புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

வார்டுகள்தோறும் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள்

மனிதகுல நலனுக்காக ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என்பதைப் பற்றி...

Updated On :

மனிதகுல வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் ஊழல் ஒரு முக்கிய எதிரி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஊழலைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றைச் செயல்படுத்துவதற்காக காவல் மற்றும் புலனாய்வு அமைப்புகள், நீதித் துறை, லோக்பால், லோக் ஆயுக்த உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய சட்டங்களும் நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஊழலை முற்றிலும் அகற்றுவது இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. ஊழலுக்கு எதிரான உண்மையான போர் சட்டங்களிலோ, அரசு அமைப்புகளிலோ மட்டும் தொடங்குவதில்லை. அது மக்களின் மனநிலையிலிருந்தே தொடங்குகிறது. ஊழலை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மை, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவு, ஊழல் நிகழ்வுகளைத் தெரிவிக்கும் பொறுப்புணர்வு ஆகியவை மக்களிடையே உருவாகும்போதுதான் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெறும்.

மக்களிடையே இத்தகைய ஊழல் எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்கி, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். இதற்காக, மக்களின் நேரடிப் பங்கேற்புடன் செயல்படும் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறப்புச் சட்டமும் குறிப்பிட்ட உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான நிறுவன அமைப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.

உதாரணமாக, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மாவட்ட அளவிலும், மாநில- தேசிய அளவிலும் நுகர்வோர் பாதுகாப்புக் குறைதீர் ஆணையங்களை (நீதிமன்றங்களை) அமைக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது. அதேபோல, தேசிய- மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை மன்றங்களை அரசு அமைக்கவும் இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

இந்த மன்றங்களில் அரசின் பிரதிநிதிகளுடன் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்று, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டங்களை நடத்தி, நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசாணைகள் மூலமாகவும் குறிப்பிட்ட உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான நிறுவன அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழக அரசின் சமூக நலத் துறையின் அரசாணைகளின் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் பல்வேறு நிர்வாக நிலைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளில் கிராம அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, நகர்ப்புறப் பகுதிகளில் பேரூராட்சி அளவிலும், நகராட்சி அளவிலும், மாநகராட்சிகளில் வார்டு அளவிலும் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்கள் சட்டம், மத்திய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்த எனும் இரு அடுக்கு ஊழல் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால், ஊழல் என்பது நிர்வாகத்தின் உயர்நிலையில் மட்டுமே தோன்றும் பிரச்னை அல்ல; அது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு நிர்வாக நிலைகளிலும் வெளிப்படக்கூடியது. எனவே, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் விசாரணை அமைப்புகளின் செயல்பாட்டை மட்டும் சார்ந்ததாக இல்லாமல், மக்களின் பங்கேற்புடன் கூடிய சமூகக் கண்காணிப்பு அமைப்புகளாலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. இதற்கேற்ப, நாடு முழுவதும் சிலந்தி வலைபோல ஒன்றோடொன்று இணைந்த பல அடுக்குகளில் ஊழல் எதிர்ப்பு மன்றங்களை நிறுவுவதற்கான தகுந்த சட்ட ஏற்பாடுகளை லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்கள் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த நோக்கில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆலோசனை மன்றங்களைப் போன்ற ஒரு பங்கேற்பு அடிப்படையிலான ஊழல் எதிர்ப்பு அமைப்பு முறையை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்கலாம். மத்திய அரசின் கீழ் தேசிய ஊழல் எதிர்ப்பு மன்றமும், மாநில அரசின் கீழ் மாநில ஊழல் எதிர்ப்பு மன்றமும், மாவட்ட நிர்வாகத்தின் கீழ் மாவட்ட ஊழல் எதிர்ப்பு மன்றமும் மக்களின் பங்கேற்புடன் செயல்படும் வகையில் நிறுவப்பட வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக இணைக்கும் வகையில், மாநகராட்சி வார்டுகள், நகராட்சி வார்டுகள், பேரூராட்சிகள் மற்றும் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்பட வேண்டும். இந்த மன்றங்களில் அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். மேலும், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர் பங்கேற்புடன் செயல்படும் நுகர்வோர் மன்றங்கள் போல, நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும் ஊழல் எதிர்ப்பு மன்றங்களை நிறுவ வேண்டும்.

ஊழல் தடுப்புச் சட்டங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடத் திட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மாவட்ட, உள்ளாட்சி மற்றும் கல்வி நிறுவன அளவிலான ஊழல் எதிர்ப்பு மன்றங்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை தேசிய மற்றும் மாநில ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட, உள்ளாட்சி மற்றும் கல்வி நிறுவன அளவிலான ஊழல் எதிர்ப்பு மன்றங்கள், மக்களிடையே ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஊழலைத் தடுப்பதற்கான சமூகப் பங்கேற்பை அதிகரித்தல், ஊழல் தொடர்பான பிரச்னைகளை உரிய சட்டபூர்வ அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதல், நல்லாட்சி மற்றும் நேர்மையான நிர்வாகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் பங்கேற்பு அமைப்புகளாகச் செயல்பட வேண்டும்.

இந்த மன்றங்கள் சட்டப்படியான அமைப்புகளாகத் திகழும் வகையில், மத்திய அளவில் தேசிய ஊழல் எதிர்ப்பு மன்றத்தை நிறுவுவதற்கும் அதன் செயல்பாடுகளுக்கு சட்டபூர்வ அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்கள் சட்டம், 2013-இல் மத்திய அரசு தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, தேசிய ஊழல் எதிர்ப்பு மன்றத்தைத் தவிர, பிற அனைத்து நிலைகளிலும் ஊழல் எதிர்ப்பு மன்றங்களை அமைப்பதற்கும் அவற்றின் செயல்பாடுகளை வரையறுப்பதற்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டம், 2018-இல் மாநில சட்டப்பேரவை தகுந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

தேசிய அளவிலான லோக்பாலிலும் மாநிலங்களில் உள்ள லோக் ஆயுக்தக்களிலும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பிரிவு இருக்க வேண்டும். அவற்றின் வழிகாட்டுதல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் இந்த ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் செயல்படலாம். தேசிய ஊழல் எதிர்ப்பு மன்றத்தின் செயல்பாடுகளில் லோக்பால் உறுப்பினர்களும், மாநில ஊழல் எதிர்ப்பு மன்றத்தின் செயல்பாடுகளில் லோக் ஆயுக்த உறுப்பினர்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, மாவட்ட, உள்ளாட்சி மற்றும் கல்வி நிறுவன அளவிலான ஊழல் எதிர்ப்பு மன்றங்களின் கூட்டங்களிலும் லோக் ஆயுக்த உறுப்பினர்கள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இதன்மூலம் பல்வேறு நிலைகளில் செயல்படும் ஊழல் எதிர்ப்பு மன்றங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு, வழிகாட்டுதல் மற்றும் அனுபவப் பகிர்வு உறுதி செய்யப்படலாம். தேசிய அளவிலிருந்து மாநிலம், மாவட்டம், நகர்ப்புற வார்டு மற்றும் கிராம ஊராட்சி வரை விரிவடையும் பல அடுக்கு ஊழல் எதிர்ப்பு மன்ற அமைப்பு உருவாக்கப்படுமானால், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசு அலுவலகங்களின் சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு வார்டுக்கும் சென்றடையும்.

அப்போது ஊழல் எதிர்ப்பு என்பது சில விசாரணை அமைப்புகளின் பணியாக மட்டும் இல்லாமல், மக்கள் பங்கேற்கும் ஒரு தொடர்ச்சியான ஜனநாயக இயக்கமாக மாறும். இதன்மூலம் ஊழலைத் தடுப்பதில் மக்களின் பங்கேற்பை நிறுவனமயமாக்க முடியும். ஊழலைத் தடுப்பது நல்லாட்சிக்காக; நல்லாட்சியை உறுதி செய்வது மனிதகுல நலனுக்காக. எனவே, மனிதகுல நலனுக்காக ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: உறுப்பினர் - தமிழ்நாடு லோக் ஆயுக்த.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.