புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

ஹிந்துக்கள் மீதான தாக்குதல், இந்திய எதிர்ப்பு மனநிலை, பாகிஸ்தானுடன் நெருக்கம் போன்றவை அதிகமாகி உள்ள இந்தச் சிக்கலான சூழலை இந்திய அரசு அதிக கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
ENS
Updated on
2 min read

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன. அந்த நாட்டில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே ஆகி உள்ளது. ஷரியத்பூர் மாவட்டத்தில் தமுத்யா பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் கோகோன் சந்திரதாஸ் (50) கடந்த புதன்கிழமை (டிச. 31) இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது ஒரு கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். குளத்தில் குதித்து தப்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை (ஜன. 3) உயிரிழந்தார்.

முன்னதாக, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மொண்டல் (30) கடந்த டிச. 24-ஆம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதற்கும் முன்னதாக, மத நிந்தனை செய்ததாகக் கூறி மைமென் சிங் பகுதியில் 25 வயதேயான தீபு சந்திர தாஸை ஒரு கும்பல் கடந்த டி.ச. 18-ஆம் தேதி அடித்துக் கொலை செய்து அவரது சடலத்தை மரத்தில் தொங்கவிட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியது.

தனிநபர்கள் மீதான தாக்குதல் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஹிந்துக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. பிரோஜ்பூர் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்னர் ஹிந்துக்களின் ஐந்துவீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். கடந்த 15 நாள்களில் இதுபோன்று 8 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பின்னர், 16 மாதங்களில் 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளதாக இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவங்கள் தொடரும் அதே நேரம், முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால் பல்வேறு மத அடிப்படைவாதக் குழுக்களால் இந்திய எதிர்ப்பு தூண்டப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த சரோட் இசைக் கலைஞர் ஷிராஸ் அலி கான் நான்கு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த டிச. 16-இல் வங்கதேசம் சென்றார். ஆனால், அவர் தன்னை இந்தியன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அவருக்கு நன்கு அறிமுகமான உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தினர். தான் முஸ்லிம் என்பதாலும், வங்க மொழி பேசத் தெரிந்ததாலும் இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்து தப்பியதாக ஷிராஸ் அலி கான் கூறியுள்ளார். ஹிந்துக்கள் மீதான தாக்குதல், இந்திய எதிர்ப்பு போன்றவற்றுடன் அந்த நாட்டின் அரசியல் சூழலே நிச்சயமற்றதாக மாறி உள்ளது.

அந்த நாட்டின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா முதுமை சார்ந்த பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் கடந்த டிச. 30-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது கணவர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் 1981-இல் கொல்லப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்த அவர், 1990-இல் ராணுவ சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக தொடக்கத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவர் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து செயல்பட்டார். ஆனால், காலப்போக்கில் இருவரும் அரசியல்ரீதியாக எதிரிகளாக மாறினர். அவர்கள் இருவரையும் மையமாகக் கொண்டே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அரசியல் இருந்தது.

மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள சூழலில், 2026 பிப். 12-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்குப் பின்னர் புதிய தலைமுறை ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க உள்ளனர். ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் பண மோசடி, அவரைக் கொலை செய்ய சதி போன்ற வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60), கடந்த 2008-இல் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். அவர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிச. 25-இல் நாடுதிரும்பி உள்ளார்.

ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் என்றே கருதப்படுகிறது.

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளன என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 1971 வங்கதேச விடுதலைப் போராட்டத்துக்குப் பிறகு உத்தி சார்ந்த பெரும் சவாலை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அவாமி லீக் கட்சியின் வீழ்ச்சி, இளைஞர்களின் தேசியவாத கருத்தியல் எழுச்சி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கம், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஆட்சியாளர்களின் நெருக்கம் போன்றவற்றால் இந்தியாவுடனான உறவு சீர்குலைந்துள்ளது. மறு மதிப்பீடு செய்யவில்லை என்றால், புவியியல் உத்திசார் உறவை இந்தியா இழக்க நேரிடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்க தேசம் என்று நாடு திரும்பியபோது தாரிக் ரஹ்மான் கூறினாலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் போன்று ரஹ்மானின் பிஎன்பி கட்சி இந்தியாவுக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டதில்லை. மேலும், அந்தக் கட்சியே அரசியல் வன்முறைக்குப் பெயர் பெற்றது.

2024 மாணவர் எழுச்சிக்குப் பின்னர் உருவான தேசிய குடிமக்கள் சுட்சி, மத அடிப்படைவாத அமைப்பான ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்புடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர், ஆட்சி அமைப்பதில் இந்தக் கூட்டணி பங்கு வகிக்கும் சூழல் உருவானால், அது இந்தியாவுக்குப் பெரும் சோதனையாகவே அமையும்.

ஹிந்துக்கள் மீதான தாக்குதல், இந்திய எதிர்ப்பு மனநிலை, பாகிஸ்தானுடன் நெருக்கம் போன்றவை அதிகமாகி உள்ள இந்தச் சிக்கலான சூழலை இந்திய அரசு அதிக கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com