

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது. அதில் சென்னை வண்ணாரப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கினார் அந்த இயக்கத் தலைவரான ப.ஜீவானந்தம்; வெற்றியும் பெற்றார்.
1955 செப்டம்பர் 29-ஆம் தேதி ஜீவா சட்டப்பேரவையில் "நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்ஜியத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது எனது கோரிக்கை. அதேபோல் மலையாளிகளும், கன்னடர்களும் இந்த ராஜ்ஜியத்தில் இருக்கும் வரையிலும் மலையாளமும், கன்னடமும் இங்கு ஆட்சி மொழியாக இருந்து வரவேண்டும் (அப்போது மொழிவழி மாநிலம் பிரிக்கப்படவில்லை). இதுதான் அடிப்படை நியதி. கல்விக் கூடங்களிலும், ஆட்சி மன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், நிர்வாகத் துறையிலும் பிரதேச மொழியே இருக்க வேண்டும். ஆகவே, வெகு சீக்கிரமாகத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உயர்நீதிமன்றத்திலும் தமிழ்மொழிதான் கையாளப்பட வேண்டும்' என்று பேசினார்.
இதன் தொடர்ச்சியாக "பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஆங்கிலம்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக மத்தியில் இருந்து வருகிறது. இனிமேலும் இது ஆதிக்கம் செலுத்தும் மொழியாக இருக்கக் கூடாது' என்று குறிப்பிட்ட ஜீவா 'நாடாளுமன்றத்துக்கு எல்லா பிரதேசங்களில் இருக்கக் கூடியவர்களும் அங்கத்தினர்களாக வருகிறார்கள். எந்த மொழி பேசும் ராஜ்ஜியத்திலிருந்து அங்கத்தினர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தாலும் அவர்கள் முழுமூச்சுடன் தங்களுடைய
பிரதேச மக்களின் கருத்துகளை அங்கு பிரதிபலிக்கக் கூடிய வகையில் வாய்ப்பிருக்க வேண்டும். இந்தியாவின் தேசிய மொழிகளாகவுள்ள அத்தனை மொழிகளுக்கும் அங்கு இடம் இருக்க வேண்டும்' என்று எவ்விதப் பிசிறலும் இன்றி அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.
அதே உரையில் "ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கு என்ன உரிமை நாடாளுமன்றத்தில் இருக்கிறதோ அதே உரிமை தமிழ் பேசும் பிரதிநிதிகளுக்கும் இருக்க வேண்டும்' என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இவ்வுரை நிகழ்த்தப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1953, 1954}ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று
அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
சென்னை ராஜ்ஜியத்துக்கு "தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று 1956 மார்ச் 28 , 29 ஆகிய இரு தேதிகளில் பலபுள்ளிவிவரங்கள் அடங்கிய இரண்டு உரைகளை சட்டப்பேரவையில் நிகழ்த்தினார். "சட்டப்பேரவை, இலக்கியச் சொற்போர் மன்றமாக ஆரம்பித்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். தமிழ் இலக்கிய அறிவைக் கொண்டு, தமிழ் வரலாற்று அறிவைக் கொண்டு குறிப்பிட விரும்புகிறேன்' என்று உரையைத் தொடங்கிய ஜீவா "தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டியதற்கான காரண காரியங்களை அவையே பிரம்மிக்கும் அளவுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களை முன்வைத்து ஒரு தேர்ந்த சொற்பொழிவாளராக விளங்கும் வழக்குரைஞரைப் போல பேசினார்.
அந்த உரையில் மகாகவி பாரதியார், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் என மகத்தான தமிழ்க் கவிஞர்களின் "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட வேண்டியதற்கான அடிப்படைகளை வகுக்கும் கவிதைகளை அவருக்கே உரிய கம்பீரத்தோடு அவையை சிந்திக்கத் தூண்டும் வகையில் எடுத்துரைத்தார்.
ஜீவா பேசி முடித்தவுடன் அவையிலிருந்த இரண்டொரு உறுப்பினர்கள் அவர் பேசியதைக் குறிப்பிட்டு, ஜீவாவின் வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டுமென்று பேசினர். கடைசியாக அன்றைய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் "தமிழை வளர்ப்பதற்கு அனைவரும் இணைந்து பாடுபடலாம். அதற்காக மெட்ராஸ் அல்லது சென்னை என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை' என்றுஅரசின் நிலையைத் தெளிவுபடுத்தினார்.
இதற்குப் பிறகும் ஆவேசத்துடன் எழுந்த ஜீவா "தமிழ்நாடு என்கிற பெயர் சூட்ட வேண்டும் என்கிறவர்கள் தமிழிலேயே ஆட்சி நடத்த வேண்டும்; கல்லூரிகளில் விஞ்ஞானப் பாடங்களை தமிழிலேயே போதிக்க வேண்டும்; தமிழ் வளர வேண்டும்; தமிழ்க் கலை ஓங்க வேண்டும் என்கிற நல்லெண்ணம் படைத்தவர்கள், தமிழுடம்பில் தமிழ் ஆத்மா விளங்க வேண்டும் என்பவர்கள்' என்று இடி முழக்கமிட்டாற்போன்று கொதித்தெழுந்து பேசினார்.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலை
களிலும் தமிழ்மொழிதான் பயிற்சி மொழியாக இருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் பலமுறை உரை நிகழ்த்தியது மட்டுமல்ல, தனது நா வன்மையால் நாடெங்கும் இடையறாது அது குறித்து பரப்புரை செய்தவர் ஜீவா. ஒரு மொழியாக ஒரு பாடமாக ஆங்கிலத்தை அறிந்துகொள்ள படிக்கலாமே தவிர, அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியில் கற்பித்தால் மட்டுமே இயற்கையாகவும் இயல்பாகவும் மாணவர்களின் அறிவு வளரும் என்பதில் உறுதியாக இருந்தவர் ஜீவா. ரஷியா, சீனா, ஜப்பான்,ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன என்பதைப் பல சிந்திக்கத்தக்க உதாரணங்களுடன் நாடெங்கும் கருத்து விதை விதைத்தார். உலகெங்கிலுமுள்ள தலைசிறந்த, கருத்தாழம் மிக்க நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து உலக அறிவை தமிழ் தமதுடமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் ஜீவா வலியுறுத்தினார்.
மகாகவி பாரதியை, அவரது தமிழை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எடுத்துச் சென்று ஒரு தமிழ் எழுச்சியையே ஏற்படுத்தியவர் ஜீவா. மகாகவி பாரதியின் படைப்புகளின் மீது காப்புரிமை பெற்றிருந்தோரிடமிருந்து அவற்றை மீட்டு அவை நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்ற உரத்த குரலை 1947}இல் மகாகவி பாரதியார் மணி மண்டபத் திறப்பு விழா
விலேயே அன்றைய முதல்வர் ராஜாஜி, கல்கி ஆகியோர் முன்னிலையில் தனது வீராவேச உரையின் மூலம் எழுப்பியவர் ஜீவா. பின்னர், அவை நாட்டுடைமையாக்க சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்தார். மகாகவி பாரதியாரின் பாடல்கள் தேச உடைமையாக்கப்பட்டன.
1954}இல் காரைக்குடி கம்பன் விழாவில் "கம்பன் கண்ட தமிழகம்' என்ற தலைப்பில் முதன்முதலாக ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கம்ப இலக்கிய உரையாற்றத் தொடங்கிய ஜீவா, 1962 வரை ஒன்பது ஆண்டுகள் இடைவெளியின்றி ஒன்பது வித்தியாசமான கம்பன் தலைப்புகளில் முத்திரை பதிக்கத்தக்க வரலாற்றுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விழாவின் நிறைவு நிகழ்வு நடைபெறும் கம்பன் கோயில் உள்ள நாட்டரசன் கோட்டை யிலும் சில உரைகள் நிகழ்த்தினார்.
கம்பனிலும் மகாகவி பாரதியிலும் கரை கண்டவர் ஜீவா என்றாலும் சங்கத் தமிழ், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அவரின் சமகாலக் கவிஞர்களின் பாடல்கள் வரை மூழ்கி முத்தெடுத்தவர். தமிழ் வளர்ச்சியை ஒரு வேள்வியாக்க வேண்டும், தமிழில் மக்கள் இலக்கியம் மண்டிக் கிடக்க வேண்டும், தமிழின் தனித்துவம் தரணியெங்கும் எட்ட வேண்டும் என்ற வேட்கையில் ஜீவாவால் 1961 மே 28 , 29 , 30 ஆகிய மூன்று நாள்கள் கோவையில் தமிழக
மெங்குமிருந்து வரவழைக்கப்பட்ட 400 தமிழ்ப் பேராளர்களடங்கிய அமைப்பு மாநாடு நடத்தப்பட்டு "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்' என்ற மகத்தான தமிழ் பேரமைப்பு தொடங்கப்பட்டது.
அதை ஓர் அரசியல் கட்சியின் அங்கமாக ஜீவா எண்ணவில்லை. தமிழ்நாட்டுக்கே தமிழ்ப் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் தன்னிகரற்ற}தமிழர்களின் தன்னலமற்ற உயிர்க் கூடலாகவே அதை வழி நடத்தினார். ஆகவேதான் அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த அமைப்பு உயிரோட்டத்துடன் இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் முன்னோட்டமாக விளங்கியவை 1937} இல் தொடங்கப்பட்ட "ஜனசக்தி' என்ற அரசியல் இதழும்,
1958}இல் தொடங்கப்பட்ட "தாமரை' என்ற இலக்கிய இதழுமாகும்; இரண்டுக்கும் ஆசிரியர் ஜீவா. இதற்கும் முன்பாகவே பெரியாரின் சுயமரியாதை இயக்க இதழ்களான குடியரசு, புரட்சி, சமதர்மம், பகுத் தறிவு உள்ளிட்ட இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் ஜீவா.
ஜீவாவின் கவிதைகள் பாட்டாளிகளைத் தட்டியெழுப்பிய தமிழ்ப் பரணி எனலாம். "துடிக்கும் தமிழ் இதயம் ஜீவா' என்பார் திரு.வி.க. "தமிழில் மிகவும் பாண்டித்யம் வாய்ந்தவர். கம்பனில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தமிழ் இலக்கியத்தில் சிறந்த மேதை; ஏன்... தமிழ் வெறியர் என்று சொன்னாலும் வியப்பதற்கு இல்லை' என்கிறார் தமிழ்க் கடல்ராய.சொ. "பெருவாழ்வு பெற்ற அமரர் ஜீவாவைப் போன்ற ஆசானை என் தலைமுறையில் கண்டதில்லை' என்றார் மு.வ.
ஜீவா... தியாகத் தழும்பேறிய விடுதலைப் போராட்ட வீரர், காந்தியத் தொண்டர், சுயமரியாதைச் சுடர் என்று பயணித்து தமிழ் மண்ணில் தன்னிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர் என்ற பரிணாமம் பெற்றவர். தமிழ்ச் சொற்பொழிவுக்கு இலக்கணம் வகுத்தவர்; நற்றமிழ்க் கவிஞர்; தமிழ் இதழியலில் ஆழங்காற் பட்டவர்; தமிழ் வளர்ச்சிக்கு இடையறாது சிந்தித்துச் செயலாற்றி அதற்கான ஒரு பேரமைப்பை உருவாக்கி வளர்த்தவர்; எழுதிக் குவித்தவர்.
தமிழ் மண்ணின் தனித்துவம்மிக்க அரசியல் தலைவராக விளங்கி இத்தனை அரும் பெரும் செயல்கள் புரிந்து தனது 56}ஆம் வயதிலேயே எதிர்பாராத சூழலில் மாரடைப்பால் மறைந்தவர். என்றென்றும் தமிழர் உள்ளங்களில் மங்காப் புகழுடன் வாழ்பவர்.
நாளை (ஜன.18) கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவா நினைவு நாள்.
கட்டுரையாளர்:
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.