அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல்15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது. ஏற்கெனவே 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்பாட்டை தடை செய்ய அந்த மாநில அரசு முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகப் பயன்பாட்டுத் தடைக்கான வழிவகைகளை தொடர்புடைய துறைகளுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், செய்தித்தாள் வாசிப்பு பரிந்துரைக்குப் பின்னால் உள்ள அம்சங்களாக அந்த மாநில அரசின் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தெரிவிப்பதையும் கவனத்தில் கொள்வோம்.
மாணவர்கள் சமூக ஊடகப் பயன்பாடு அதிகமாக மேற்கொள்வதால் அவர்களுக்குப் பாடங்களில் கவனம் குறைகிறது. மறதியும் சோர்வும் உண்டாகின்றன. பார்வை தொடர்பான குறைபாடுகள் உண்டாகின்றன. இவ்வாறான கவலையளிக்கும் விஷயங்களைப் பகிர்ந்து இதிலிருந்து மாணவர்கள் மீட்கப்பட வேண்டுமானால் அதற்கு மாற்று வழியாக இந்த செய்தித்தாள் வாசிப்பு உதவும், மாணவர்கள் நடப்பு விஷயங்களை அவ்வப்போதே தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் தாங்கள் பங்கேற்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக உதவியாக இருக்கும் என அந்த மாநில அரசு கருதுகிறது.
இது வரவேற்கக் கூடிய விஷயம் என்று சொன்னாலும், இதில் சில வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். மாணவர்களுக்கு எந்த வகையான செய்தித்தாள்களை அந்த அரசு வழங்கும். அந்த செய்தித்தாள்களில் எந்த மாதிரியான விஷயங்கள் மாணவர்கள் படிக்க ஏதுவானதாக இருக்கும். அவற்றை யார் தேர்வு செய்து கொடுப்பது. அதுவும் ஆசிரியர்களின் அன்றாடப் பணிகளுடன் ஒன்றாக ஆகுமா? இவ்வாறான திட்டங்களுடன் தொடர்புகொண்டு மற்றொரு விஷயம் இதன் பயன்பாட்டு விவரங்களை செயலியில் பதிவிடுதல். ஏற்கெனவே செயலிகளுடனேயே வாழ்வைக் கழிக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிப்பளுவாக இந்தச் செயல்பாட்டை பதிவேற்றுவதும் வந்து சேருமா என்ற கோணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்.
செய்தித்தாள் தேர்வு செய்வதைப் பொருத்தவரை அந்த மாநில கல்வித் துறையே மாணவர்களுக்கென்று தனியாக ஒரு பதிப்பை கொண்டு வரலாம். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களுக்கான செய்தித்தாளை (மாதமிருமுறை) கொண்டு வருவது ஓர் ஆரோக்கியமான அம்சம். இந்த வகையில், மாணவர்கள் படிக்கத் தேவையாக உள்ள செய்திகள் அடங்கிய ஒரு தனிசெய்தித்தாளைக் கொண்டுவருவது சரியானதாக இருக்கும்.
வாசிப்பு என்பது மிகவும் அருகிப் போகக்கூடிய விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது.
புத்தக வாசிப்பிலிருந்து தேர்ந்த வாசகர்களே விலகிவருகின்றனர். வாசிப்பு பழக்கமுடைய பலரும் கூட ஒலிப்புத்தகங்களை (ஆடியோ புக்ஸ்) கேட்போராக மாறி வருகின்றனர். இதர செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே ஒலிப்புத்தகங்களை கேட்கும் பழக்கமும் அதிகமாகி வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா தகவல்களையும் இணையம் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். இந்த நிலையும் மெல்ல மாறி வருகிறது. தற்போது வெளியாகும் விளம்பரங்கள் செயற்கை நுண்ணறிவை சிலாகித்துப் பேசுவதாக அமைந்து வருகின்றன. குறிப்பாக, தமக்கு ஏற்படும் எந்த ஒரு சந்தேகத்தையும் செயற்கை நுண்ணறிவு செயலிகளிடம் கேட்டு அறிவதாகவே விளம்பரங்கள் வரத் தொடங்கியுள்ளன.
இது என்ன அறிவியல் மேம்பாடு என்பது அனைவருடைய வாழ்க்கையும் எளிதாக்கி வருவது நியாயம்தானே? இதில் ஏன் இவ்வளவு கவலை கொள்ள வேண்டும்? என்று தோன்றலாம்.
ஆனால், அதே நேரத்தில் எல்லா வகையான தேடல்களுக்கும் பதில் அளித்துக் கொண்டு செயலிகளால் பல மணி நேரம் இயங்க முடியும். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் செயலிகளுக்கு எவ்விதமான ஓய்வும் தேவையில்லை. அது இரவு}பகல் என்று பாராமல் எல்லா நேரமும் இயங்கக்கூடியவை. ஆனால், மனிதர்களின் பரிணாமம் அப்படிப்பட்டதல்ல.
மனிதர்களைப் பொருத்தவரையில் 8 மணி நேரம் பணி, 8 மணி நேரம் ஓய்வு உறக்கம், 8 மணி நேரம் இதர பணிகளுக்கு என்ற வகையில்தான் வாழ்க்கையை பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். (விதிவிலக்குகள் இருக்கலாம்). செயலிகளுக்கு இணையாக மனிதர்களும் இயந்திரகதியாக இயங்குவது சரியா என்ற கோணத்தில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஒரு தாவரத்தை நடுகிறோம். அது வேர்ப்பரப்பி, கிளைபரப்பி, பூத்துக், காய்த்து கனியாக உரிய நேரத்தை நாம் கொடுக்கிறோம். அதுபோலத்தான் அறிவு வளர்வதும் ஆகும்.
அறிவு வளர்ச்சிக்கும் குறிப்பிட்ட காலகட்டம் நிச்சயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், புத்தக வாசிப்பின் மூலம் அறிவைப் பெற முற்படும்போது அந்த அறிவு ஒரு காத்திரமான அறிவாக மூளையில் தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதே நேரத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவோ, ஒரு காணொலியோ கொடுக்கக்கூடிய தகவல்கள் எந்த அளவுக்கு உயிரோட்டமாக மூளையில் பதியும் என்பதும் கேள்விக்குறியே.
அந்த வகையில் வாசிப்பை முன்னெடுக்க அந்த அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கையை அவசியம் பாராட்ட வேண்டும்.
கற்றல், கற்பித்தலை கணிணி மற்றும் கைக்கணினி மூலம் மேற்கொண்டிருந்த டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளும் அச்சடித்த பாடநூல்களுக்கும், குறிப்பேடுகளுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். செயற்கையிலிருந்து இயற்கைக்குத் திரும்ப அவர்கள் விழித்துக் கொண்டு விட்டனர். இந்தியாவும் விரைவில் விழித்துக் கொள்ளட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

வெற்றியின் முதல்படி- பள்ளிக் கல்வி!

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

