கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர் என்பதுதான் தமிழக அரசியல் வரலாறு. சில ஆரம்ப கால வெற்றிகளுக்குப் பிறகு அந்தப் புதிய கட்சிகள் கரைந்தோ காணாமலோ போயிருக்கின்றன.அந்தப் பட்டியல் நீளமானது; அதன் சில துளிகள்:
பொன்னம்பல தியாகராஜன்
பி.டி.ராஜன் எனப் பிரபலமாக அறியப்பட்ட இவர், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி கற்றவர். 1920 முதல் 1937 வரை ஜஸ்டிஸ் பார்ட்டியின் (நீதிக் கட்சி) முக்கிய சட்டப்பேரவை உறுப்பினராகவும், பொதுப் பணித் துறை அமைச்சராகவும், பின்னர் மதராஸ் மாகாணத்தின் முதல் அமைச்சராகவும் (ஃபர்ஸ்ட் மினிஸ்டர்) பணியாற்றினார். பெரியாரின் தீவிர சீடராகவும், திராவிடநாடு கோரிக்கையின் ஆதரவாளராகவும் இருந்த இவர், 1944-இல் பெரியார் நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபோது பிரிந்து, சிலருடன் சேர்ந்து நீதிக் கட்சியை மீண்டும் உயிர்ப்பித்தார்.
1946 தேர்தலை புறக்கணித்த அந்தக் கட்சி, 1951}இல் ஒன்பது இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் மட்டும் வென்றது. ராஜன் மதுரை வடக்கு தொகுதியில் மோசமாகத் தோற்றார்; ஆனால், கம்பத்தில் வெற்றி பெற்றார். 1957-க்குள் நீதிக் கட்சி முற்றிலும் மறைந்தது.
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
காங்கிரஸின் உயர்ந்த தலைவர்களில் ஒருவரும், "மகாத்மா காந்தியின் மனசாட்சி' எனப் போற்றப்பட்டவருமான மூதறிஞர் ராஜாஜி, 1952-இல் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தபோது நேருவின் அழைப்பில் தமிழக முதல்வரானார். 1959-இல் காங்கிரஸை விட்டுப் பிரிந்து சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்.
1967-இல் காங்கிரஸின் பிரதான எதிரியான திமுகவுடன் இணைந்து காங்கிரûஸ வீழ்த்தினார். 1971-இல் தன் அரசியல் எதிரியான காமராஜுடன் கூட்டணி அமைத்தார்; ஆனால், அந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் சுதந்திரா கட்சி ஆறு இடங்களையே வென்றது.
1972-இல் ராஜாஜி மறைந்த பிறகு சுதந்திரா கட்சியும் மறைந்தது.
ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத்
திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சம்பத், அண்ணாவுக்கு அடுத்தநிலைத் தலைவராக இருந்தார்.
1961-இல் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். தமிழ் மக்கள் நன்கு அறிந்த அரசியல் முகங்களான கண்ணதாசன், பழ.நெடுமாறன், எம்.பி. சுப்ரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் அந்தக் கட்சியில் இடம் பெற்றிருந்தார்கள். 1962 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.
1964-இல் சம்பத் தனது கட்சியை திமுகவின் பிரதான எதிரியான காங்கிரúஸôடு இணைத்தார்.
இராஜகோபாலன் நெடுஞ்செழியன்
அண்ணாவின் நம்பத்தகுந்த துணை; அண்ணா உயிருடன் இருந்தபோதே திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த (1955-60) அரிதான பெருமை பெற்றவர். அண்ணா சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது, இடைக்கால முதல்வராகவும் பணியாற்றினார்.
1976-இல் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரணால் பிரிந்து ப.உ.சண்முகம், க.ராசாராம், செ.மாதவனுடன் இணைந்து மக்கள் திமுகவைத் தொடங்கினார்; அது விரைவில் அஇஅதிமுகவில் இணைந்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோருடன் பிரிந்து நால்வர் அணி அமைத்தனர். தேர்தலில் படுதோல்வி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கே திரும்பி 1991 அமைச்சரவையில் நிதியமைச்சராகிறார்.
குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன்
மக்களவை உறுப்பினராகவும், ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் திகழ்ந்த குமரி அனந்தன், 1980-ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி காந்தி காமராஜ் தேசிய காங்கிரûஸ தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைக் காங்கிரஸில் இணைத்தார். பின்னர், சில ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டர் காங்கிரஸ் என்ற ஒன்றைத் தொடங்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
செண்டாங்காடு டி. சோமசுந்தரம்
பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கடராமனை 1967-இல் தோற்கடித்து அரசியலில் அடியெடுத்து வைத்தபோது கவனத்தை ஈர்த்தவர். எம்ஜிஆருடன் இணைந்து அதிமுகவை உருவாக்கிய அதன் ஆரம்பகால முதன்மைத் தலைவர்களில் ஒருவர்.
ஆனால், ஊழல் குறித்து எம்ஜிஆரைக் கட்சிக்குள் விமர்சித்தவரும் இவரே. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், 1984-இல் நமது கழகத்தைத் தொடங்கினார்; 1985 தேர்தலில் முழுமையாக தோல்வியடைந்தார். பின்னர், கட்சியைக் கலைத்து மீண்டும் எம்ஜிஆரிடம் திரும்பினார். ஜெயலலிதாவின் 1991 அமைச்சரவையிலும் இடம் பெற்றார். 1996 தேர்தலுக்குப் பிறகு, கண்ணப்பன், முத்துசாமி ஆகியோருடன் போட்டி அதிமுக தொடங்கி செல்வாக்கு இழந்து விட்டார்.
சுப்புராமன் திருநாவுக்கரசர்
27 வயதில் சட்டப்பேரவை துணைத் தலைவரான இவர், 1977 முதல் 1996 வரை அறந்தாங்கியில் தொடர்ச்சியாக வென்ற பெருமைக்குரியவர். ஒருகாலத்தில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆதரவாளர். நால்வர் அணி, அண்ணா-புரட்சித் தலைவர் முன்னேற்றக் கழகம், போட்டி அதிமுக என்று பயணித்தும், திமுக கூட்டணி, பாஜக, காங்கிரஸ் என்று மாறி மாறி பயணித்தும் அரசியலைத் தொடர்ந்தவர்.
1999 மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் இணைந்து மோதிரம் சின்னத்தில் வென்றார். மத்திய அரசில் இணை அமைச்சராக உயர்ந்தார். பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸில் இணைந்து, 2016-இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். 2019-இல் திருச்சியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸில் தொடர்கிறார்.
தாவீது பாண்டியன்
தா. பாண்டியன் மாணவப் பருவத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அதன் இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கியவர். 1989-இல் எஸ்.ஏ. டாங்கேவும், மொகித்சென்னும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய போது அதில் இணைந்தார். 1989-இல் காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அந்தக் கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினர் தா. பாண்டியன்தான்.
2000-இல் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிக்குத் திரும்பினார்.
கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார்
கட்சிக்குள் எழும் பிரச்னைகளைத் தீர்க்க இந்திரா - ராஜீவின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர். எட்டு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர்.
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்ற நரசிம்மராவின் முடிவுடன் மாறுபட்டு காங்கிரஸிலிருத்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார். ஆனால், அடுத்த தேர்தலில், 2001-இல் அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது காலத்தின் நகை முரண். அந்தக் கட்சி காங்கிரஸில் இணைந்தது.
வாழப்பாடி கூத்தன் இராமமூர்த்தி
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐந்து முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்; 1995-இல் காங்கிரஸிலிருந்து விலகி திவாரி காங்கிரஸில் இணைந்தார். திவாரி காங்கிரஸ் காங்கிரஸோடு இணைந்த போது அதிலிருந்து விலகி தமிழக ராஜீவ் காங்கிரஸை தொடங்கினார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 1999-இல் சேலம் தொகுதியில் வென்று வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றார். 1999 தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தோல்வியைத் தழுவுகிறார். 2001 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றது. கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸுக்கே மீண்டும் திரும்பினார்.
பழனியப்பன் சிதம்பரம்
இன்று பாஜக விமர்சகர்; ஆனால் 2001-இல் அதே பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட்டார். ஜெயலலிதாவுடன் இணைவதை எதிர்த்து, மூப்பனாரை விட்டு பிரிந்து தமிழ் மாநில ஜனநாயகப் பேரவையைத் தொடங்கி தமிழகத்தில் திமுக தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அந்தக் கூட்டணி நீண்டநாள் நிலைக்கவில்லை. 2004-இல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
வையாபுரி கோபால்சாமி (வைகோ)
ஒருகாலத்தில் கருணாநிதிக்குப் பிரியமான போர்வாள். பின்னர் சதி குற்றச்சாட்டில் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மறுமலர்ச்சி திமுகவைத் தொடங்கினார்; ஸ்டாலினை வாரிசாக முன்னிறுத்திய திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து பல ஆண்டுகள் பல கூட்டணிகளை அமைத்தார். இப்போதைக்கு திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறார்.
தமிழக அரசியல் மேடையில் தலைவர்கள் தங்கள் சொந்தக் கொடிகளை ஏற்றி, தங்கள் சொந்தப் புரட்சிகளை அறிவித்து, தங்கள் சொந்த நியாயங்களை முன்னிறுத்தி எத்தகைய காட்சிகளையும் அரங்கேற்றலாம். ஆனால், காலம் இரக்கமின்றி அவர்களை அலைக்கழித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கே அனுப்புகிறது. வாழ்க்கை என்பது வட்டம் என்பது இதனால்தானோ?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிப்பு!

50% வாக்குகள்கூட பெறாமல் ஆளும் கட்சிகள்! இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் தேவை!
3 தொகுதிகளில் மீண்டும் வெற்றி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டை என்பதை நிரூபித்த காங்கிரஸ் கட்சி

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



