-ம. விஸ்வநாதன்
கத்திரி வெயில் தொடங்கும் முன்பே, தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாகி வருவது பொதுமக்களுக்கு பெரும் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமான வெப்ப நிலை கடந்த சனிக்கிழமை (ஏப். 25) பதிவாகி உள்ளது. இது இந்த காலகட்டத்தில் பதிவாவதைவிட 8 டிகிரி அதிகமாகும். மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் பாந்தா நகரில் அன்றைய தினம் 117.32 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளது.
புது தில்லியில் 112 டிகிரி பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 11 டிகிரி அதிகமாகும்.
மகாராஷ்டிரத்தின் அகோலா (117), அமராவதி (116), வர்தா (115), நாகபுரி (114) ஆகிய நகரங்கள் வெப்பத்தால் தகிக்கின்றன.
பஞ்சாப், ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஏழு நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், ஒடிஸô, மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகிய கடலோர மாநிலங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இயல்பைவிட 4.5 டிகிரி முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் இருந்தால் வெப்ப அலை என்று கூறப்படுகிறது.
ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது தொழிலாளி கேப்ரியல் முண்டா, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின்போது ஆசிரியர் அனுராக் எக்கா, மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ்கபூர் ஆகியோர் வெப்ப அலையால் தாக்கப்பட்டு கடந்த ஓரிரு நாள்களில் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் வடக்கு, வடமேற்குப் பகுதிகள் மட்டுமல்ல; தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி உள்பட 15 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை கடந்த திங்கள்கிழமை (ஏப். 27) பதிவாகி உள்ளது.
கோடை வாசஸ்தலமான உதகையில் 80.24 டிகிரியும், குன்னூரில் 81.5 டிகிரியும் பதிவாகி உள்ளது. இதுவும் இயல்பைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகும்.
வரும் மே 2-ஆம் தேதி வரை அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசெளகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, நீர்ச்சத்து குறைந்து உடலின் வெப்ப நிலை அதிகமாக உயர்வது, தோல் வறண்டு சிவந்து போவது, கடுமையான தலைவலி மற்றும் மயக்கம், குமட்டல் அல்லது வாந்தி, வேகமான இதயத்துடிப்பு அல்லது பேச்சு உளறல் போன்றவை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்ச்சத்து இழப்பு காரணமாக சிறுநீரகம், இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. துப்புரவுப் பணியாளர்கள், விற்பனைப் பிரிவு பணியாளர்கள், ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற சேவைப் பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், வெட்டவெளியில் பணிபுரிபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வெப்ப அலையால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் என்பதால் குழந்தைகள், முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பொதுவாகவே அனைவரும் மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது குடை, தொப்பி அல்லது கண்களுக்கு தரமான குளிர் கண்ணாடி அணியலாம். தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், கம்பங்கூழ், எலுமிச்சை சாறு, உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) அருந்துவது போன்ற அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி உள்ளது.
வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தனிப் பிரிவு தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தடையற்ற ஆக்சிஜன் வசதி, குளுக்கோஸ் ஏற்றும் வசதிகளுடன் தேவையான மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாகவே காலநிலை மாற்றம், நகரமயமாக்கல், அதனால் இடைவெளியே இல்லாமல் கான்கிரீட் காடுகளாக நகரங்கள்
நரகங்களாக ஆகுதல், மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதிகளுக்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்படுதல், தொடர்ந்து அதிகரித்துவரும் வாகனப் போக்குவரத்து, குளிர்சாதன (ஏ.சி.) பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றின் தாக்கங்களை இப்போது எதிர்கொள்கிறோம்.
காரணம் எதுவாக இருந்தாலும், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வெப்ப வாத பாதிப்புகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
Summary
The scorching sun
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

11 இடங்களில் வெயில் சதம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

