தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 5.
*
ஐந்தாம் படி
சரித்திரம் சொல்வதைத்தான் நான் எழுத முடியும். சரித்திரப்படி மருது பாண்டியருக்கு விரோதியாக உடையணத் தேவர் வெள்ளையர்களோடு சேர்ந்து கொண்டார். ஆனால், என்னை அழைத்த சிவகங்கை ராஜாவின் வாதம், 'முத்துவடுகத் தேவரின் ராஜ்யத்தை, மருது பாண்டியர்கள் அநியாயமாக அபகரித்தார்கள்' என்பது.
ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம். இதில், 'கள்ளர், அகம்படியர்' என்ற தகராறும் இருந்தது.
அந்த விபரத்திற்குள் இறங்கினால், மருது பாண்டியர்கள் துரோகிகள் என்றாகிவிடும்.
நான் எடுத்துக்கொண்ட கதையோ, வெள்ளையர்களை எதிர்த்த கதை. கட்டபொம்மனைவிட உறுதியாகவும், இறுதியாகவும் அதைச் செய்தவர்கள் மருது பாண்டியரே.
என்னிடம் சிவகங்கை ராஜா எவ்வளவோ சொல்ல விரும்பினார்; ஆனால் அது மிகவும் அடக்கமானது என்பது தெரிந்தது. கதை பற்றி எதுவுமே பேசாமல் என்னிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் நானே சிவகங்கை ராஜ பரம்பரையைப் புண்படுத்தாமல் கதையை எடுப்பதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.
சிவகங்கை வரலாற்றை முழுக்க மீண்டும் படித்தேன். வரலாறு இதுதான்.
அந்நாளில் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னவர் விஜய சேதுபதி. அவருடைய திருமகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியார். இந்த அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த நாலுகோட்டை சசிவர்ணத் தேவருக்குக் கட்டிக் கொடுத்தார்கள். சசிவர்ணத் தேவர் அப்போது ராமநாதபுரத்தில் ஒரு சாதாரண தளபதிதான். 'இளவரசியாகப் பிறந்த நான் ஒரு தளபதியுடனோ வாழ வேண்டும்' என்று நாச்சியார் கண்கலங்கினார்.
மகளின் கண்கலங்கப் பொறாத விஜய சேதுபதி, ராமநாதபுரத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்து, இரண்டு பாகத்தை சிவகங்கை சமஸ்தானமாக்கி சசிவர்ணத் தேவரை ராஜாவாக்கினார்.
முன்பு புதுக்கோட்டையும் அதே மாதிரிதான் கிழவன் சேதுபதியால் தன் காதலியான கதலி என்பாளுக்குப் பிரித்துத் தரப்பட்டது. அவளது தம்பிதான் முதல் தொண்டமான்.
அதுபோலவே சிவகங்கையின் முதல் ராஜா, சசிவர்ணத் தேவர்.
அந்தத் தேவருக்கும், அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கும் பிறந்தவர்தான், முத்துவடுகத் தேவர்.
முத்துவடுகத் தேவர் மணந்து கொண்டது வேலு நாச்சியாரை. அவர்களுக்குக் குழந்தைப் பேறில்லை.
காளையார்கோவிலில் முத்து வடுகத் தேவர் கொல்லப்பட்டதும், ராணி வேலு நாச்சியார் "ராணி"யாக ஆண்டு வந்தார்.
அவர் மரணமடையும் தறுவாயில் அரசுப் பொறுப்பைப் பெரிய மருதுவிடம் ஒப்படைத்தார்.
மருது சகோதரர்கள் ஆண்ட காலத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு, ஊமைத்துரை சிறையில் இருந்து தப்பி சிவகங்கையில் அடைக்கலம் புகுந்தார். அதனால் வெள்ளையர் எதிர்ப்பு வந்தது.
அப்போது முத்துவடுகத் தேவரின் பங்காளியான கன்று மேய்க்கி உடையணத் தேவர், வெள்ளைக்காரர்ளோடு சேர்ந்துகொண்டார்.
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதும், உடையணத் தேவரை சிவகங்கைக்கு ராஜாவாக முடிசூட்டினார்கள்.
இந்த வரலாற்றில் வேலு நாச்சியாச்சிரிடமிருந்து பெரிய மருது ஆட்சியை அபகரித்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதுபோலவே, பிள்ளைப் பேறில்லாத முத்துவடுகத் தேவருக்கு உடையணத் தேவர் தூரத்து வாரிசுதான் என்று கூறப்பட்டது.
இவற்றையெல்லாம் நான் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. ஊமைத் துரைக்கு அடைக்கலம் கொடுத்த மருதுபாண்டியரின் உயர்ந்த குணம்; வெள்ளைக்காரனை எதிர்ப்பதில் அவர்கள் காட்டிய நியாயமான, நிதானமான போக்கு; இறுதியில் அந்தக் குடும்பமே ஆண் வாரிசில்லாமல் வெள்ளைக்காரனால் கொல்லப்பட்டது. இவற்றையே நான் ஆசையோடும் அனுதாபத்தோடும் கவனித்தேன்.
அப்போது ' ஸ்பெஷல் ஆம்டு' போலீசிலிருந்த ஒரு முக்குலத்து நண்பர். இதுபற்றிய ஏட்டுப் பிரதிகளையும் கொடுத்து உதவினார்.
'சிவகங்கை சரித்திரக் கும்மி'யைத் தஞ்சை சரஸ்வதி மஹாலிலிருந்து வாங்கினேன்.
நானும், டைரக்டர் சங்கரும், சிவகங்கை சமஸ்தானம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தோம்.
அப்போது மானாமதுரையை அடுத்த 'நரிக்குடி' எனும் ஊரில் ஒரு மெய் சிலிர்க்கும் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நரிக்குடி என்ற ஊரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சத்திரம் உண்டு, அந்தச் சத்திரத்து அடுப்பு நூற்றி ஐம்பது வருஷ காலம் அணைந்ததே இல்லை என்பார்கள்.
அந்தப் பக்கத்தில் காசிக்குச் செல்வோரும், ராமேஸ்வரம் செல்வோரும் இங்கேதான் வந்து தங்கி இருப்பார்கள்.
ஒரு நாள் இரவு அந்தச் சத்திரத்தில் ஒரு அழகான இளம் பெண்ணும், அவளது கணவனும் வந்து தங்கினார்கள், அந்தக் கணவன், கூட ஒரு நாய்க் குட்டியையும் கொண்டு வந்திருந்தான். அந்தப் பெண்ணைக் கெடுக்க விரும்பிய இரண்டு வஞ்சகர்கள் நாயைக் கண்டு பயந்து, அந்த நாயைக் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போகலாம் என்று, அவனை அழைத்தார்கள். அந்த இரவிலே அவனும் வேட்டைக்குக் கிளம்பினான், சிறிது நேரத்தில் நாய் மட்டும் ரத்தக் கறையோடு ஓடி வந்தது.
சத்திரத்தில் படுத்திருந்த இளம் பெண்ணின் சேலையைக் கவ்வி இழுத்தது. நாய் மட்டும் தனியே வந்திருப்பதைக் கண்டு பயந்து அவளும் எழுந்து ஓடினாள்.
நாய், பக்கத்தில் உள்ள ஒரு குளத்தைக் காட்டிற்று. அதில் இறங்கி அவள் பார்த்தாள். அவள் கணவனின் சடலம் அங்கு வைக்கப்பட்டு அதன் மீது ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
இரவோடு இரவாக அவள் சிவகங்கைக்கு ஓடி, கண்ணகியைப் போலக் கதறினாள். நீதி காக்கும் மருதுபாண்டியர்கள் உடனே நரிக்குடிக்கு விரைந்தார்கள். கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க ஆணையிட்டார்கள்.
காலையில் அந்த இளம் பெண், சிதையை அடுக்கச் சொல்லி, கணவனின் உடலோடு தானும் தீக்குளிக்கப் போவதாகக் கூறினாள். மருதுபாண்டியர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் உடன்கட்டை ஏறிவிட்டாள்.
சிதையில் படுப்பதற்கு முன்னால், தான் கட்டியிருந்த பட்டுப் புடவை, அணிந்திருந்த கருகமணி ஆகியவற்றைச் சுழற்றி வைத்துவிட்டு ஒரு மஞ்சள் புடவையைக் கட்டிக் கொண்டாள்.
இன்று வரையும் அந்தப் பட்டுப் புடவையும் கருகமணியும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.
மருதுபாண்டியரின் பெண் வழிப் பேத்தி ஒருத்தி சத்திரத்திற்குப் பக்கத்தில் உள்ள சிறு வீட்டில் அவற்றைப் பாதுகாத்து வந்தபோது நாங்கள் போனோம். அந்தக் கூரை வீட்டில் ஒரு பரண் மீது ஒரு ஓலைக் கடகத்தில் அவை வைக்கப்பட்டிருந்தன.
1790-ம் ஆண்டு வைக்கப்பட்ட அந்தப் பெட்டியை வீட்டுக்கு ஓலை மாற்றும்போதுகூட கீழே இறக்கியதில்லையாம்! பரண் மீது ஆயிரக்கணக்கான மாலைகள் கிடந்தன. ஏராளமான குடும்பப் பெண்கள் வழிபடுவதற்கு அது அடையாளம்.
நாங்கள் வந்துள்ள காரணத்தைச் சொல்லி, அந்தப் பெட்டியை இறக்கிக் காட்டச் சொன்னோம். ஒரு மணி நேரம் கெஞ்சி புதுப் பெட்டி வாங்கி பூஜை செய்து வைப்பதாகச் சொன்ன பிறகு, அந்த மூதாட்டி இறக்கிக் காட்டச் சம்மதித்தார்.
பெட்டியை இறக்குவதற்குத் தொட்டபோது ஒவ்வொரு பகுதியும் கையோடு வந்தது. அப்படியும் விடாமல் இறக்கிப் பார்த்தோம். அந்தப் பட்டுப் புடவையும் சாம்பல்போல் ஆகி இருந்தது. கருகமணி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
ஒரு குலமகள் இப்படியும் இருக்க முடியுமா? காவியத்துக் கண்ணகியும், சீதையும் பொய்யல்லவே! அப்படி ஒரு மனைவி கிடைத்தால் அவனல்லவா அதிருஷ்டக்காரன்!
அந்தப் பெட்டியைப் பார்வையிடும்போதே அந்த மூதாட்டி பாட்டாகப் பாடினார். அந்தப் பாட்டின் இடையிலேயே நாடார் கடையிலும் செட்டி கடையிலும் பெட்டி வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
காரணம் புரியவில்லை; நானும் செட்டியார் ஆதலால் காரணம் கேட்கவில்லை.
அந்த நிகழ்ச்சியை அப்படியே சிவகங்கைச் சீமைப் படத்தில் வைத்தேன். உடன் கட்டை ஏறுவதை, தணிக்கை போர்டு அதிகாரி ஜி.டி. சாஸ்திரி மறுத்துவிட்டார்.
பல நேரங்களில் நரிக்குடிக்குப் போய் மீண்டும் வணங்கி வரவேண்டும் போல எனக்குத் தோன்றும்.
திருப்பத்தூர் சிறைச்சாலையில் பெரிய மருது தூக்கிலிடப்படும்போது, அவரது கடைசி வேண்டுகோளுக்கு அனுமதி தரப்பட்டது.
தான் மானியம் கொடுத்தவற்றை அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தான் இறந்ததும் தன் தலையை எடுத்துக்கொண்டுபோய் காளையார்கோவில் சந்நிதிக்கு எதிரே புதைத்துவிட வேண்டும் என்றும் பெரிய மருது கேட்டுக்கொண்டார்.
வெள்ளைக்காரன் அவரது இரண்டாவது வேண்டுகோளைத்தான் ஏற்றுக்கொண்டான். மற்றவற்றில் நாணயம் கெட்டவனாகவே நடந்து கொண்டான்.
பெரிய மருதுவின் தலை புதைக்கப்பட்ட காளையார்கோவிலை நாங்கள் பார்த்தோம். தலை எப்போதோ களவு போய்விட்டது. ஆனால் காளையார்கோவில் மூன்று போர்கள் நடந்தவிடமல்லவா! இரண்டாயிரம் வருஷத்துக் கோவில் அல்லவா! 'கானப் பேர் எயில்' என்று புகழ்பெற்ற கோட்டையல்லவா!
தெப்பம் மிதக்கும் திருக்குளத்தின் அருகே நான் மெய்மறந்து நின்றேன். மருது பாண்டியர் கட்டிய மண்கோட்டை சரிந்து கிடப்பதைக் கண்டேன். சுந்தரபாண்டியன் உருவாக்கிய கோபுரத்தைப் பார்த்தேன்.
நான் திகைத்து நிற்க நிற்க, சங்கருக்கு குஷி. 'ஏதோ கற்பனை பிறக்கிறது' என்று ஆனந்தப்பட்டார்.
பிறகு அரண்மனை சிறுவயலுக்குச் சென்றோம். அங்கு மருது பாண்டியரின் அரண்மனை இருப்பதால் அந்தப் பேர் வந்தது.
அரண்மனை என்றால் என்ன? பெரிய மண் வீடு; அதன் மீது ஓடு; அவ்வளவுதான்!
சுற்றிலும் இருந்த சிறு தேவதைக் கோவில்கள் அனைத்தையும் பார்வையிட்டோம்.
அக்காலத்தில் எப்படி ஆடை அணிமணிகளை அணிந்திருப்பார்கள் என்று நான் கேட்கவோ, பார்க்கவோ அவசியமில்லையே! நான் அந்த மண்ணிலேயே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த குடிமகனாயிற்றே!
என் முப்பாட்டனார் நல்லான் செட்டியார் மருதுபாண்டியர் ஆட்சிக் காலத்தில் பிறந்தவராயிற்றே!
கதையை எழுதி முடித்தேன். தமிழை ஒழுங்காகப் பேசும் நடிக, நடிகையரைத் தேடினேன்.
எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.கே. பகவதி, பி.எஸ். வீரப்பா, எம்.கே. முஸ்தபா, எம்.என். ராஜம், எஸ். வரலட்சுமி, தாம்பரம் லலிதா; இவர்களைவிட யார் தமிழ் பேசப் போகிறார்கள்?
- தொடரும்
(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)
Summary
Maruthu Pandiyars opposed the British more than Kattabomman: series of articles by poet Kannadasan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்ஜிஆர் ஆசைப்பட்டதால் மதுரை வீரனுக்கு எழுதினேன்... கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4

மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3









