சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

பல பல்கலைக்கழகங்கள், வெறும் ஆராய்ச்சிப் பட்டதாரிகளைத் தொடர்ந்து வெளியேற்றும் உற்பத்தி மையங்களாகவே மாறி வருவதால், அவற்றின் கல்வித் தரம் குறையத் தொடங்கியுள்ளதாகப் பல்வேறு ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:40 am IST

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், அண்மைக்காலமாக முனைவர் பட்டங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள வரம்புமீறிய விரிவாக்கமும், கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் பல்கலைக்கழகங்களின் அடிப்படையான நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையிலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

பல பல்கலைக்கழகங்கள், வெறும் ஆராய்ச்சிப் பட்டதாரிகளைத் தொடர்ந்து வெளியேற்றும் உற்பத்தி மையங்களாகவே மாறி வருவதால், அவற்றின் கல்வித் தரம் குறையத் தொடங்கியுள்ளதாகப் பல்வேறு ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக முனைவர் பட்டங்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிவேகமாக உயர்ந்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தரவுகள், அதன் உறுப்பு நாடுகளில் ஆண்டுதோறும் 3,00,000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆண்டுதோறும், அமெரிக்காவில் 55,000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்களும், சீனாவில் 70,000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை 2010-2020-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருப்பதாக உயர் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 40,000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழக வளர்ச்சியின் குறியீடாகக் காட்டப்படும் அளவுக்கு அதிகமான முனைவர் பட்டங்களின் எண்ணிக்கை தரம் குறைவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. முனைவர் பட்டப் படிப்புகள் வருவாயின் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்வதற்காகத் தரநிலைகளும் தகுதி வரம்புகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, போதிய ஆய்வுத் திறன் இல்லாத மாணவர்கள் கூட முனைவர் பட்டப் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

முனைவர் பட்ட ஆய்வின் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சியாளர், அவரது வழிகாட்டியான ஆய்வு மேற்பார்வையாளர் இடையிலான நிதிசார் உறவுகள் குறித்து அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. ஆய்வு மேற்பார்வையாளரைத் தேர்ந்தெடுத்தல், ஆய்வின் முன்னேற்றத்தைச் சுலபமாக்குதல், முனைவர் பட்டத்தை விரைந்து பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக ரூ.50,000 முதல் ரூ.10,00,000 வரை லஞ்சமாக வழங்கப்படுவதாகப் பல்வேறு செய்திகளும் புலனாய்வுக் கட்டுரைகளும் சுட்டிக்காட்டுகின்றன.

ஓர் ஆய்வாளர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட பின்னரே, தனது ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறார். ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதைக் கட்டாயமாக்கியதன் விளைவாக, பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்டுரைகளை வெளியிடும் ஆய்விதழ்களின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகியுள்ளது. இத்தகைய ஆய்விதழ்களில், ஆய்வுக் கட்டுரைகள் முறையான மதிப்பாய்வுக்கு உள்படுத்தப்படாமலேயே வெளியிடப்படுகின்றன. வெளியீட்டுக்காக ரூ.5,000 முதல் ரூ.1,00,000 வரை கட்டணம் வசூலிக்கும் இத்தகைய சந்தேகத்துக்குரிய ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகளில் 25% முதல் 30% வரை இந்திய முனைவர் பட்ட ஆய்வாளர்களால் எழுதப்பட்டவை என்று தரவுகள் கூறுகின்றன.

வழிகாட்டிக்கும் ஆராய்ச்சியாளருக்கும் இடையிலான உறவில் நிலவும் பொருளாதார தொடர்பு கல்விப்புலத்தின் அடிப்படை நெறிமுறைக் கோட்பாடுகளை அடியோடு பலவீனப்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தனிப்பட்ட திறமையின் அடிப்படையில் அல்லாமல், தங்களிடம் உள்ள நிதி வளங்களின் அடிப்படையிலேயே முன்னேற்றம் காணும் சூழல் உருவாகிறது.

சில கல்வி நிறுவனங்களில், ஒரே ஒரு மேற்பார்வையாளர் பத்து முதல் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மேற்பார்வையிடுகிறார். இதன் விளைவாக, ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்க வேண்டிய தனிப்பட்ட கவனம் கணிசமாகக் குறைந்து விடுகிறது. மாணவர்கள் தங்கள் முழு ஆய்வையும், மேற்பார்வையாளர் துணையின்றித் தாங்களாகவே முழுமையாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.

ஒரு பேராசிரியரை ஆராய்ச்சி வழிகாட்டியாக அங்கீகரிக்கும்போது, பல பல்கலைக்கழகங்கள் அவர்களின் தனிப்பட்ட திறமையை விட அவர்கள் பணிபுரியும் கல்லூரியின் தன்மைக்கே முன்னுரிமை அளிக்கின்றன.இதன் விளைவாக தேவையான தகுதிகள், அனுபவம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகள் இருந்தபோதிலும் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பல மாணவர்கள் தங்கள் முனைவர் பட்டத்தை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் விரைவாக முடிப்பதற்கான அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக, ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒப்பீட்டளவில் எளிதாக நிறைவு செய்யக்கூடிய ஆய்வுத் தலைப்புகளையே அவர்கள் தேர்ந்தெடுக்க முனைகின்றனர். இது ஆய்வுத் துறையில் தேக்க நிலையை ஏற்படுத்துவதுடன் புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதையும் தடுக்கிறது.

இந்தச் சூழலில் உருவாகும் தரம் குறைந்த முனைவர் பட்டதாரிகள் ஆசிரியர் தொழிலில் நுழையும்போது, இந்தத் தரக்குறைபாடு ஒரு தொடர்ச்சியான சுழற்சியாக அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது. இந்தப் பட்டதாரிகள், தாங்கள் பயிற்சி பெற்ற அதே தரத்தில் கற்பிக்கத் தொடங்குகிறார்கள். தரம், நேர்மை, பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உடனடி, தீர்க்கமான நடவடிக்கைகளால் மட்டுமே ஆராய்ச்சிக் கல்விக்குப் புத்துயிர் அளிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.