கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதிப் படுகையில் தனது நியாயமான நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமையாகும். இது ஓர் ஆக்கிரமிப்புச் செயல் அல்ல

News image

சிந்து நதி - ANI

Updated On :41 நிமிடங்கள் முன்பு

-பிரவீண் குமார் சக்சேனா

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அமைப்பு சிந்துப் படுகை முழுவதிலும் குடிநீர், விவசாயம் மற்றும்

மின் உற்பத்திக்கு உதவுவதுடன், எல்லைக்கு இருபுறமும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.1947-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது சிந்து நதி அமைப்பும் இரு நாடுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டது. நதிகளின் தொடக்கப் பகுதிகளை இந்தியா கட்டுப்படுத்துகிறது; பாகிஸ்தானின் பஞ்சாபிலுள்ள விவசாய நிலங்கள் அந்த நீரைப் பெரிதும் சார்ந்துள்ளன.

இந்தியாவுக்கு அதன் பஞ்சாப், ராஜஸ்தானின் மேம்பாட்டுக்காக சிந்து நதி நீர் தேவைப்பட்டதால் 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி பாகிஸ்தானுடனான நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்தது.

ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவின் நியாயமான, ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கும், பாகிஸ்தானின் மிகைப்படுத்தப்பட்ட, சில சமயங்களில் அபத்தமான கோரிக்கைகளுக்கும் இடையிலான சமச்சீரற்ற தன்மையால் பேச்சுவார்த்தைகள் அதன் போக்கிலேயே வடிவமைக்கப்பட்டன. அந்த சமச்சீரற்ற தன்மையானது முடிவுகளை பாகிஸ்தானுக்கு சாதகமாக நிலைநிறுத்தியது. 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட முதலாவது குறிப்பிடத்தக்க முன்மொழிவு இதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

சிந்து, செனாப் ஆகிய இரு நதிகளின் மேல்பகுதிகளிலும் இந்தியாவால் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்; அவற்றின் பயன்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டும். மெராலாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) செனாப் நதி நீர் எதுவும் இந்தியாவின் பயன்பாட்டுக்குக் கிடைக்காது. கட்ச் பகுதியில் அந்த நதிநீர் அமைப்பிலிருந்து எந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களும் அனுமதிக்கப்படாது என்பவையே அந்தப் பரிந்துரைகள்.

இவை கடுமையானவை என்றபோதிலும், இந்தியா அந்தப் பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டது; இதன்மூலம், விரைவான தீர்வுக்கான தனது விருப்பத்தை அது வெளிப்படுத்தியது. மாறாக, பாகிஸ்தான் அதை முறைப்படி ஏற்றுக்கொள்ளும் முடிவை 1958-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதிவரை, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குத் தாமதப்படுத்தியது.

ஒப்பந்தத்தின் ஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி, இந்தியா மூன்று கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவற்றின் மீது பிரத்யேக உரிமைகளைப் பெற்றது. அதேவேளையில், பாகிஸ்தான் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவை மீது உரிமைகளைப் பெற்றது. இந்தியா தனது எல்லைக்குள் உள்ள மேற்கு நதிகளை நீர்மின் உற்பத்தி போன்ற குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட, நுகர்வு அல்லாத பயன்பாடுகளுக்கு அனுமதித்தது.

நீரின் கன அளவு அடிப்படையில் பார்க்கையில், இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட கிழக்கு நதிகள் ஆண்டுதோறும் சுமார் 33 மில்லியன் ஏக்கர்-அடி (எம்ஏஎப்) நீரோட்டத்தைக் கொண்டுள்ளன. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு நதிகள் சுமார் 135 எம்ஏஎப் நீரோட்டத்தைக் கொண்டுள்ளன. இதன்மூலம், இந்த நதி அமைப்பின் மொத்த நீரில் சுமார் 80 சதவீதத்தை பாகிஸ்தான் பெறுகிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா புதிய நீரைப் பெறவில்லை. இந்தியா ஏற்கெனவே அணுகி வந்த நீரோட்டங்களுக்கான முறையான அங்கீகாரத்தையே அது பெற்றது. இதற்குப் பிரதிபலனாக, மிகப் பிரம்மாண்டமான மேற்கு அமைப்பின் மீதான தனது அனைத்து உரிமைகளையும் அது கைவிட்டது. இந்தியாவுக்குள் அமைந்துள்ள மேற்கு நதிகளின் சில நுகர்வுசாரா பயன்பாடுகளுக்கு முதன்மையாக, ஆற்று நீரோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இந்தியா அனுமதிக்கப்பட்டது.

உடன்படிக்கையின் மிகக் குறிப்பிடத் தக்க முரண்பாடு, அநேகமாக அதன் நிதிசார் ஏற்பாடே ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீர்வள உள்கட்டமைப்புகளை அமைப்பதற்காக, பாகிஸ்தானுக்கு இழப்பீடாக தற்போதைய மதிப்பில் சுமார் 2.5 பில்லியன் டாலர் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.

நீர் ஒதுக்கீடு குறித்த அடிப்படைப் பிரச்னையில் பாகிஸ்தானுக்குப் பெருமளவில் சாதகமாக அமைந்த ஓர் ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவி புரிந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானிடம் தொடர்ச்சியாக எதுவும் கேட்டு விடாதபடி, மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க தொடர் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்தியா தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில், வரையறுக்கப்பட்ட அளவிலான நீர்ப்பாசன பயிர்ப் பரப்பை மட்டுமே உருவாக்க இயலும். மேற்கு நதிகளில் அமைக்கப்படும் எந்தவொரு நீர்மின் நிலையத்துக்கும், நீர் தேக்கும் அளவு, சேமிப்புத் திறன் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வடிவமைப்பு அளவுகோல்களை இந்தியா கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஒப்பந்தம் கொண்டிருந்தது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஒருவழிப் பாதையானவை. அவை இந்தியாவின் சொந்த எல்லைக்குள் உள்ள வளங்களை சட்டபூர்வமாக மேம்படுத்துவதைக் கட்டுப்படுத்துகின்றன. அதே நேரத்தில் பாகிஸ்தான் மீது அதற்கு இணையான வெளிப்படைத்தன்மை அல்லது கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதிக்கவில்லை. இவ்வாறு நீரோட்டத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ள நாடான இந்தியா கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. நீரோட்டத்தின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நாடானதுஉறுதி செய்யப்பட்ட நீர்வரத்தின் மூலம் பயனடைகிறது.

இந்தியாவை "நீர் ஆக்கிரமிப்பாளராக' சித்தரிக்கும் வகையிலான ஓர் உலகளாவிய பரப்புரையை உருவாக்கிப் பரப்பி வருகிறது பாகிஸ்தான். இதைப் பயன்படுத்தி ராஜீய ரீதியிலான அழுத்தத்தை உருவாக்கவும், பலதரப்பு நாடுகளின் அனுதாபத்தை ஈர்க்கவும், இந்தியாவின் நியாயமான ஒப்பந்த உரிமைகளை நிலைநாட்டும் திறனை முடக்கவும் செய்துள்ளது பாகிஸ்தான். இந்த தந்திரோபாயத்தின் தனித்துவமான முரண் என்னவென்றால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை

ஒருமுறைகூட மீறியதில்லை. சிந்துப் படுகையில் இந்தியாவின் வளர்ச்சியில், அத்தகைய ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகள் குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாபின் சில பகுதிகள் நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வாய்ப்பிருந்தும் வறண்ட நிலையிலேயே உள்ளன அல்லது மாற்று மற்றும் அதிக செலவு பிடிக்கும் நீர் ஆதாரங்களையே சார்ந்திருக்கின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் விவசாய உற்பத்தித் திறன் ஒரு கணக்கிட முடியாத பொருளாதார இழப்பை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த ஒப்பந்தம் ஜம்மு-காஷ்மீர் மீது ஏற்படுத்தி வரும் விளைவு மிகவும் கடுமையானது. அந்த யூனியன் பிரதேசம் மேற்கு நதிகளின் கரையில் அமைந்துள்ளதுடன், பெருமளவில் பயன்படுத்தப்படாத மகத்தான நீர் மின் ஆற்றலையும் கொண்டுள்ளது. அதை மேம்படுத்துவது, ஒப்பந்தத்தின் வடிவமைப்பு கட்டுப்பாடுகள், பாகிஸ்தானின் திட்டமிட்ட எதிர்ப்புகள், பல நிலை கொண்ட பிரச்னைக்குத் தீர்வு காணும் நீடித்த செயல்முறைகள் போன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால் ஒவ்வொரு கட்டத்திலும் தடைபட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் இந்த ஒப்பந்தத்தை, பகிரப்பட்ட நன்மைகளுக்கான ஒரு கட்டமைப்பாகப் பார்க்காமல், தங்கள் பகுதி வழியாகப் பாயும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதைத் தடுக்கும் ஒரு வெளிப்புறத் திணிப்பாகவே பார்க்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக, பாகிஸ்தான் ஆவணப்படுத்திவரும் அரசு ஆதரவு பயங்கரவாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருவதற்கான அடிப்படையையே சவாலுக்கு உள்ளாக்குகிறது.

சிந்து நதி நீர் பேச்சுவார்த்தை செயல்முறையானது பாகிஸ்தானின் பிடிவாதத்துக்கு இடமளிக்கும் வகையிலும், இந்தியாவின் நல்லெண்ணத்தைத் திட்டமிட்டுச் சுரண்டும் வகையிலும் கட்டமைக்கப்பட்டு, தொடக்கத்திலிருந்தே ஒரு சமமற்ற ஒப்பந்தமாகக் காட்சியளித்தது.

இருப்பினும், இந்தியா 80 சதவீத நீரை விட்டுக்கொடுத்ததுடன், பாகிஸ்தான் திணித்த பல போர்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு அந்த நாடு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு மத்தியில், 65 ஆண்டுகளாக இணக்கத்துடன் ஒப்பந்த விதிகளைத் துல்லியமாகப் பின்பற்றி வருகிறது.

சிந்து நதிப் படுகையில் தனது நியாயமான நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமையாகும். இது ஓர் ஆக்கிரமிப்புச் செயல் அல்ல; மாறாக, ஒருபோதும் பரஸ்பரம் வெளிப்படுத்தப்படாத நன்னம்பிக்கை மற்றும் சமத்துவமற்ற ஓர் அமைப்பில் நீண்ட காலமாகத் தேவைப்பட்ட ஒரு திருத்தமாகும்.

"இந்த ஒப்பந்தம் ஏன் இப்போது நிறுத்தி வைக்கப்படுகிறது' என வினவுவோர், ஒரு சரியான முடிவை எடுக்க எந்த நேரமும் நல்ல நேரம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:

முன்னாள் ஆணையர்,

சிந்து நதி ஆணையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.