாட்டியம் ஆடிக்கொண்டே நாராயணீயத்துக்கு பாஷ்யம் எழுதச் சொன்னால், அந்த நாளில் அதைச் செய்திருப்பேன்.

இவ்வளவு கொடுமைகளுக்கும் இடையில் உயிரோட்டம் மிக்க கருத்துகளை என்னுள்ளம் வெளியிட்டுக் கொண்டே இருந்தது.

டைரக்டர் பீம்சிங், "ஏதாவது பாட்டு இருந்தால் கொடுங்களேன்" என்றுதான் கேட்பார்.

மனம் போன போக்கில் ஏதாவது ஒரு பாடலை எழுதி வைத்திருந்தால், அது எங்காவது செல்லுபடியாகி விடும்.

மக்களுக்குக் கவனத்திலிருப்பது 'பாச மலரு'ம், 'பாவ மன்னிப்பு'ம், 'பாலும் பழமும்'தான் என்றாலும், அவற்றையெல்லாம்விட உன்னதமானவை என்று நான் கருதுவன வேறு பல உண்டு.

ஒருவருமே கேளாமல் பத்து இசைத் தட்டுகூட விற்பனையாகாமல் பதுங்கிவிட்ட பாடல் ஒன்று, மாடர்ன் தியேட்டர்ஸுக்கு எழுதியது, அதை நான் மட்டுமே அடிக்கடி பாடி வருகிறேன்.

அதன் கருத்து எனக்குத் தேவையாய் இருந்ததுபோல், எத்தனையோ லட்சம் பேருக்குத் தேவையாக இருந்திருக்கக் கூடும். ஆனால், படத்தில்கூட வராமல் படுத்து விட்டது அது.

மனிதனது சகல யத்தனங்களும் எதிர்நோக்கி ஏன் இந்த ஆர்ப்பாட்டமும், அவலமும், ஓலமும்?

அவன் நிம்மதியைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைகிறான். அந்த நிம்மதி எங்கே கிடைக்கும்?

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி / நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே / கொஞ்சும் மனமும், குளிர்ந்த வாழ்வும் / கொண்டு வந்தாலென்ன நமக்குள்ளே. / - நெஞ்சுக்கு

பழக்கம் என்பது பழகுவது - அது / விலக்கும் போதே விலகுவது / பாசம் நேசம் காதல்தானே - / வாழ்வதற் கென்றே வளருவது - /விதி தொடருவது - மதி - மயக்குவது / வழி - நேற்றும் இன்றும் மாறுவது - நெஞ்சுக்கு

பாதையில் எத்தனை காலடிகள் - உன் / பயணத்தில் எத்தனையோ வழிகள் / காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி / கவனித்துப் பார்க்கட்டும் உன் விழிகள் / ஒன்றைத் தேர்ந்து எடு - / அதில் - வாழ்ந்து விடு - இந்த / உலகத்தின் சுகத்தை அறிந்து விடு! - நெஞ்சுக்கு

- திரு. வேதா இசையமைத்த இந்தப் பாடலை நானே சுலபமாகப் பாடுவதுண்டு.

மற்றும் சில பாடல்கள் சரியான படத்தில் வராததால் கவனிப்பாரின்றிப் போய்விட்டன.

இந்தத் துறையில் விசுவநாதன், மகாதேவன் இருவரைத் தவிர, என்னோடு ஒத்துழைத்த மற்றவர்களையும் நான் குறிப்பிட வேண்டும்.

என் முதல் பாட்டுக்கு இசையமைத்த திரு எஸ்.எம். சுப்பையா நாயுடு, எதைக் கொடுத்தாலும் கழிவில்லாமல் பாடுவார். பல்வேறு நாடுகளின் இசை அவருக்குத் தெரியாதே தவிர, தமிழகத்தின் பல்வேறு இசையும் அவருக்குத் தெரியும். நான் அவரை 'சங்கீதய்யா' என்று கூப்பிடுவேன்; அவர் என்னைப் 'பாட்டய்யா' என்று கூப்பிடுவார். அன்று என் பாட்டை மதித்து இசையமைத்ததன் மூலம், என்னைக் காப்பாற்றியவர்களில் அவரும் ஒருவர்.

அடுத்து சி.ஆர். சுப்பராமன், என்னாலெல்லாம் உடுமலை நாராயண கவியைப் போல் எழுத முடியாதென்று இவரது அபிப்பிராயம். துரதிருஷ்டவசமாக நான் முன்னேறும் சமயத்தில் அவர் இறந்துவிட்டார். நாராயண கவியிடம் இவருக்கு அதிக மரியாதை உண்டென்றாலும், 'கன்னியின் காதலி'யில் நான் எழுதிய 'சித்திரப்பாவையம்மா' என்ற பாடலுக்கு இவர் அமைத்த இசை பிரபலமானது.

சுத்தமான வெள்ளை வேட்டிதான் கட்டுவார். சிறுநீர் கழிக்கும்போதுகூட அதை அவிழ்த்து வைத்துவிட்டுத்தான் போவார். ஆள் பளபளவென்று தக்காளிப் பழம் போல் இருப்பார். குறுகிய காலத்தில் அதிகப் புகழ் பெற்றவர். அற்ப ஆயுசில் அகால மரணம்.

இன்றைய இசையமைப்பாளர் சங்கருக்கு (கணேஷ்) உடன் பிறந்த மூத்த சகோதரர்.

திரு ஜி. ராமநாதன் யாரையும் கழிக்க மாட்டார். எனது ஆரம்ப நிலையிலும் என்னை மதித்தவர் அவர். எனது நாற்பது பாடல்களுக்கு அவர் இசையமைத்திருப்பார். கர்நாடகத்தில் அபார ஞானம். நடக்கும் போதும், படுக்கும் போதும் ஏதாவது பாடிக் கொண்டே இருப்பார்.

பாகவதரும், பாபநாசம் சிவனும் ராமநாத அய்யர் இசை என்றால்தான் அந்தப் படத்துக்கு ஒப்புக்கொள்வார்கள்.

'இல்லற ஜோதி'யில் வரும் 'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' என்ற பாடல், கர்நாடக சந்தத்திற்கு நான் எழுதிய முதல் பாடல்.

அந்த நாளிலேயே வார்த்தைகள் அற்புதமாக வந்துவிழுந்திருப்பதை, இன்று நான் மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடகத்தில் மெட்டமைக்க ராமநாதனுக்குப் பத்து நிமிஷம் போதும்.

அடுத்தது, எஸ்.வி. வெங்கட்ராமன். கர்நாடகத்தில் இவரும் ராமநாதனைப் போன்றவரே. பெரும் நடிகர்களுக்கெல்லாம் இவருடைய ஞானத்தில் பக்தியுண்டு. எனது பத்துப் பாடல்களுக்கு இசையமைத்திருப்பார்.

பழைய காலத்துக்கும், நவீன காலத்துக்கும் ஒரு பாலம் போல் அமைந்தவர் திரு. பாப்பா, வானொலியில் வரும் பெரும்பாலான பாடல்கள் இவர் இசையமைத்ததே. எனது பாடல்கள் சுமார் ஐம்பதுக்கு இவர் இசையமைத்திருப்பார். பல பாடல்கள் ஜனரஞ்சகமாக அமைந்திருக்கின்றன. திரு. எஸ்.எம்.எஸ்.ஸைப் போலவே நட்போடு பழகுவதற்கும் இவர் இனிமையானவர். மரியாதை என்றால், மரியாதை.

என்னைக் கண்டதும் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொள்ளக் கூடியவர் அஞ்சலி தேவியின் கணவர், ஆதிநாராயணராவ். தஞ்சை ராமையாதாஸ் எழுதிய கம்பெனியாதலால் எவ்வளவு அர்த்தமில்லாமல் எழுதினாலும், ஏற்றுக் கொள்வார். ஆனால், எனக்கு அப்படிப் பழக்கமில்லையே! அவர் அபார ஞானஸ்தர். கர்நாடகத்தில் மெல்லிசையை அவரிடம் கேட்க வேண்டும்.

எல்லாவற்றையும்விட கை நிறையப் பணம் கொடுப்பதில் காரி, ஓரி, பாரி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். பாட்டினுடைய கடைசி வரியை எழுதும் போதே பணம். வெற்றிலை பாக்குத் தட்டில் எதிரில் வந்து நிற்கும்!

டி. ஜலபதிராவ் ஒரு சுல்தான். தீவிரமான கொள்கைவாதி. மெல்லிசை அற்புதம். 'மீண்ட சொர்க்க'த்தில் வரும், 'துயிலாத பெண்ணொன்று' இன்னும் ஒலிக்கிறதே! நானும் அவரும் சுமார் ஐந்து படங்களுக்குத்தான் வேலை செய்திருப்போம். ஆனால் அதிலேயே எனக்கொரு மனநிறைவு உண்டு.

வயது வந்த பெண்ணுக்கு எவன் முதலில் சுகம் காட்டுகிறானோ, அவனிடமே அவள் பைத்தியமாகி விடுவாள். அதுபோலவே எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் நான் வைத்திருந்த அன்பை இவர்களெல்லாம் பங்குபோட்டுக் கொண்டார்கள்.

சி.ஆர். சுப்பராமனிடம் ஆர்மோனியம் வாசிப்பவராக இருந்தவர், திரு. எம்.எஸ். விசுவநாதன். அவரிடம் வயலின் வாசித்தவர் ராமமூர்த்தி. சுப்பராமன் மரணத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து தொழில் செய்வது என்று முடிவு கொண்டார்கள். அவர்களுக்கு உடனடியாகக் கிடைத்த சந்தர்ப்பங்களில் ஒன்று, ஏ.எல்.எஸ்.ஸின் 'செந்தாமரை'க்கு இசையமைப்பது. அதில்தான் நானும், விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் சந்தித்தோம்.

அந்தப் படத்தில் இரண்டு பாடல்களில் 'அறம்' விழுந்தது.

பாட மாட்டேன் - நான் / பாட மாட்டேன்" - என்று கே.ஆர். ராமசாமிக்குப் பாடல் எழுதினேன். அது முதல் அவர் பாடவே இல்லை.

"ஆவின மழைபொழிய இல்லம் வீழ / அடிமீது அடிவிழுந்த கதையுரைத்த / பாவணன் கற்பனைக்கும் முடிவு கண்டான் / பாவை இவள் துயருக்கோ முடிவே இல்லை"

என்று எழுதினேன். 'செந்தாமரை' படம் படுத்தது படுத்ததுதான், பத்தாண்டாயிற்று எழுந்திருக்க. பீம்சிங்கிற்கு அது முதல் படம். ஆனால் பனிரண்டாவது படமாக வெளிவந்தது.

விசுவநாதன் - ராமமூர்த்திக்கு. 'பதி பக்தி' போன்ற படங்கள் கை கொடுத்தன. ஆனால் பத்தோடு பதினொன்றாகத்தான் அவர்கள் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு உச்சஸ்தானத்தைக் கொடுத்த படம், 'மாலையிட்ட மங்கை'

விசுவநாதனோடு தொழில் செய்தது பற்றி நான் பல்வேறு கட்டங்களில் எழுதியுள்ளேன். அதை மேலும் விவரிக்க வேண்டாம்.

அந்த நெடும் பயணத்தின் அலைஅலையான நிகழ்ச்சிகள், ஆனந்தமான நிகழ்ச்சிகள். 'காதலிக்க நேரமில்லை' படத்திற்காக ஆழியாறு டாமுக்குப் போயிருந்தோம். காட்டுக்கு நடுவிலே அணைக்கட்டு, இதமான சூழ்நிலை, குளுமையான காற்று, அருமையான குளியல், அற்புதமான சாப்பாடு.

மாடியில் இருந்து குதிப்பதாக நகைச்சுவை நடிகர் சதன் சபதம் செய்து, குதித்துக் காலை ஒடித்துக்கொண்டார். அதனால் மற்றவர்கள் படிக்கட்டில் இறங்கவே பயப்பட்டார்கள்.

வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் தனது ஊருக்கு அழைத்திருந்தார். இரவில் திரு. டி.எஸ். பாலையா, விசுவநாதன் இசைக் குழுவினர், சதன், நான் எல்லோரும் போனோம். வேட்டையில் ஒரு கருங்குரங்கு கிடைத்தது. எனக்குக் கொஞ்சம்தான் கொடுத்தார்கள். மற்றவற்றை விசுவநாதனும், சதனும் தின்று விட்டு, ஆட்டுக் கறியைக் கொண்டுவந்து குரங்குக் கறி என்று கொடுத்தார்கள்.

பெங்களூர் உட்லாண்ட்ஸில் விசுவநாதனிடம் தபேலா வாசிக்கும் அனுமந்துக்கும் ஒரு பிரபல நடிகருக்கும் தகராறு. நடிகரை அனுமந்து ஜெயித்து விட்டார். அதற்காக இரவு ஒரு விருந்து. அதில் சுருண்டு விழாதிருந்தவர் அனுமந்து மட்டுமே. காரணம், அவர் அதிகம் குடித்திருந்தார்.

இரவிலே தலையில் துண்டு கட்டிக் கொண்டு பனியனோடு அந்த பெங்களூர் காற்றிலே நானும், விசுவநாதனும் சுற்றிவந்தோம்.

'பாதகாணிக்கை', 'கர்ணன்', 'என் கடமை' எல்லாம் பெங்களூரில்தான்.

'என் கடமை' படத்திற்கான ஏழு பாடல்களை ஒரே நாளில் எழுதிவிட்டோம். தயாரிப்பாளர் நடேசனுக்குக் கோபம் வந்துவிட்டது.

"என்னய்யா, அவனும் யோசிக்காம டியூன் போடுறான். நீயும் யோசிக்காமல் பாட்டுப் போடுறே! பணம் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார்.

பிறகு அவரைத் திருப்தி செய்ய இரண்டு நாட்கள் ஹார்மோனியத்தை உருட்டிக் கொண்டிருந்தோம்.

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்காக எங்களை பம்பாய்க்கே கூட்டிச் சென்றார் ஸ்ரீதர். பாட்டில் வந்தது; பாட்டு வரவில்லை. எங்கள் வாழ் நாட்களிலேயே அதிக நாட்கள் உயிரெடுத்த பாட்டு, அதுதான்!

விசுவநாதன் குழுவில் பொழுது போவது தெரியாது. பிறகு மாமாவோடு பழக்கம் ஏற்பட்டது, ஒரு அற்புதமான அனுபவம்.

- தொடரும்

(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)

Summary

Everyone possesses some form of wisdom I, however, ended up with none at all! A series of articles by poet Kannadasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.