தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துப்பு துலங்காத நகை திருட்டுக்கு இழப்பீடு!

திருட்டுக் குற்றத்தால் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பதற்கு பல நாடுகளில் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜனவரி 2026, 10:51 pm

துப்பு துலங்காத நகை திருட்டு வழக்கு ஒன்றில், திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பில் 30% தொகையை திருட்டு குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றமும் இம்மாதிரியான தீர்ப்பு ஒன்றை கடந்த செப்டம்பர் மாதத்தில் வழங்கியுள்ளது. ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளச் சென்று கொண்டிருந்த மூத்த குடிமக்கள் தம்பதியினரிடம் வழிப்பறி செய்யப்பட்ட 17.5 சவரன் தங்க நகைகள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் காவல்துறையினரால் மீட்கப்படவில்லை. எனவே, வழிப்பறியால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த காலத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படுவது நீதி பரிபாலனமாகக் கருதப்பட்டது. ஆனால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவரின் இழப்பு, வேதனை ஆகியவை நீதி வழங்கல் முறையில் முக்கியத்துவம் பெறவில்லை. குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிக்காமல், நீதி வழங்கல் முழுமையடையாது என்ற கருத்து 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சர்வதேச அளவில் உருவானது.

உலகிலேயே முதன்முறையாக நியூஸிலாந்து நாட்டில் 1963-ஆம் ஆண்டில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு நிதி உதவியுடன் கூடிய இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா விடுதலையடைந்த பின்னர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 357-இன்படி, குற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது குற்றவாளிக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் இருந்தோ அல்லது குற்றவாளியின் சொந்த நிதியில் இருந்தோ குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டது.

ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளிலும், நீதிமன்ற விசாரணையில் குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்க முடியாமல் விடுதலையில் முடிவடையும் வழக்குகளிலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இயலாத நிலை நிலவியது.

இந்தச் சூழலில், 2008-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பிரிவு 357-அ சேர்க்கப்பட்டது. இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, ஒவ்வொரு மாநில அரசும் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக "பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டம்' ஒன்றை அரசு நிதியில் உருவாக்க வேண்டும். குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது காயம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மறுவாழ்வு சீரமைப்புக்கு இந்த நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்.

குறிப்பாக, பாலியல் வன்கொடுமை, அமிலத் தாக்குதல், கொலை, நிரந்தரமாக உடல் உறுப்பு பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்தும் கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகள் அடையாளம் தெரியாவிட்டாலும் இழப்பீடு வழங்கவும் இந்தச் சட்டம் இடமளிக்கிறது.

2024-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டமும் (பி.என்.எஸ்.எஸ்.) குற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்புக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தற்போதைய சட்ட விதிகளின்படி, குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு, அவரது உடல் உறுப்புகளில் ஏற்படும் இழப்பு அல்லது காயம், அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சீரமைப்பு மேற்கொள்வதற்காக பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படுகிறது.

ஆனால், துப்பு துலங்காத திருட்டுக் குற்றங்கள் மற்றும் திருட்டுப் போன பொருள்களை மீட்க முடியாத திருட்டு குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கும் நடைமுறை நம் நாட்டில் இல்லை. இந்நிலையில், நகை திருட்டு வழக்குகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று அண்மையில் இரண்டு தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தென் மாவட்டங்களில் பதிவான நகை திருட்டு வழக்குகள் சிலவற்றில் காவல் துறையினர் துப்பு துலக்கி, திருட்டுப் போன நகைகளைக் கண்டுபிடிக்காமல், அவ்வழக்குகளைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் என்று முடிவு செய்துவிட்டனர் என்றும், அதனால் திருட்டுப் போன நகைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நகை திருட்டு வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட நபருக்கு திருட்டுப் போன நகைகளின் மொத்த மதிப்பில் 30% இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கியுள்ளது.

கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகளில் மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், திருட்டுப் போன பொருள்களின் மதிப்பில் 30% அல்லது ரூ.5 லட்சம் - இவற்றில் எது குறைவாக உள்ளதோ, அதை இழப்பீடாக அரசு நிதியில் இருந்து வழங்கலாம் என்ற பரிந்துரையை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

தங்க நகைகள் அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தங்க ஆபரணங்கள் செய்வதற்காக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 100 மெட்ரிக் டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழக குடும்பங்களில் சுமார் 6,720 மெட்ரிக் டன் தங்க ஆபரணங்கள் உள்ளன என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தங்க ஆபரணங்கள் மீது அதீத ஆர்வம் தமிழ்நாட்டில் இருந்து வருவதால், தமிழ்நாட்டில் நடைபெறும் திருட்டுகள் பெரும்பாலும் நகை திருட்டுகளாகவும், நகை வழிப்பறிகளாகவும் இருக்கின்றன.

நம் நாட்டிலுள்ள காவல் நிலையங்களில் 2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 62.4 லட்சம் குற்ற வழக்குகளில் 6.9 லட்சம் வழக்குகள் திருட்டு வழக்குகள். அவற்றால் ஏற்பட்ட இழப்பு ரூ. 6,917 கோடி என்றும், பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளில் 28% வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.2,065 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் தேசிய ஆவணக்கூட அறிக்கை கூறுகிறது.

அனைத்து நகை திருட்டுகள் மீதும் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்குகள் பதிவு செய்தாலும், திருட்டுப் போன நகைகளின் அளவு மற்றும் மதிப்பைக் குறைத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அனைத்து நகை திருட்டுகள் குறித்து முறையாக வழக்குகள் பதிவு செய்தால், திருட்டு வழக்குகளின் எண்ணிக்கையும், திருட்டுப் போன நகைகளின் மதிப்பும் தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருக்கும்.

துப்பு துலங்காத நகை திருட்டுகளுக்கு அரசு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என்ற நிலை நடைமுறைக்கு வந்தால், அரசு நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக, காவல்துறையினர் நகை திருட்டு மற்றும் நகை வழிப்பறி வழக்குகள் பதிவு செய்வதைக் கணிசமாக குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. இழப்பீட்டுத் தொகை பெறுவதற்காக, பொய்யாக நகை திருட்டுப் புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப்படுவதும் கணிசமாக அதிகரிக்கும்.

திருட்டு குற்றத்தால் வெறுமனே ஏற்படும் பொருள் இழப்புக்கு அரசு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கும் நடைமுறை வெளிநாடுகளில் இல்லை. வன்முறையுடன் கூடிய குற்றச் செயலால் ஏற்படும் காயம் உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு பல நாடுகளில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

நம் நாட்டில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் திருட்டு வழக்குகளில் 72% வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலும், திருட்டுப் போன பொருள்கள் மீட்கப்படாமலும் உள்ளன. இந்த சூழலில், திருட்டுக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இழப்புக்குத் தீர்வு என்ன?

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பில், காவல் துறையினருக்கு நவீன புலன் விசாரணை தொடர்பாக பணியிடைப் பயிற்சிகள் வழங்க வேண்டும்; துப்பு துலங்காமல் உள்ள திருட்டு வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு புலன் விசாரணை குழுக்கள் அமைக்க வேண்டும்; 5 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பு துலங்காமல் உள்ள திருட்டு வழக்குகளை உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வழங்கியுள்ள பரிந்துரைகளை காவல் துறை தலைமையகம் உடனடியாக பரிசீலனை செய்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருட்டுக் குற்றத்தால் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பதற்கு பல நாடுகளில் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தங்க நகைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தமிழகத்தில், நகை காப்பீட்டுத் திட்டத்தை எளிமையாக்கி, அனைத்துத் தரப்பு மக்களும் அத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கான முயற்சி மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

காவல் துறை உயர் அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.