கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளது. அண்மையில் அந்த மாநில பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா இதை அறிவித்தார். ஆந்திரத்திலும் இது போன்ற முன்னெடுப்பை எடுக்க உள்ளதாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் 13 வயதுக்குட்பட்டோரின் சமூகவலைதளப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான 90 நாள்கள் செயல்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான செயல்வடிவங்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த இரு அறிவிப்புகளையும் சாத்தியப்படுத்துவதில் சவால்கள் உள்ளன. இருப்பினும், இந்த நோக்கம் பாராட்டப்பட வேண்டியதுதான்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் பலவும் இது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஆதரவு தரவேண்டிய பெற்றோர்க இந்த அறிவிப்பின் பின்னணியை எந்த அளவுக்கு சரியான அளவில் உள்வாங்குகிறார்கள்? எந்த அளவுக்கு உதவிகரமாக செயல்படப் போகிறார்கள்? என்பதன் அடிப்படையிலேயே இதன் வெற்றி அமையும்.
இன்றைக்கு குழந்தைகளை வளர்க்கும் போதே அறிதிறன்பேசியை அவர்களிடம் கொடுத்து பல்வேறு செயல்பாடுகûளை பெற்றோர் மேற்கொள்கின்றனர். குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்கும், குழந்தையை அமைதிப் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கும் அறிதிறன்பேசிகளே வடிகாலாக உள்ளது. கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான தமிழ், ஆங்கில மற்றும் மாநில மொழிப் பாடல்கள் என்று பல விடியோக்களைக் காண்பிக்கின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதிலிருந்து விளையாட்டு காண்பிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை சாதித்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு குழந்தைப் பருவம் முதலாகவே குழந்தைகளிடம் அறிமுகமாகும் அறிதிறன்பேசி ஒரு செவிலித்தாய் போலவே செயல்படத் தொடங்கி விடுகிறது.
ஒரு காலத்தில் மக்கள் உழைக்கும் நேரம், ஓய்வு நேரம், உறங்கும் நேரம் என்ற வகையில் நேரத்தைப் பிரித்து வாழ்ந்தனர். ஏதோ ஒரு நாளில்தான் திரைப்படப் பாடல்களைக் கேட்க முடியும்; ஏதோ ஒரு நாள்தான் திரைப்படங்களைப் பார்க்க இயலும் என்ற நிலையிலிருந்த போது திரைப்படங்களோ, திரைப்படப் பாடல்களோ ஓர் அரிதான பொருளாக அமைந்திருந்தது. ஆனால், இன்றைக்கு 24 மணி நேரமும் பொழுதுபோக்குக்கான நேரம் போல ஆகிவருகிறது. வாழ்க்கைக்குள் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதுபோக்கே வாழ்க்கை என்றாகி வருகிறது.
அதிகாலை இரண்டு மணிக்கு இயற்கை உபாதை கழிக்க எழுந்திருக்கும் பலரும், அந்த நேரம்கூட அறிதிறன்பேசியை பார்த்துவிட்டு தூங்கும் காலமாக மாறி வருகிறது. அந்த அளவுக்கு எங்கும் செயலி- எதற்கும் இணையம் என்ற நிலையில், அறிதிறன்பேசியின் மீதான நெருக்கமும் அடிமைப்படும் அபாயமும் நிறைந்த நிலையில், பெற்றோர் இருக்கும்போது உடன் வாழும் இளையோருக்கு மட்டும் கட்டுப்பாடுகளை சாத்தியப்படுத்துவது மிகவும் கடினமே.
முதலில் பெரியவர்களை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வர முயலவேண்டும். அவர்கள் பின்பற்றும் ஒழுக்கமே குழந்தைகள், இளையோர் மத்தியிலும் பரவலாகும்.
சமூகவலைதள கணக்கைத் தொடங்கும் போது வயதை வெளிப்படுத்தித்தான் தொடங்க வேண்டும். கல்விச் சான்றிதழ், ஆதார் போன்ற ஆளறிச் சான்றிதழ்களைக் கட்டாயமாக்கலாம். ஆனால், இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இவை எளிதில் சாத்தியமே. மேலும், பெரியோரின் சமூகவலைதளக் கணக்குகளையே பராமரிப்பவர்களாக இளையோரே உள்ள நிலையில், அவர்களின் கணக்குகளில் இளையோர் எளிதில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சவால்களை முறியடிக்க உலகளாவிய தீர்வுகள் ஆலோசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். ஒரு காலத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் இயங்கின. அதுபோல கேளிக்கைக்கான சமூக வலைதளங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இயங்கும் என்பது போன்ற நெறிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். ஆனால், இணைய சேவை வர்த்தகம் பல லட்சக்கணக்கான கோடிகளை உள்ளடக்கிய பன்னாட்டு வணிகம். இதில் பல நாடுகள் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. எனவே, அந்த நிறுவனங்களும் இந்த சீர்திருத்தத்தில் கைகோக்க முன்வர வேண்டும்.
காலநிலை மாற்றம், மழைநீர் சேமிப்பு, கொசு ஒழிப்பு, வனப் பராமரிப்பு போன்ற உலகளாவிய சவால்கள் போல இந்த சமூக வலைதள பயன்பாட்டுச் சவாலும் ஓர் உலகளாவிய சவாலாக மாறி வருகிறது. இதற்கு உள்ளூர் அளவிலான தீர்வுகளை தற்காலிகமாக நடைமுறைப்படுத்தி பார்க்கலாமே தவிர, அது நிரந்தரத் தீர்வாகாது.
செயற்கை நுண்ணறிவின் சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் அறிவார்ந்த சமூகம் இதுதொடர்பான வாதங்களை நடத்தி வழிவகை காண வேண்டும். கிராமங்களில் 24 மணி நேரமும் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர் குறிப்பிட்ட நேரம்தான் கிடைக்கிறது. அத்தியாவசியமான நீர்த் தேவையைக் கட்டுப்படுத்திக் கொண்டு சமாளிக்கும்
சமூகத்துக்கு கேளிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள முடியும். எனவே, முயன்றுதான் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

ஏ.ஐ. யுகத்திலும் தொடரும் வேதனைகள்!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


