போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கூடிக் கலையும் கூட்டமாகும் மாநாடுகள்!

இன்றைய சூழலில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மாநாடுகளிலும் ஒரு கவலைக்குரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

News image

திமுக மாநாடு (கோப்புப்படம்)

Updated On :28 மார்ச் 2026, 1:25 am

பழ. அசோக்குமார்

தமிழக அரசியல் வரலாற்றில் மாநாடுகள் என்பவை வெறும் கூட்டங்கள் அல்ல; அவை அதிகார மையங்களை நோக்கி மக்கள் தொடுக்கும் அறப்போர் முரசுகள். ஈரோடு மாநாடாகட்டும், திருச்சி திருப்புமுனை மாநாடாகட்டும், அவை சமூக மாற்றத்துக்கான தீர்க்கமான வரைபடத்தைத் தீட்டின. ஆனால், இன்றைய சூழலில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மாநாடுகளிலும் ஒரு கவலைக்குரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியின் மாநாட்டிலும் கடல் அலையென மக்கள் சங்கமிக்கிறார்கள், கணக்கு வழக்கில்லாமல் பணம் செலவிடப்படுகிறது. நவீன அரசியல் மாநாடுகள் ஒரு நுகர்வோர் சந்தையாக உருமாறியிருப்பது ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை எழுப்புகிறது.

முந்தைய காலத்து அரசியல் மாநாடுகள் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தன. ஒரு தொண்டன் மாநாட்டுக்கு வருகிறான் என்றால், அவன் அங்கே வேடிக்கை பார்க்க வரவில்லை; கட்சியின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை உள்வாங்க வந்தான். அறிஞர் அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா போன்ற தலைவர்கள் சர்வதேச அரசியல் முதல் உள்ளூர் நிலவரம் வரை மணிக்கணக்கில் விளக்கம் அளிப்பார்கள்.

அங்கே விவாதம் என்பது மேடையோடு முடிந்துவிடாது. மாநாடு முடிந்த பின்னும், தொண்டர்கள் குழுக்களாக அமர்ந்து அந்தப் பேச்சின் சாரத்தை அலசுவார்கள். அந்த அறிவுபூர்வமான உரையாடல்கள்தான் ஒரு சாதாரண தொண்டனை அரசியல்படுத்தப்பட்ட குடிமகனாக மாற்றியது. இப்போதுபோல், அது கூட்ட ஏற்பாட்டுக்கான தனியார் நிறுவனங்கள் இல்லாத காலம். கட்சியின் அடிமட்டத் தொண்டனின் வியர்வையும் லட்சியமும் மட்டுமே அன்று மாநாடுகளை வழிநடத்தின.

இன்றைய மாநாடுகள் 'அரசியலற்ற அரசியல்' எனும் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. கொள்கைகளைப் பேசுவதற்குப் பதிலாக, கட்சிகள் தங்களை ஒரு வணிகப் பொருளாக முன்னிறுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அல்லது புதிதாகத் தடம் பதிக்கும் கட்சிகள் என எவையுமே விதிவிலக்கல்ல.

மைல் கணக்கிலான தோரணங்கள், விண்ணைத் தொடும் உருவப் படங்கள், கண்ணைப் பறிக்கும் மின் திரைத் தகடுகள், சுடச்சுட உணவு என ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் படப்பிடிப்பைப் போல மாநாடுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படும் இந்த நிகழ்வுகள், சாமானிய மனிதனுக்கு ஒருவித மலைப்பை ஏற்படுத்த முயல்கின்றனவே தவிர, அவனது அரசியல் அறிவை எட்டுவதற்கான மேடையாக அமைவதில்லை.

மாநாட்டு மேடைகள் இப்போது கொள்கை விளக்கக் களங்களாக அல்லாமல், எதிரிகளை வசைபாடுவதற்கான நிழல் யுத்த மேடைகளாக மாறிவிட்டன. தலைவர்களின் உரைகளில் புள்ளிவிவரங்களோ, தீர்வோ இருப்பதில்லை; மாறாக, எதிர்த்தரப்பை எப்படி கீழ்த்தரமாக விமர்சிக்கலாம்? என்கிற வசைமொழி மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஒரு மணிநேர உரையில் முக்கால்வாசி நேரம் தனிநபர் தாக்குதல்களுக்கே செலவிடப்படுகிறது. இதனால், தொண்டன் வெறும் கைதட்டலுக்கும் விசில் அடிப்பதற்குமான இயந்திரமாக மாற்றப்படுகிறான். ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்பது இங்கே திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறது. இது ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு நேர்ந்த ஜனநாயகச் சிதைவு என்றே சொல்லலாம்.

இன்றைய அரசியல் மாநாடுகளில் காணப்படும் மிகவும் ஆபத்தான போக்கு, அவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படுவதுதான். இத்தகைய நிறுவனங்களால் பிரம்மாண்ட மேடையை உருவாக்க முடியும், வான்வழிப் படக்கருவிகள் மூலம் கூட்டத்தைப் படம் பிடிக்க முடியும். ஆனால், அவர்களால் ஒருபோதும் ஒரு கொள்கை ரீதியான சித்தாந்தப் பிணைப்பை உருவாக்க முடியாது.

தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு அறுந்துபோய், இடையில் நிர்வாக ரீதியான வணிகம் வந்து அமர்ந்து கொண்டது. இத்தகைய நிறுவனங்கள் தரும் தரவுப் புள்ளிவிவரங்கள் ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்காது; மக்களின் இதயங்களில் நிலவும் உண்மையான மாற்றமே வெற்றியைத் தரும்.

இன்றைய அரசியல் என்பது, அதிகாரத்துக்கும் பணத்துக்கும் பின்னால் ஓடும் கூட்டத்தின் சூழ்ச்சிமிகு காரியமாகிவிட்டது. மாநாட்டுக்காகச் செலவிடப்படும் பல நூறு கோடிகள் சாதாரண மக்களின் வரிப் பணமோ அல்லது அவர்களின் உழைப்போதான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. மக்களின் உண்மையான பிரச்னைகளான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கல்வித் தரம் போன்றவற்றை விவாதிக்காத எந்தவொரு பிரம்மாண்ட மாநாடும் வெறும் காகிதப் பூவே. காகிதப் பூக்களுக்கு மணம் கிடையாது, அவை தேனீக்களின் பசியையும் தீர்க்காது. பணத்தால் அதிகாரத்தை எட்டிப் பிடிக்கலாம்; ஆனால், மக்களின் ஆன்மாவை வெல்ல உண்மையான அரசியல் மட்டுமே தேவை.

வெறும் கூட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கட்சி வளர்ந்துவிட்டதாகக் கருதுவது தற்கொலைக்குச் சமம். கொள்கைத் தெளிவில்லாத கூட்டம், திசை தெரியாத கப்பலைப் போன்றது. தலைவர்கள் தங்களின் வசதிக்காக தொண்டர்களை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே கருதும் போக்கு மாற வேண்டும்.

அரசியல் மாநாடுகள் என்பவை மீண்டும் ஒரு தத்துவப் போர்க்களமாக மாற வேண்டும். பிரம்மாண்டமான செலவுகளைக் குறைத்துவிட்டு, ஆழமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிவகுக்க வேண்டும். வசைபாடுவதைக் குறைத்துவிட்டு, எதிர்கால வழிமுறைகளை விளக்கும் களங்களாக அவை அமைய வேண்டும். தனியார் நிறுவனங்களைத் தள்ளிவைத்துவிட்டு, அடிமட்டத் தொண்டர்களை கொள்கை ரீதியாகத் தயார் செய்ய வேண்டும். மாற்றத்துக்கான விதையை விதைக்காத எந்த மாநாடும் வரலாற்றில் நிலைத்து நிற்காது. இல்லையெனில், இதுபோன்ற மாநாடுகளை வரலாறு வெறும் கூடிக் கலையும் கூட்டமாக மட்டுமே பதிவு செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.