உலகளாவிய அளவில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வரவேற்பும், மரியாதையும் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் பலர் தங்களது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பும், ஊதியமும் பெறுவதில்லை. அதேபோல, முனைவர் பட்டம் பெற்றவர்களில் பலருடைய தகுதியும் திறமையும் கேள்விக்குரியதாக இருப்பதையும் புறக்கணிக்க முடியாது. ஆராய்ச்சிகளில் முன்னிலை வகிக்கும்போதுதான் ஒரு நாடு நிலையான வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்படும் என்ற கசப்பான உண்மையை நாம் உணராமல் இருப்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன.
உயர் கல்விக்கான வரவேற்பு அதிகரித்திருப்பது போலவே, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கும் நாடு தழுவிய அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2023-24-இல் 3,43,559 மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்புக்காக, அதாவது முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பதிவு செய்திருக்கிறார்கள். 2021-22 கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது அது 61.6% அதிகம். அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் ஆகியவற்றுக்கான முனைவர் பட்ட ஆய்வுகள் அவற்றில் 43.9%. கலை, அறிவியல், சமூகவியல் ஆய்வுகளில் 42.2% மாணவர்கள் இணைந்திருந்தனர்; 2021-22 உடன் ஒப்பிடும்போது, இதை சுமார் 70.4% வளர்ச்சி என்று சொல்ல வேண்டும்.
சுமார் 17,000 பேர் பிஹெச்டி முடித்தவர்கள், 33,000-க்கும் அதிகமான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) வெற்றி பெற்றவர்கள், 9,000-க்கும் அதிகமான இளநிலை ஆராய்ச்சி அறிஞர்கள் (ஜெஆர்எஃப்) இந்தியாவின் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு இணையதளங்களில் மட்டும் தகுதியான வேலைக்குப் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். தகுந்த உள்கட்டமைப்பு உள்ள சர்வதேச அளவில் போட்டியிடும் வகையிலான பாடத்திட்டங் களைக் கொண்ட மத்திய, மாநில மற்றும் ஒருசில தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இன்றளவும் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் படிக்காதவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் (3%), கல்வித் தகுதி உயர உயர வேலைவாய்ப்பின்மை விகிதமும் (40%) அதிகரிக்கிறது. பிஹெச்டி முடித்தவர்கள் முற்றிலும் வேலை இல்லாமல் இருப்பதைவிட, தங்களின் தகுதிக்கு மிகக் குறைவான ஊதியம் மற்றும் பதவிகளில் பணியாற்றுவதே நாட்டில் இப்போது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
அரசுத் துறைகளில் அலுவலக உதவியாளர் அல்லது எழுத்தர் போன்ற 4-ஆம் நிலை பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகும்போது ஆயிரக்கணக்கான பிஹெச்டி பட்டதாரிகள் அதற்கு விண்ணப்பிக்கும் அவல நிலையும் நீடிக்கிறது. பல பிஹெச்டி பட்டதாரிகள் தங்களின் முனைவர் பட்ட காலத்தின்போது வாங்கிய உதவித் தொகையைவிட, மிகக் குறைந்த ஊதியத்தில் கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் தகுந்த உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளிலும் பிஹெச்டி சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், பிஹெச்டி முடித்தவர்கள் அதை ஒரு பட்டமாக வைத்துக்கொள்ளும் அளவிலேயே உள்ளது. தரமற்ற நிலையில் பட்டங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில்லை என்பதில் வியப்பில்லை. முனைவர் பட்டம் பெற்ற பலர் அதற்கான தகுதியற்றவர்களாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் போலி பிஹெச்டி சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்த 249 கெüரவ விரிவுரையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், எதிர்காலத்தில் பணித் தேர்வில் இவர்கள் பங்கேற்க நிரந்தரத் தடை விதித்தும் அந்த மாநில கல்லூரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பல நூறு கோடி ரூபாயை கல்வித் துறைக்கு ஒதுக்கி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பாடத்திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றன. அதில், பலதரப்பட்ட மாணவர்களும் இணைந்து தங்கள் குடும்பச் சூழல், பொருளாதாரச் சூழல்களைக் கடந்து பயின்று பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் நிலையில், போலி பிஹெச்டி பட்டத்தை இடைத்தரகர்களிடம் பெற்று அரசு கல்வி நிறுவனங்களை ஏமாற்றியிருக்கும் போலி பட்டதாரிகளை என்னவென்று சொல்வது?
முனைவர் பட்ட ஆய்வில் அதிக அளவில் மாணவர்கள் இணைவதாலேயே, உயர் கல்வியின் தரம் அதிகரிக்கும் என்றோ, கல்வி மேம்படுகிறது என்றோ நாம் கருத முடியாது. அதிக அளவில் ஆராய்ச்சி மாணவர்களின் சேர்க்கை புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வு முன்னெடுப்புகள் (இன்னோவேஷன்), அறிவாற்றல் அதிகரிப்பு (இன்டெலெக்சுவல் புரோக்ரஸ்) ஆகியவற்றின் மேம்பாடு என்றும் கூறிவிட முடியாது. ஆய்வு மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறதா?, முனைப்புடன்
ஆய்வில் ஈடுபடுகிறார்களா? என்பதைப் பொருத்துத்தான் உயர் கல்வியின் தரத்தை மதிப்பிட முடியும். உயர் கல்வி என்பது புதிய ஆராய்ச்சிகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் வழிகோலுவதாக அமைவது அவசியம். அதில் போலிகள் தலையீடும் இணையுமானால், இந்தியாவில் முனைவர் பட்டங்கள் சர்வதேச அளவில் கேலிக்கூத்தாகும். இந்த நிலைமை தொடரலாகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதிதாசன் பல்கலை.யில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மனங்கவரும் மலையாள சினிமா

இந்தியாவில் ரூ.100 கோடி வசூலித்த தி ஒடிசி..! உலக அளவில் ரூ.3,000 கோடி!

யோகா- இயற்கை மருத்துவ பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



