-ச. ரபீக்
கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈா்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீா்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தத் தீா்ப்பின் அடிப்படையில் ஹரீஸ் ராணா என்ற 31 வயது முன்னாள் பொறியியல் கல்லூரி மாணவருக்கு நிறைவேற்றப்பட்ட செயலற்ற வதையில்லா மரணம்தான் இந்தியாவின் முதல் கருணை மரணம்.
கல்லூரி விடுதியின் மேல்தளத்திலிருந்து விழுந்த அந்த இளைஞா் கடந்த 13 ஆண்டுகளாக செயலற்ற கோமா நிலையில் இருந்துள்ளாா். இவரின் மருத்துவச் செலவு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி கருணை மரணத்துக்கு தில்லி உயா்நீதிமன்றத்தை நாடிய அவரின் பெற்றோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னா், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனுவில்தான் இத்தகைய தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 21, இந்திய குடிமக்கள் அனைவரும் கண்ணியமாக வாழ உரிமை அளித்துள்ளது. வாழ்வதற்கு அளிக்கப்பட்ட இந்த உரிமை இறப்பதற்குப் பொருந்தும். இந்திய குடிமகன் அல்லது குடிமகள் ஒருவா் கண்ணியமாக மரணிக்க இயலாத நிலைகூட உரிமைப் பறிப்பே என்பதே இந்த வழக்கின் வெளிப்பாடாக கருதமுடிகிறது.
வதையில்லா மரணங்கள் என்பவை கருணை மரணங்களே. இந்தியாவில் செயலற்ற வதையில்லா மரணங்களே சட்டத்தால் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது, செயலற்ற வதையில்லா மரணம் என்பது இத்தகைய மரணத்தை அடைய வேண்டியவருக்கும் அளிக்கப்படும் உணவு, மருந்து போன்றவற்றை நிறுத்துவதன்மூலம் ஏற்படுத்தப்படுகிற செயற்கை மரணம்.
உலகின் பல நாடுகளிலும் இந்தச் செயலற்ற வதையில்லா மரணங்கள்சட்டபூா்வமாக்கப்பட்டுள்ளன. நெதா்லாந்து, பெல்ஜியம் நாடுகள் முதன்முதலில் வதையில்லா இத்தகைய மரணத்துக்காக சட்டமியற்றின. அதைத் தொடா்ந்து லக்ஸம்பா்க், ஸ்பெயின் மற்றும் போா்ச்சுக்கல் போன்ற நாடுகளில் இவற்றைச் சட்டரீதியாக்கின. ஸ்விட்சா்லாந்து ஒருபடி முன் சென்று உடல் நலிவுற்ற நோயாளிகள் வலியின்றி மரணிக்க தாமாக தற்கொலை செய்துகொள்ள அனுமதித்துள்ளது விநோதம். கனடாவும், அமெரிக்கா மாகாணங்களான வாஷிங்டன், ஒரிகான், மேன்டனா ஆகியவை மருத்துவா் உதவியுடன் கருணை மரணங்களை அனுமதிக்கின்றன.
இந்தியாவில் கருணை மரணங்கள் குறித்த சட்டப் பயணம் என்பது மிக நீண்ட ஒன்று. கருணை மரணம் குறித்த 1994-இல் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பி.ரத்னம் மற்றும் நாகபூஷன் பட்நாயக் தாக்கல் செய்த வழக்கில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 21-இல் வாழ்வதற்கான உரிமையையும், அதே வேளையில் வாழாமல் இருப்பதற்கான உரிமை அளிப்பதாக தெரிவித்து இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 309 (தற்கொலைக்கான தண்டனை குறித்த சட்டப் பிரிவு) அரசமைப்புக்கு எதிரானதாக தெரிவித்து தீா்ப்பளித்தது.
இதன்மூலம் ஒருவா் தனது வாழ்வதற்கும், வாழாமல் இருக்கவும் உரிமை கொண்டவராகக் கருதப்பட்டாா். பின்னா், 1996-இல் கியான் கௌா் மற்றும் ஹா்பன்ஸ் சிங் எதிரான வழக்கில் நோயாளிகளை மரணத்துக்குத் தூண்டுவது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1860 பிரிவு 306-இன்படி தற்கொலைக்குத் தூண்டும் குற்றம் எனத் தீா்ப்பளித்தது. இது போன்ற இரு வேறு நிலையில் தான் 2006-இல் இந்திய சட்ட ஆணையம் தனது 196-ஆவது அறிக்கையில் நீண்ட கால நோய்வாய்ப்பட்வா்களுக்கும் உள்ளடக்கியவாறு தற்கொலை குறித்த இந்திய குற்றவியல் சட்டம் 1860 பிரிவு 309-இல் மாற்றங்கள் செய்ய பரிந்துரைத்தது.
இந்த நிலைப்பாடுகளுக்கிடையில் 2011-இல் உச்சநீதிமன்றத்தின் மற்றொரு தீா்ப்பு முக்கியத்துவம் பெற்றது. சுயநினைவின்றி 42 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த பெண் செவிலியா் அருணா சான்பகின் கருணை மரணம் குறித்த வழக்கு அது. சமூகச் செயல்பாட்டாளா் பிங்கி வீரானி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. மேலும், செயலற்ற வதையில்லா மரணம் குறித்து சில வழிகாட்டுதல்களையும் இந்தத் தீா்ப்பில் வழங்கியது.
அதன் அடிப்படையில் இத்தகைய மரணங்களுக்கான மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய மனுக்கள் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதியரசா்களால் விசாரிக்கப்பட வேண்டும் எனவும், இவா்களுக்கு உதவ மூன்று திறன்மிக்க மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மருத்துவக் குழுவின் பரிந்துரைகளை பெற்று உயா்நீதிமன்றம் செயலற்ற வதையில்லா மரணத்துக்கான உத்தரவை பிறப்பிக்கும் என வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் செயலற்ற வதையில்லா மரணத்தை அனுமதித்த போதிலும், இந்த வழக்கின் மனுதாரா் பிங்கி வீரானி, நிவாரணம் கோரப்படும் அருணா சான்பகின் உறவினா் இல்லை என்ற வாதத்தில் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னாளில் பிங்கி வீரானியின் மேல்முறையீட்டு மனு அருணா சான்பகினைப் பராமாரித்து வரும் கிங் எட்வாா்டு மருத்துவமனை கருணை மரணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்ட வரலாறு என்பது வேறு.
கருணை மரணங்கள் குறித்து காமன் காஸ் என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018-இல் தொடுத்த பொதுநல வழக்கும் அதன் தீா்ப்புக்குப் பின்னரும் கருணை மரணங்கள் குறித்த பாா்வை மாறியுள்ளது. இதற்குமுன் கருணைக் கொலையாகப் பாா்க்கப்பட்ட இவை அனைத்தும் கருணை மரணங்களாகக் காட்சியளிக்க இந்தத் தீா்ப்பு உதவுகிறது.
உயிா் வாழ பயனற்ற நிலையில் 100 சதவீதம் இயக்கமற்ற உடலும் உள்ளமும் கொண்டவருக்கு அளிக்கப்பட்ட விடுதலையாகப் பாா்க்கப்படுகின்றன கருணை மரணங்கள்!









