சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

வாக்களித்தால் மட்டும் போதுமா?

மக்கள் பிரச்னைகளை எங்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்பதை தீர்மானிக்கும் புரிதல் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் இருக்க வேண்டும்.

News image

வாக்களித்தால் மட்டும் போதுமா? - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:33 am IST

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன. ஒன்றை எடுத்தவுடன், மக்களாட்சிக்கான கடமை முடிந்ததா? என்றார் நண்பர் ஒருவர். உடனே அதற்கு நான், "இப்போதுதான் என் மக்களாட்சிப் பணியை ஆரம்பித்திருக்கிறேன்' என்றேன். "அது என்ன ஆரம்பம்?' என்றார். "மக்களாட்சிப் பணி வாக்களிப்பதுடன் நிற்பது கிடையாது, அது ஒரு தொடர் பணி' என்றேன். அதற்கு அவர், "தற்போதெல்லாம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்து மக்கள் பிரதிநிதிகளான பிறகு நன்றி கூற வருவார்கள், அடுத்து, அடுத்த தேர்தலின்போது வேட்பாளர்களாக அண்டா, குண்டா, கவருடன் வருவார்கள். இதுதானே நம் நாட்டில் நடைமுறை' என்றார்.

பிரதிநிதித்துவ மக்களாட்சியில், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு உச்சம் பெறுவது என்பது தொகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் உயிரோட்டமான தொடர்பில் இருந்து தொடர் செயல்பாட்டில் இருக்கும்போது மட்டும்தான் என்று உலகச் சட்டப்பேரவைகளை ஆய்வு செய்த நிபுணர் கோலன்பர்க் கூறுகிறார். மக்கள் பிரதிநிதிகளுடன் மக்கள் இணையும்போது அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன என்பதை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆய்வின் மூலம் இவர் தெரிவிக்கிறார். "எனவே, நாம் நம் பிரதிநிதிகளைக் கண்காணிக்கவில்லை என்றால் அப்படித்தான் மறு தேர்தல் வரும்போது பண முடிச்சுடன் வருவார்' என்றேன். "தொகுதி மக்களாகிய நாம் செய்ய வேண்டியவை என்ன என்று எனக்கும் கூறுங்கள்; நானும் செய்கிறேன்' என்றார்.

"உங்கள் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் உள்ளதா?' என்றேன். இருக்கிறது என்றார். "அங்கு செல்வது உண்டா?' என்றேன். "இல்லை, அந்த அலுவலகம் பெரும்பாலும் பூட்டி இருந்ததைத்தான் நான் பார்த்துள்ளேன்' என்றார். "அதை ஏன் திறந்து வைக்க முடியாது' என்று கேட்டேன். அதற்கு "அவர் தானே வழிவகை செய்ய வேண்டும்' என்றார். "ஆம், அவர்தான் செய்ய வேண்டும், அவர் செய்யவில்லை என்றால் யார் அவரைச் செய்ய வைப்பது?' என்றேன். "எனக்குத் தெரியவில்லை நீங்கள் கூறுங்கள்' என்றார்.

சட்டப்பேரவை என்பது சட்டங்கள் இயற்றுவது, கொள்கை வரையறைகள் உருவாக்குவது, நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்கள் உருவாக்குவது போன்ற செயல்பாடுகளை ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் செயல்படுத்தும் மாமன்றம். ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் இரண்டு பணிகளை சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டும். காரணம், அவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக இயங்கும் மன்ற உறுப்பினர்; இரண்டாவது அவர் ஒரு தொகுதியின் பிரதிநிதி.

முதல் நிலையில் இயங்கும்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நலன் சார்ந்து அனைத்துச் சட்டங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து புரிந்து கொண்டு சட்டப்பேரவையில் பணியாற்ற வேண்டும். இரண்டாவது நிலையில் அவர் எந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரோ, அந்தத் தொகுதியின் மக்கள் பிரச்னைகளை தொகுதி மக்களின் பங்களிப்புடன் பெற்று அவற்றைப் பகுத்து, சட்டப்பேரவைக்கு கொண்டு செல்ல வேண்டியவற்றை சட்டப்பேரவைக்கும், அமைச்சர்களிடம், அதிகாரிகளிடம் கொண்டுசெல்ல வேண்டியதை அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண்பதும், மாவட்ட அளவில் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை அந்தந்த அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதும் அவருடைய கடமையாகும்.

மக்கள் பிரச்னைகளை எங்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்பதை தீர்மானிக்கும் புரிதல் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் இருக்க வேண்டும். இதை கோட்பாட்டு ரீதியில் மக்கள் பிரச்னைகளைத் திரட்டுவதும், அவற்றுக்குத் தீர்வு காண்பதும் இரட்டைப் பணிகள் என்று விளக்குகின்றனர் அறிஞர்கள்.

ஆகையால்தான், இந்தப் பதவிகளுக்குத் திறமையான மனிதர்கள் தேவை என்று தத்துவ அறிஞர்கள் விவாதிக்கின்றனர். இதைப் புரிந்துகொள்ள பிரிட்டன் பிரதிநிதித்துவ மக்களாட்சி நிபுணர் என்று போற்றப்படும் எட்மண்ட் பர்க், தன் தொகுதி மக்களுக்குக் கொடுத்த விளக்கத்தை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும். அவர் பிரிஸ்டோல் தொகுதியிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போது, அந்தத் தொகுதியிலிருந்து ஒரு சிலர் அவரைச் சந்தித்து ஒரு சில கருத்துகளை நாடாளுமன்றத்தில் வையுங்கள் என வேண்டினர். அதற்கு அவர், நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் எனத் தீர்மானிப்பது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் முடிவு. அதை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது; நிர்ப்பந்திக்கவும் கூடாது.

காரணம், பிரதிநிதி என்றாலே மக்களில் திறமை வாய்ந்தவர், அவர் சாதாரண மனிதர் அல்ல என்று பொருள். நீங்கள் தந்த அந்தக் கருத்துகளை நாட்டின் நலன் கருதி அலசிப் பார்க்க வேண்டும். எனவே, தயவு செய்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் கூறுவதை வழிமொழியும் ஒரு பிரதிபலிப்பு இயந்திரம் அல்ல என்ற விளக்கத்தை அவர் தந்தார்.

எனவே, சட்டப்பேரவை உறுப்பினர் என்பவர் பொறுப்புமிக்க ஆளுமை மிக்க, திறன் மிக்க செயல்படும் உயர் மனிதர் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது கோட்பாட்டின்படி உள்ள எதிர்பார்ப்பு. ஆனால், இன்று அப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலுக்குள், தேர்தல் அரசியலுக்குள் வர இயலாத நிலையில் வந்தவர்களை எப்படியாவது மக்களுக்கு பணி செய்ய வைக்க வேண்டும்.

முதலில் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் குறைந்தபட்சம் பத்து நபர்கள் விவரம் அறிந்தவர்கள் நம் சட்டப்பேரவை உறுப்பினரை நமக்காக பணியாற்ற வைக்க பொறுப்பேற்க வேண்டும். பின்னர், அந்தக் குழு கிராமத்தில், நகரத்தில் உள்ள மக்கள் உணர்ந்த தேவைகளை மக்களுடன் ஆலோசித்துப் பட்டியலிடுங்கள். அதிலுள்ள தேவைகளில் எவையெல்லாம் உள்ளாட்சியால் செய்ய முடியுமோ அவற்றைத் தவிர்த்துவிட்டு மற்றவற்றை நம் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் நன்றி சொல்ல உங்கள் ஊருக்கு வரும்போது, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவரிடம் இரண்டு கோரிக்கையை வையுங்கள். ஒன்று, சட்டப்பேரவை அலுவலகம் எப்படி அரசு அலுவலகங்கள் இயங்குகின்றனவோ, அதேபோல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயங்க வேண்டும்; அடுத்து, "நமது எம்.எல்.ஏ.' என்ற வாட்ஸ்}ஆப் குழு ஒன்று உருவாக்கி, அதில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு மக்கள் கோரிக்கைகளை அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய வேண்டுகோள்களை வைக்க வேண்டும்.

மேலும், தொகுதியின் புள்ளிவிவரங்களை வைத்து ஒரு "டேஷ் போர்டு' உருவாக்க வேண்டும் என்று அவரிடம் கூற வேண்டும். அப்படி அந்தப் புள்ளிவிவரங்கள் இருந்தால், அவர் பணிகள் மூலம் எப்படி மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன, அந்தத் தொகுதி எப்படி மேம்பாட்டுச் செயல்பாடுகள் மூலமாக மேம்படுகின்றன, எப்படி உயர்ந்து ஒரு முன்மாதிரித் தொகுதியாக வருவதைப் படம்பிடித்து மற்றவர்களுக்கு வழிகாட்டலாம்.

அந்தப் புள்ளிவிவரங்களை அவருடைய அலுவலகப் பணியாள்களே சேகரிக்க முடியும். தன்னார்வத்துடன் சட்டப்பேரவை உறுப்பினருடன் பணி செய்ய ஏராளமான தன்னார்வலர்களை கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கண்டறிந்து அந்தப் பணியை ஒரு வாரத்துக்குள் முடித்துவிட்டு, ஒவ்வொரு வாரமும் அவர் செய்த பணிகளை தனது வலைதளத்தில் பதிவிட்டு தொகுதி மேம்படுவதை தொகுதி மக்களுக்கு காண்பிக்கலாம். அதற்கு குடிமக்களாகிய நம் போன்றவர்கள் உதவிடலாம் என்றேன்.

உள்ளாட்சியால் செய்ய இயலாதவற்றை சட்டப்பேரவைக்குக் கொண்டுசெல்ல உங்கள் சட்டப்பேரவை உறுப்பினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதை அவர் கேட்கும் முறையில் கேட்டு பதிலை அமைச்சர்களிடமிருந்து பெற்று மக்களுக்குத் தருவார்.

அத்துடன் ஒவ்வொரு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தபிறகு தொகுதி மக்களுக்கு சட்டப்பேரவையில் நடந்தவை, புதிதாக வந்த சட்டங்கள், திட்டங்கள், கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகள் போன்ற செய்திகளை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மக்களுக்கு எடுத்துக் கூற ஒரு நாள் கூட்டம் ஒன்றை அவர் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் எதாவது ஓர் அரங்கில் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்கும் தொகுதி மக்களுக்கு விளக்கலாம். அந்தச் செய்திகளை கூட்டத்தில் கலந்துகொண்ட நம் கிராம மக்கள் கிராம சபையில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் இதற்காக ஒரு சிலர் இணைந்தால் நம் சட்டப்பேரவை உறுப்பினர்களை மக்களுக்கானவர்களாக செயல்பட வைக்க முடியும். இதற்கு முதலில் நாம் பொறுப்புள்ள குடிமக்களாக மாறி, நாம் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பேற்றுக் கொண்டு தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு நம் சட்டப்பேரவை உறுப்பினர்களை

மிகவும் ஆரோக்கியமான மக்கள் அரசியலை - மேம்பாட்டு அரசியலை நடத்த தயார் செய்து விடலாம். அதற்கு குடிமக்களாக, நாம் பொறுப்பேற்க தயாராக வேண்டும். "மோசமான செயல்பாடுகள் தீயவர்களின் இணைப்பால் வருவதல்ல, நல்லவர்களின் அமைதியால்...' என்று எட்மண்ட் பர்க் கூறுவார். அதை நினைவுபடுத்திக் கொண்டு செயல்படுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.