தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த நடுப்பக்கக் கட்டுரை.....

Updated On :

பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் குறு, சிறு நிறுவனங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறு, சிறு தொழில் நிறுவனங்களில் முதலாளி-தொழிலாளி என்ற வித்தியாசம் பெரும் அளவுக்கு இருக்காது. அந்த நிறுவனங்களில் முதலாளி ஒரு தொழிலாளியாக வேலை செய்வார். எல்லாவற்றையும்விட அவர் அந்தத் தொழிலை முழுமையாகத் தெரிந்தவராக இருப்பார். மேலும், குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உத்தரவாதமான வேலைவாய்ப்பு உண்டு.

பெரிய நிறுவனங்களில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. இன்னும் சொல்லப்போனால் தொழிலாளிக்கு முதலாளி யார் என்றுகூடத் தெரியாது. முதலாளிக்கு தனது தொழில் நிறுவனத்தில் என்ன நடக்கிறது, என்ன செய்கிறார்கள் என்பதை அதற்கென்று அவர் நியமித்துள்ள துறை அதிகாரிகள் விளக்கிச் சொன்னால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது சுமார் 7.5 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் 45 சதவீத பங்கு, மொத்த ஏற்றுமதியில் 46% பங்கு என்ற அளவில் இவர்களது பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வேளாண்மைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சுமார் 26% மக்கள் குறு, சிறு தொழில் நிறுவனங்களைத் தங்கள் வாழ்வாதாரத்துக்கு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 2020-21-இல் ரூ. 3.95 லட்சம் கோடியாக இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ஏற்றுமதி, தற்போது ரூ. 12.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

சிறு தொழில்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சிறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் நகரத்துக்கு அப்பால் தொழிற்சாலைகளை நிறுவுவதால், அந்த இடமும் நகரத்துக்கு இணையான சமநிலையை பெறுகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக்குத் தேவையான உதிரி பாகங்களையும், துணைப் பொருள்களையும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூலம்தான் பெறுகின்றன.

இந்தத் தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நமது நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு சிறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியம். இன்னும் சொல்லப்போனால், நமது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே குறு, சிறு தொழில் நிறுவனங்கள்தான் என்று சொல்லலாம்.

குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமானது புதிய சிறு தொழில்கள் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிப் பிணையில்லாக் கடன் வழங்குகிறது.

"பூஜ்ஜிய குறைபாடு, பூஜ்ஜிய பாதிப்பு' என்ற கொள்கையின்கீழ் தரமான மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் என்கிற அளவில் மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவி செய்கின்றன.

குறு, சிறு தொழில் நிறுவனங்களும் உலகளாவிய சந்தைப் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, தொழில்நுட்பம், புதிய வரவுகள் ஆகியவற்றை இவர்களும் தங்கள் தொழில் சார்ந்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசின் உதவி இருந்தாலும் சிறுதொழில் நிறுவனங்கள் பல சவால்களை சந்தித்துச் சமாளித்துத்தான் தங்கள் உற்பத்தியை முன்னெடுக்கின்றன. குறிப்பாக, வங்கிகளின் கடுமையான விதிமுறைகளால் சரியான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான கடன் கிடைப்பதில்லை. இரண்டாவது சந்தைப் போட்டி; பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், மலிவான இறக்குமதிப் பொருள்களுடன் விலையிலும் தரத்திலும் போட்டியிடுவது இவர்களுக்கு மிகப் பெரிய சவால்.

இதேபோல், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து இவர்கள் உரிய நேரத்தில் தந்தாலும் அதற்கான நிலுவைத் தொகை சரியான நேரத்தில் வருவதில்லை. இது அவர்களின் சுழற்சியைப் பாதிக்கிறது. இது போதாதென்று சிக்கலான சில விதிமுறைகள், ஜிஎஸ்டி தாக்கல், தொழிலாளர் சட்டம், சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி பெறுவதில் உள்ள சிரமம் இவற்றையெல்லாம் தாண்டித்தான் சிறுதொழில் வளர்ச்சி இருக்கிறது.

இந்தியாவில் மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 7.5 கோடியாக உள்ளது; இவை சுமார் 33 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன. இதில், மகாராஷ்டிரம் ஒரு கோடி நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது; இரண்டாவதாக உத்தர பிரதேசம் 86 லட்சம் நிறுவனங்களுடனும், மூன்றாவதாக தமிழ்நாடு 62 லட்சம் நிறுவனங்களுடன் உள்ளது. நான்காவது இடத்தில் மேற்கு வங்கம் 53 லட்சம் நிறுவனங்கள், ஐந்தாவது இடத்தில் கர்நாடகம் 50 லட்சம் நிறுவனங்கள் என உள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும், தென் தமிழ்நாட்டில் இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்துவது, அவற்றை அவர்களுக்கு கொண்டுசெல்வது ஆகியவை மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செலவு, பொருள்களின் தரக் குறைபாடு, மின்சாரப் பயன்பாடு, இயந்திரங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். அடுத்ததாக, தொழில் துறைகளில் தொழில்நுட்பத் திறன், பொருள் உற்பத்தி நடைமுறை- இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்தப் பொருள்களை நாம் போட்டித் தன்மையுடன் உற்பத்தி செய்ய முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும். அரசு உற்பத்தி அனுபவங்கள், பொறியியல் தீர்வுகள், தரப் பரிசோதனை முடிவுகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்றவை குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.

இப்போது ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தை குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திறன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை ஆய்வு செய்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சற்று குறைவுதானோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 2008-இல் சீனாவில் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு 15,770 டாலராக, அதாவது இந்திய ரூபாயில் 14.66 லட்சமாக இருந்தது; இது 2025-இல் ரூ. 44.75 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் ரூ. 11.40 லட்சமாக இருந்த உற்பத்தி மதிப்பு, ரூ. 23.10 லட்சமாக மட்டுமே அதிகரித்துள்ளது.

சீனாவுடன் ஒப்பிடும்போது இது பாதி அளவுதான் என்று சொல்லலாம். சீனாவின் உற்பத்தித் திறன் மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் சுமார் இரு மடங்கு மட்டுமே அதிகரித்திருக்கிறது? சீனாவின் ஜிடிபி வளர்ச்சியும் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு வளர்ச்சியும் பெரும்பாலும் ஒரே வேகத்தில் உயர்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் அண்மைக்காலமாக இரண்டுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்திருக்கிறது. இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உள்ளூர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், அவை வட மாநிலத் தொழிலாளர்களை அதிக அளவில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் அக்கறையின்றி இருப்பதற்கு இலவசங்களும், முறையான கல்வி மற்றும் தொழில் பயிற்சியின்மையுமே காரணம் என்ற விவாதம் தற்சமயம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்தும், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த அளவு உதவும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நம் மாநிலம் உள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களைத் தாண்டித்தான் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 27-ஆம் தேதி குறு, சிறு தொழில் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் சிறு தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவம் கருதி, இந்த நாளை இந்தியாவும் உலக நாடுகளைப் போலக் கடைப்பிடிக்கிறது. அதேசமயம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்குப் போதிய சலுகைகள் அளித்து, அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்தாலே நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் குறு, சிறு தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் விவாதித்து கலந்து பேசி அவற்றின் குறைகளைப் போக்க வேண்டும்; அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும்.

கட்டுரையாளர்:

வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.