இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 5:53 am IST

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள். ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் உயர்வுக்கான நம்பிக்கையும் இவர்களே. பள்ளிகள், கல்லூரிகளின் பெருமைக்கும் புகழுக்கும் இவர்களின் உழைப்பே காரணமாகிறது.

சிறந்த மாணவர்களுக்கு பிரத்யேக குணாம்சங்கள் இருக்கின்றன. அவர்கள் புத்திசாலித்தனமும் கடின உழைப்பும் ஒருங்கே கொண்டவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய பிரகாசமான மாணவர்கள் படித்து முடித்து கல்விச் சாலைகளை விட்டு வெளிவரும்போது அரசு நிறுவனங்கள் முதலாக பன்னாட்டு நிறுவனங்கள் புத்தாக்கத் தொழில்களை ஆள்பவர்களாக உயர்கிறார்கள்.

மாணவர்களே சிறந்த குடிமக்களாகவும், தலைவர்களாகவும், தேசத்துக்குப் பெருமை சேர்க்கும் சாதனையாளர்களாகவும் வளர்கிறார்கள். அதனால், இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் எதிர்காலத்தில் உழைக்க வேண்டிய மாணவர்களுக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறதா? மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்து கொள்கிறார்கள்?

தங்கள் கனவுகளை மட்டுமல்ல, தங்கள் பெற்றோர்களின் கனவுகளையும் சுமக்கும் கட்டாயம் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறது. அதனால், அவர்களின் சுமை கூடுதலாகிறது அல்லது இலக்கு கடினமானதாகிறது. இலக்கை நோக்கிய பயணத்தில் போட்டி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சூழ்நிலையின் கடினத்தை பெற்றோரின் எதிர்பார்ப்பு இன்னும் கூட்டுகிறது.

அக்கம் பக்கத்தில் யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு துறையில் படித்து எடுத்த எடுப்பில் பெரிய வருமானத்தில் வேலைக்குப் போய்விட்டால் பெற்றோர் கவனம் அதில் நிலைபெற்றுவிடுகிறது. தங்கள் குழந்தை வளமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை எல்லாப் பெற்றோருக்கும் உரியது. அதிலே தவறு காண்பது சரி இல்லை.

அதேநேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு அந்தத் துறையில் நாட்டம் இருக்கிறதா? அவர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்பது குறித்து பெரும்பாலான பெற்றோருக்கு அக்கறை இல்லை. பெரிய வருமானம் வர வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தைகளின் கனவுகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களின் மீது சுமையை ஏற்றுவதுடன் கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். இது மாணவர்களின் மனதில் சுமையாகவும் அவர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைந்து விடுகிறது.

சிகரம் தொட நேர்த்தியான தயாரிப்பு அவசியம். எந்த நேரத்திலும் அவர்களின் சிந்தனை தங்கள் துறை சார்ந்த அம்சங்களில் இருப்பது, ஆர்வத்துடன் துறையின் புதிய முன்னேற்றங்களை அறிந்துகொள்வது என்று ஒருமுகப்பட்ட முயற்சி மட்டுமே நேர்த்தியான தயாரிப்பை அளிக்கும். விருப்பம் இல்லாத துறையில் இத்தகைய ஒருமுகப்பட்ட முயற்சி சாத்தியமாகாமல் போகலாம்.

நம்மால் என்ன செய்ய முடியும்?, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற தெளிவு லட்சியத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தும். கட்டாயத்தால் ஒரு துறையில் கல்வியைப் பெறும் மாணவருக்கு இந்த உணர்வு தோன்றுவது அரிது. அவர்கள் விரும்பிய துறையிலும் ஈடுபடாமல் விருப்பம் இல்லாத துறையில் கவனத்தைச் செலுத்தவும் முடியாமல் கூட்டத்தில் ஒருவராகக் காணாமல் போகும் அபாயம் இதனால் தோன்றுகிறது.

"ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்யுங்கள், அதைச் செய்யும்போது, மற்ற அனைத்தையும் மறந்து உங்கள் முழு ஆன்மாவையும் அதில் செலுத்துங்கள்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆத்மார்த்தமாக எதை விரும்புகிறோமோ அதைத்தானே அப்படிச் செய்ய இயலும். அப்படியான செயல்பாட்டில்தான் நேர்த்தியும் நுட்பமும் வெளிப்படும்.

மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகி புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து உயர் கல்விக்குத் தயாராகும் இந்த நேரத்தில், நாம் சிலவற்றை சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. பாரத தேசத்தில் மாணவர்களின் பொறுப்புணர்வு வியக்கத்தக்க வகையில் சிறப்பாக இருக்கிறது. பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்ற பேதம் இல்லாமல், அவர்களின் உழைப்பு நாளைய தேசத்துக்கான நம்பிக்கையைத் தருகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு சுமார் 22 லட்சம் மாணவர்கள் தயாராகியிருக்கிறார்கள். ஜேஇஇ தேர்வை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் அடுத்த உயர்நிலைத் தேர்வுக்கும் தேர்வு பெற்றிருக்கிறார்கள். சட்டக் கல்வி பெற விரும்பி 88,000 மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.

இதுதவிர நாடு முழுவதும் பல்வேறு புகழ்மிக்க கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்கள் நிறுவனங்களில் சிறப்பு நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் முன் நிற்கின்றனர். வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் சற்றும் குறைவின்றி கணிசமாகவே உள்ளது. இத்தகைய தேர்வுகளை ஓரிரு நாள் தயாரிப்பில் எவராலும் எழுத இயலாது. பல ஆண்டுகள் தவம் போல பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தகுதித் தேர்வுகளின் வினாத் தாள்களைச் சந்திக்க இயலும்.

ஆக, இளம் பிள்ளைகள் மிகுந்த பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்டவர்களாக அதிகாலை தொடங்கி இரவு வரை தங்கள் கல்வி, உயர் கல்வி, பெற்றோர்களின் சூழ்நிலை அனைத்தையும் உணர்ந்து தங்கள் வாழ்க்கையுடன் குடும்பத்தின் மேன்மையையும் மனதில் கொண்டு உழைக்க அஞ்சாது பாடுபடுகிறார்கள்.

மீன்களை நீந்துவதற்கும் பறவைகளைப் பறப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். மீன்களும் பறக்க வேண்டும் என்று அவற்றை நிர்ப்பந்திக்கலாகாது என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். எந்தத் துறையில் படிக்க வேண்டும் என்பதைவிட எந்தத் துறையாயினும் எப்படிப் படிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பாரத தேசம் பன்னெடுங்காலமாகக் கல்விக்கு முக்கியத்துவம் தருகிற தேசமாக இருந்து வருகிறது. நாமும் நமது பிள்ளைகளுக்கு எப்பாடுபட்டேனும் நல்ல கல்வியை அளித்து விட்டால் அவர்கள் வாழ்வு பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்பி எத்தகைய தியாகத்துக்கும் தயாராகிறோம்.

கடின உழைப்பை, பொறுப்புணர்வைத் தரும் மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தந்தைக்குப் பாடம் சொன்ன முருகனைப் போல இவர்களையும் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில் பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க தியாகம் செய்யும் பெற்றோர்களும் வணக்கத்துக்கு உரியவர்கள்.

ஆனால், கல்வி என்பதன் பொருளை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பருவநிலை போல படிப்பிலும் அவ்வப்போது சில படிப்புகள் முதன்மை பெறுவதும் எல்லாரும் அதிலே பாய்வதும் நற்கல்வி ஆகாது. உண்மையில் கல்வி என்று நம் முன்னோர்கள் எதைக் காட்டினார்கள்?

பணம் சம்பாதிப்பதே முதன்மை நோக்கம் என்பது நமது வழக்கம் இல்லை. ஆற்றலை வளர்த்துக் கொள்வதும் கல்வியால் அடைந்த ஞானம் நமது சொந்த வாழ்க்கையில் அறம் உணர்ந்து வாழ்வதற்குப் பயன்படுவதும் முதன்மையானது. அதனால் தான் நாலடியார்,

"கல்வி கரையில; கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின், பிணிபல;-தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து'

என்று கூறுகிறது. அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்தெடுத்துப் பருகுவதைப்போல, அறம் எது என்பதை உணர்ந்து கொள்வதற்குத் தேவையான நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்.

வள்ளுவப் பேராசான் இதன் அடுத்த நிலையை இன்னும் எளிதாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

"கற்க கசடற கற்றவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.'

என்று கற்றதன் வழியில் வாழ்க்கையை குற்றமற்றதாக அதாவது நேர்மையின் பாதையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

கல்வி கரையில- அதாவது கல்வி முடிவற்றது. அதை ஒளவைப் பாட்டி, "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்றாள். கல்வி என்பது ஒரு தொடர் பயணம், அதற்கு முடிவே இல்லை. சுயக் கட்டுப்பாடு, தரமான சிந்தனை, உயரிய லட்சியங்கள், எவரையும் துன்புறுத்தாத எளிய வாழ்க்கை இவற்றை எது வழங்குமோ அதுவே உண்மையான கல்வி.

செல்வத்தைச் சேர்ப்பதற்காகப் படிக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு கல்வியே அழியாத செல்வம். அது நிரந்தரமானது. அதை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்ற சிந்தனை வேண்டும், அதையே,

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி,

மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.'

என்கிறது குறள்.

கற்க கற்க அறிவு தெளிவு பெற வேண்டும். அறிவாலும், ஆற்றலாலும் பண்பட்ட சமுதாயம்தான் காலம் கடந்தும் நிலைபெற்று வாழும். ஆகவே, இன்றைக்கு இளம்தலைமுறையினர் கணினி அறிவியல் தொடங்கி செயற்கை நுண்ணறிவு முதலாக அறிவியல், புவியியல், பொறியியல், மருத்துவம் எத்தனை விதமான படிப்புகள்

சாத்தியமோ அவற்றில் விருப்பமான எந்தப் படிப்பை வேண்டுமானாலும் பயிலட்டும். சிறந்த வேலைகளுக்குச் செல்லட்டும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடட்டும். தேசத்தையும் தத்தம் குடும்பங்களையும் வளம் பெறச் செய்யட்டும்.

ஆனால், கல்வி என்பது சிறந்த பண்பாட்டை, விழுமியங்களைத் தர வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கான முயற்சியையும் செய்தாக வேண்டும். ஒழுக்கம் கல்வியின் அடையாளம்; அதுவே வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளை வாழ வைக்கிறது என்ற கூடுதல் பொறுப்புணர்வுடன்

சிந்தித்துச் செயல்பட்டால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.