கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே செவ்வாயில் குடியேறுவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. தற்போது, அங்கு அபரிமிதமாகக் கிடைக்கும் பனிக்கட்டிகளை வைத்து குடியிருப்புகளை அமைக்க இயலும் என்று அறிவியலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு பனிக்கட்டியால் ஆன ஒரு நகரமே அமைக்கத் திட்டமிடுகின்றனர். அமெரிக்க புவியியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 5.46 கோடி கி.மீ. தொலைவில் செவ்வாய்க் கிரகம் அமைந்துள்ளது. பனிக்கட்டியாக உறைந்துள்ள நீர் மற்றும் சிறிதளவு காற்று (பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடு) போன்றவை கூடுதல் தகுதிகள். சூரிய குடும்பத்தில் நான்காவது கோளாக செவ்வாய் அமைந்துள்ளது. பூமிக்கு அடுத்து அமைந்துள்ள கோள் என்பதால், அண்டை நாடுபோல
அண்டைக்கோள். குறிப்பாக, மிகவும் வேறுபட்ட தட்பவெப்ப நிலை. அதாவது, அதிகபட்சமாக 70 டிகிரி பாரன்ஹீட் ; குறைந்தபட்சமாக மைனஸ் 225 முதல் மைனஸ் 153 டிகிரி பாரன்ஹீட். அதாவது அங்கிருக்கும் வளிமண்டலத்தால் பூமியின் வளிமண்டலத்தைப் போன்று சாதகமாக சூரிய வெப்பத்தைத் தடுக்கவும் முடியாது; தக்கவைக்கவும் முடியாது. சூரியனிலிருந்து வரும் பெரும்பாலான வெப்பமும் செவ்வாயின் தரையைத் தாக்கும். சூரியன் மறையும்போது வெப்பமும் இருக்காது; குளிர்ந்துவிடும்.
செவ்வாய்க்கு முன்பாக இருக்கும் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், பூமியின் வளிமண்டலம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை கூடுதலாக யோசிக்க வேண்டும். இவ்வாறான குறைகள் இருந்தாலும், இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் செவ்வாய் கோளை மனிதர்கள் குடியேற தகுதி படைத்ததாக்கி விடலாம் எனக் கணிக்கின்றனர்.
மனிதர்களை அங்கு குடியேற்ற வேண்டுமானால் அங்குள்ள வாழ்வியல் வாய்ப்புகளை ஆராய வேண்டும். அங்கிருக்கும் பனிக்கட்டியை எவ்வாறு தண்ணீராக மாற்றலாம்? விவசாயம் ஏதும் செய்து பார்க்கலாமா? என்னென்ன கனிம வளங்கள் உள்ளன? இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முதற்கட்டமாக அங்கு சிலர் சென்று தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு அங்கு சென்று தங்குவோர் எப்படி தங்குவர்? அவர்கள் அங்கு தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உறைவிடங்களை உருவாக்கத் திட்டமிடுகின்றனர். அங்கிருக்கும் பொருளான பனிக்கட்டியைக் கொண்டே உறைவிடங்களை உருவாக்க இயலும் என்ற சாத்தியத்தைக் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி செவ்வாயில் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த உதவியாக இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று பனிக்கட்டி; மற்றொன்று ரெகோலித் என்று சொல்லப்படும் பொருள் (நம்மஊர் மண், பாறை போன்றது). இதை வெட்டியெடுக்க அதிக அளவிலான சக்தி மற்றும் இயந்திரங்கள் தேவை. இதனால், அங்கிருக்கும் பனிக்கட்டியை ஹைட்ரோஜெல் போன்ற பொருளுடன் இணைத்து கட்டுமானப் பொருளாக மாற்றலாம் என்று முடிவுக்கு வருகின்றனர். இவ்வாறு தயாராகும் பொருளானது நல்ல காப்புப் பொருளாகவும் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் சுமார் ஐந்து மில்லியன் கியூபிக் கி.மீ. அளவுக்கு பனி படர்ந்துள்ளது. இந்தப் பனிக்கட்டியை உருக வைத்து "இக்லூ' அமைப்புகள் போன்ற டோம்களை உண்டாக்க முடியும். இதனால், கான்கிரீட் போன்ற பொருள்களை வைத்து ஒரு கூரை போடுவதற்கான தேவை இருக்காது என்றும் கண்டறிந்துள்ளனர்.
செவ்வாயானது மிகவும் வேறுபட்ட தட்பவெப்பம் கொண்ட பகுதி. அங்கு உருவாக்கப்படும் உறைவிடத்தின் அமைப்பு வெப்பத்தை வெளியே செல்ல விடாத அளவுக்குத் தடுக்கும் என்றும் நம்புகின்றனர்.
அறை வெப்பநிலையை சுமார் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை கொண்டு வந்து விட்டு மேலும் தேவைப்படும் வெப்பத்துக்கு ஹீட்டர் போன்றவற்றை வைத்து சமாளிக்கலாம் என்றும் யோசிக்கின்றனர்.
இவ்வாறான உறைவிடங்களை சூரியன் கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றுவது அடுத்த சவாலாக உள்ளது. ஏனென்றால், செவ்வாயின் வளிமண்டலமானது கதிர்வீச்சுகளை திருப்பி அனுப்பும் அளவுக்கு சக்தி வாய்ந்தது அல்ல. வியப்பான விஷயம் என்னவென்றால், பனிக்கட்டியானது கதிர் வீச்சுகளைத் தடுக்கவல்ல ஒரு பொருளாகவும் இருக்கிறது. ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தாக்கு பிடிக்கும் வல்லமை பனிக்கட்டிகளுக்கு உண்டு.
உறைவிடத்தின் வெளிச்சம் குறித்தும் அடுத்து யோசித்தபோது, கட்டுமானத்தின் போதே போதிய அளவு சூரிய ஒளி வருவதற்கும் சில ஏற்பாடுகளை செய்ய முடியும். ஜன்னல்கள் போன்ற அமைப்புகளை வைக்கலாம் என்றும் ஆலோசிக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகமானது அவ்வப்போது புழுதிப் புயலை எதிர்கொள்ளும் ஒரு கிரகம். இவ்வாறு புழுதிப் புயல் ஏற்பட்டு இந்தக் கூடாரங்களில் தூசுகள் படியும். அதற்கான காப்புப் போர்வைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
செவ்வாயில் குடியிருப்புகள் உருவானாலும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய வாய்ப்புள்ளோர்தான் சென்று பார்த்துவிட்டு வரவே இயலும். அப்படியானால், தங்குவது குறித்து யோசிக்கவே முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








