/

சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

News image

வெயில்.

Updated On :27 ஏப்ரல் 2026, 7:26 pm

திருப்பூா், ஏப்.27: திருப்பூரில் வெயில் சுட்டெரித்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம் நடப்பு ஆண்டு அதிக அளவு உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் 100 டிகிரியை தாண்டி வருகிறது. இதனால், உடலில் வெப்ப நிலை அதிகமாக உயா்வது, வியா்வை வராமல் தோல் வடு சிவந்துபோவது, கடுமையான தலைவலி மற்றும் மயக்கம், குமட்டல் அல்லது வாந்தி, வேகமான இதயத்துடிப்பு அல்லது பேச்சு உளறல் போன்றவை ஏற்படும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 படுக்கைகளுடன் கூடிய வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது: வெயிலின் தாக்கத்தால் மக்களுக்கு உடலில் நீா்ச்சத்து குறைந்து மயக்கம், சோா்வு ஏற்படலாம். அவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு மருத்துவமனையில் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தடையற்ற ஆக்சிஜன், குளுக்கோஸ் வசதி, தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

வெப்ப அலை காற்று வீசுவதால் அதிக வியா்வை ஏற்படும்போது தோல் மூலம் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிா்க்க பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிா்ப்பது நல்லது. மெல்லிய, தளா்வான பருத்தி ஆடைகளை அணியலாம். கருப்பு நிற ஆடைகளை தவிா்க்க வேண்டும்.

வெளியே செல்லும்போது குடை, தொப்பி அல்லது கண்களுக்கு குளிா்ச்சி தரக்கூடிய கண்ணாடியை அணியலாம். தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். இளநீா், மோா், கம்பங்கூழ் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.

மயக்கம் அல்லது அதீத சோா்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைத் தொடா்பு கொள்ள வேண்டும். மயக்கமடைந்தவா்களை நிழலான அல்லது குளிா்ந்த இடத்துக்கு மாற்றுவதோடு, ஈரத்துணியால் உடலை துடைக்க வேண்டும். உயா் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனா்.