நீரின்றி அமையாது உலகு என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்காகும். பயிர்த்தொழில் புரியவும், விளைந்த பயிர்களை உணவாகச் சமைக்கவும், சமைத்த உணவுடன் குடிநீராக அருந்தவும் உதவுகின்ற நீரே மனிதர்களின் உடற்தூய்மைக்கும் சூழலியல் தூய்மைக்கும் உதவிகரமாக அமைகின்றது.
மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தண்ணீர் என்பது இன்றியமையாதது என்பதாலேயே பண்டைய நாகரிகங்கள் நதிக்கரை நாகரிகங்களாகச் செழித்து வளர்ந்தன.
இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை மனிதசமுதாயம் வாழ்ந்துகொண்டிருந்த வரை அரசு அமைப்புகள் மூலமே தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை.
குடிசையோ, மாடமாளிகையோ எதுவானாலும், ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கின்ற குடும்பத்தின் தண்ணீர்த் தேவைக்கென தனித்தனியாக ஒரு கிணறும் இருந்துவந்துள்ளது. வறட்சி மிகுந்த கிராமங்கள், சிற்றூர்கள் ஆகியவற்றிலும்கூட ஊருக்குப் பொதுவாக அமைந்த பெருங்கிணறு, குளம், ஊருணி போன்றவை அந்தந்த ஊரின் மக்கள் அனைவருக்குமான தண்ணீர்த் தேவையை நிறைவேற்றி வந்திருக்கின்றன.
மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், அடுக்குமாடிக் கட்டடங்கள், புறாக்கூண்டு போன்ற உறைவிடங்கள், நீர்வளச் சுரண்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்றைய வாழ்வியலில் குடும்பம் ஒன்றுக்கு ஒரு கிணறு என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய் ஆகி விட்டன. தற்காலத்தில் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளே மக்களின் தண்ணீர்த் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்துவருவது கண்கூடு.
தங்களுக்கென்று தனியே ஒரு கிணறோ, ஆழ்துளைக் கிணறோ பெற்றிராத குடும்பங்கள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன. அத்தகைய குடும்பங்கள் எல்லாம் உள்ளாட்சி நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கங்களில் சேகரிக்கப்படும் தண்ணீரையே உணவுசமைப்பதற்கும், தாகம் தணிப்பதற்கும், குளிப்பதற்கும், துணிமணிகளைத் துவைப்பதற்கும் நம்பியிருக்கின்றன.
உள்ளூர் நிர்வாகம் வழங்கும் தண்ணீர் ஒவ்வொரு நாளும் கிடைத்தாலும் சரி, அல்லது பல நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டாலும் சரி, அத்தணீரைச் சூழ்நிலைக்கு ஏற்றபடி மிகவும் சிக்கனமாகச் செல்வழிப்பதைத் தவிர அம்மக்களுக்கு வேறு வழியே இல்லை.
அவ்வாறு வழங்கப்படுகின்ற தண்ணீரும் எல்லா நாள்களிலும் ஒரே தரத்துடன் வழங்கப்படும் என்பதற்கு இங்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கின்றது.
பொதுவாக மழைக்காலங்களில் உள்ளாட்சி நிர்வாகங்களால் வழங்கப்படும் தண்ணீர் கலங்கிய நிறத்தில், சற்றே அசுத்தமாக வருவது இயல்பு. மழைக்காலம் வந்தாலே நம் வீட்டுக் குழாய்களில் குளோரின் வாசத்துடன் கூடிய தண்ணீர் வருவது நமக்கெல்லாம் பழகிப்போய்விட்ட ஒன்று.
அதே சமயம், நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் உடைப்பு அல்லது கசிவு காரணமாக வெளிப்படும் கழிவுநீர் பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய தண்ணீரோடு கலந்துவிடும்போது தீவிரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கழிவுநீர் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடனடி பாதிப்புகள் மட்டுமின்றி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நீண்டகால பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இவற்றையும் தாண்டி, கழிவுநீர்க் கலப்பின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் தருணங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.
இவ்வகையில், கடந்த சில வாரங்களில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், ஹரியாணா மாநிலத்தின் சாயன்ஸô, மேற்கு வங்கத்தின் சுகோபிருஷ்டி, குஜராத்தின் காந்தி நகர் ஆகிய வற்றில் கழிவுநீர் கலந்த குடிநீரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நமது நாட்டின் உள்ளாட்சி நிர்வாகங்கள் கழிவுநீர் குடிநீர் மேலாண்மைகாட்டும் அலட்சியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டன என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக, இந்தியாவிலுள்ள நகரங்களிலேயே மிகவும் தூய்மையான நகரமாக அறியப்படுகின்ற இந்தூரில் கடந்த மாதம் ஏற்பட்ட கழிவுநீர் குடிநீர்க் கலப்பினால் பாதிக்கப்பட்டு 15 பேர் இறந்துள்ளதாகவும், ஹரியாணாவின் சாயன்ஸா கிராமத்தில் இதே போன்ற பாதிப்புக்கு உள்ளாகி நான்கு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கக் கூடியவையாகும். சுகோபிருஷ்டியிலும், காந்தி நகரிலும் உயிரிழப்புகள் ஏற்படாவிட்டாலும், பொதுமக்கள் பலருக்கும் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
தமிழகத்திலும் டிசம்பர் 2024- இல் சென்னை பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதால் மூவர் இறந்துள்ளனர். அந்நிகழ்வுக்கு ஒருசில மாதங்களுக்குப் பிறகு, திருச்சி மாநகராட்சியிலும் இதே காரணத்தினால் மூவர் உயிரிழந்ததாகச் செய்தி பரவியபோது அதனை மறுத்த மாவட்ட நிர்வாகம், கோயில் திருவிழா ஒன்றில் விநியோகம் செய்யப்பட்ட பிரசாதமே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று விளக்கமளித்தது.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் கிராமத்தில் தரமற்ற குடிநீரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. மனிதர்களின் அடிப்படை உரிமையாகிய உயிர் வாழ்தலுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீரின் பயன்பாடு மிகவும் அவசியமாகும்.
அத்தகைய குடிநீரின் உற்பத்தி தளமாகிய நீர்நிலைகளில் தொடங்கி, அவற்றைச் சேகரித்து வைக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கொள்கலன்கள், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்களை உள்ளடக்கிய கட்டமைப்புகள் ஆகிய அனைத்தும் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அவசியம். குறிப்பாக, நிலத்தடியிலுள்ள கழிவுநீர்க் குழாய்களும், குடிநீர்க் குழாய்களும் எளிதில் உடையாத வகையில் வலுவானவையாக அமைக்கப்படுவதன் மூலம் அவற்றில் ஓடும் நீர் கசிவதையும், ஒன்றுடன் ஒன்று கலப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவற்றுக்கிடையில் போதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அவ்வத்துறைகளின் பணியாள்களால் சாலைகள் தோண்டப்படும்போது குடிநீர்க் குழாய்களும், கழிவுநீர்க் குழாய்களும் பாதிக்கப்படாமல் இருக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் அவசியமான குடிநீரே அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கும், உயிரிழப்பதற்கும் காரணமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தொடர்புடைய அதிகாரிகளும் ஊழியர்களும் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து கடமையாற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 1 - 7) - ரிஷபம்
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு
சமையல் டிப்ஸ்...
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


