காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கல்வி நிதி ஒதுக்கீட்டில் கவனம்

தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும், அரசுப் பள்ளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

News image

கல்வி நிதி ஒதுக்கீட்டில் கவனம் - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:40 am IST

ஒவ்வோர் ஆண்டும் மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பாக புதிய திட்டங்கள், சலுகைகள், அறிவிப்புகள், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுவதுண்டு. அவற்றுள் குறிப்பாக கல்வி, வேளாண்மை போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் போன்றவை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்னதாக பெரும் எதிர்பார்ப்பையும், தாக்கலுக்குப் பிறகு விவாதத்தையும் ஏற்படுத்துவதுண்டு.

அந்தவகையில், ஆண்டுதோறும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக இருந்தாலும் பள்ளிகளின் தரம் உயர்வு, அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்ற சிறார்களைத் தக்கவைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் கொண்டுவரப்படும் திட்டங்கள், இலவசத் திட்டங்களுக்கான செலவினங்கள் அதிகரிப்பு போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நிதியானது போதுமானதாக இருப்பதில்லை.

1964-ல் அமைக்கப்பட்ட கோத்தாரி தலைமையிலான தேசிய கல்வி ஆணையம் தனது பரிந்துரைகளை 1966-இல் சமர்ப்பித்தது. 19 உறுப்பினர்கள், 20 ஆலோசகர்களை உள்ளடக்கியதாக இவ்வாணையம் அமைந்திருந்தது. சுமார் 9,000 நேர்காணல்கள், 2400 கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரைகளை வழங்கியது. இதனை ஏற்று 1968-ல் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.

கோத்தாரி கல்வி ஆணையம் தனது அறிக்கையில் மிகப் பரந்த நாடான இந்தியாவுக்கு அதன் அரசால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. ஆனால், இதுவரையில் எந்த அரசம் 6 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2009-10-இல் கல்விக்கு 4.6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், 2025-26-இல் 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆண்டுதோறும் அரசு செலவிட்ட மொத்த தொகையானது அதற்கு முந்தைய ஆண்டு செலவிட்டதை விட சுமார் 10 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு எனும் தரவுத்தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2025-26-ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25-இல் 14,71,473 என்றிருந்த நிலையில், அது 2025-26-இல் 14,66,682-ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் 1392, மேற்கு வங்கத்தில் 568, ஆந்திரத்தில் 474, தமிழ்நாட்டில் 369, கர்நாடகத்தில் 261, ஹிமாச்சல பிரதேசத்தில் 266 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பிகார், சத்தீஸ்கர், புதுதில்லி ஆகிய மாநிலங்களில் கூடுதலாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பைவிட அரசுப் பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்பட்டுள்ளன என்பதில் மாற்றமில்லை. இருப்பினும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முழுமையான அளவில் அடிப்படை வசதிகள் மேம்பட்டிருக்கின்றனவா என்பது சந்தேகம்தான்.

2023-24-க்கும் 2025-26-க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 86 லட்சம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களைத் தக்கவைப்பதிலும், அவர்களின் பங்கேற்பில் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

தொடக்கப் பள்ளிகளில் 2024-25-இல் 2.3 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2025-26-இல் 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்தாலும் அவை போதுமானதாக இல்லை என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகிறது. மின்சாரம், குடிநீர், கழிப்பறை, இணையதளம், இருக்கை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாகப் பெற்றுள்ள அரசுப் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அதேவேளையில், இத்தகைய அடிப்படை வசதிகளைப் பெற்றிராத பள்ளிகளும் இருக்கின்றன. அவ்வாறான பள்ளிகளை மாவட்ட அளவில் கண்டறிந்து அதற்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கோத்தாரி கல்வி ஆணைய பரிந்துரைப்படி கல்விக்கு நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் இத்தனை மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய், ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என்றெல்லாம் அரசாணை உள்ளது. ஆனால், அதன்படி குடிநீர் குழாயும், கழிப்பறையும் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே. எனினும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுவது அவசியமாகும்.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கல்வி தொடர்பாக புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் புதிய திட்டங்கள் அறிவிப்பதன் மூலம் மட்டுமே எதிர்பார்த்த பலனை எட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும், அரசுப் பள்ளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.