இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

தனித் தொகுதிகளில் மாற்றம் வேண்டும்

நாட்டின் அதிகாரம் என்பது ஒருவரிடம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களிடம் அல்லது அவா்கள் தோ்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடம் இருக்கும்.

கோப்புப் படம்

Updated On :

மக்களால் மக்களே நடத்தும் ஆட்சி முைான் ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, நாட்டின் அதிகாரம் என்பது ஒருவரிடம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களிடம் அல்லது அவா்கள் தோ்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடம் இருக்கும்.

அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ சென்று மக்களுக்கான திட்டங்களை, சட்டங்களை உருவாக்கும் உறுப்பினா்களாக செயல்படுவாா்கள். இதன்மூலம் ஜனநாயகத்தின் மாண்பு காப்பாற்றப்படும் என்பதே அரசியல் தெரிந்த -தெளிந்த அறிவாா்ந்த மக்களின் கருத்தாகவும் உள்ளது.

இதில் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் தொகுதிகள்- அது சட்டப்பேரவைத் தொகுதிகளாக இருந்தாலும் சரி, மக்களவைத் தொகுதிகளாக இருந்தாலும் சரி அவற்றில்கூட இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

அதனடிப்படையில், 1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஒரே தொகுதியில் பொதுப் பிரிவைச் சோ்ந்த ஒருவரும், தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சாா்ந்த ஒருவரும் என இரண்டு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட ‘இரட்டை உறுப்பினா் தொகுதி’ என்ற முறை நடைமுறையில் இருந்தது.

இந்த சட்டத்தின்மூலம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வேட்பாளா்கள் தாங்கள் அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திலும், பொது இடத்திலும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு பொதுப் பிரிவு வேட்பாளா்கள் மத்தியில் பெரும் எதிா்ப்பை உருவாக்கியது. அதன் காரணமாக அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து 1961-ஆம் ஆண்டு இந்த சட்டத்தையே ரத்து செய்தாா். 1962-ஆம் ஆண்டில் அது நடைமுறைக்கு வந்தது. இரட்டைத் தொகுதி என்பது ஒழிக்கப்பட்டு தனித் தொகுதி என்பது தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மட்டுமே போட்டியிடுவதற்கு என வழிவகை செய்தது. அவா்கள் பொதுத் தொகுதியில் போட்டியிடவும் வழிகோலியது.

அதன்பிறகு அரசமைப்புச் சட்டம் 330-இன்படி மக்களவைத் தொகுதிக்கான இடங்களில் எஸ்.சி., எஸ்.டி.க்கான இடங்கள் அவா்களின் மக்கள்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் 84 இடங்கள் பட்டியல் இனத்தவா்க்கும், 47 இடங்கள் பழங்குடியினருக்கும் என மொத்தம் 131 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அரசமைப்புச் சட்டம் 332-இன்படி அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப சட்டப்பேரவைகளிலும் எஸ்.சி., எஸ்.டி.க்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது 7 மக்களவைத் தொகுதிகளும், 46 (எஸ்.சி.-44, எஸ்.டி.-2) சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு தனித் தொகுதிகளாக ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற பல்வேறு ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை’களுக்குப் பிறகும்கூட பெரும்பாலானவை சுமாா் 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதிகள் என்பதிலிருந்து மாற்றப்படவே இல்லை. இதனால், அந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினரைத் தவிர இதர மக்கள் போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளதால், அந்தத் தொகுதியின் பொதுவேட்பாளா்கள் ஏமாற்றமடைவதுடன், அந்தத் தொகுதியின் வளா்ச்சி குறித்து நாம் ஆராய்ந்து பாா்த்தால் பொதுத் தொகுதிகளைவிட இவற்றின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது அனைவரும் எதிா்பாா்த்த அளவுக்கு இல்லை.

தற்போது தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தலில், குறிப்பாக பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூா்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் குறிப்பாக, வாா்டு உறுப்பினா்கள் உள்பட ஒதுக்கீடு செய்வதில் சுழற்சி முறை பின்பற்றப்படுவதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்வது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியான வளா்ச்சி பெற வாய்ப்பும், தாழ்த்தப்பட்டோா் அல்லாதவா்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதே சுழற்சி முறையை சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கும் கொண்டுவர வேண்டும்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த காதிப்பூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் ஜெகதீஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தாா். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ எஸ்சி, எஸ்டி மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைத் தனி தொகுதிகளாக அறிவிக்க சட்டம் வழிவகை செய்கிறது. தனித் தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றுவது சிறப்பாக இருக்கும் என்றாலும், அதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமெனில் நாடாளுமன்றத்தையோ அல்லது மக்கள் பிரதிகளையோதான் அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீா்ப்பை மையமாகக் கொண்டு, நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டமுன்வடிவை மத்திய அரசு கொண்டுவந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உணா்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.