விருப்பங்கள் கட்டளையாகக் கூடாது!

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் எதிர்காலம் குறித்த வரையறைகள் எதுவும் அதனுடன் பிறப்பதில்லை.

parenting

கோப்புப் படம்

Updated On :

முனைவர் நா. சியாமளா

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் எதிர்காலம் குறித்த வரையறைகள் எதுவும் அதனுடன் பிறப்பதில்லை. ஆனால், அது வளரத் தொடங்குவதற்கு முன்பே பெற்றோரின் கனவுகளும், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளும், சமூகத்தின் மதிப்பீடுகளும் அதைச் சூழ்ந்துகொள்கின்றன.

ஒரு கட்டத்தில் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் அந்தக் குழந்தையிடம், அதன் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் உரிமை நமக்கு உண்டா என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சிந்தனைக்கு இயற்கையின் உவமைகள் வழியாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்திருக்கிறது சங்க இலக்கியம்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய கலித்தொகைப் பாடல் ஒன்றில், தலைவனுடன் உடன்போக்குச் சென்ற மகளைத் தேடும் செவிலித்தாய், வழியில் எதிர்ப்படும் சான்றோரிடம் அவளைப் பார்த்தீர்களா என வினவுகிறாள். மகளைப் பிரிந்த தாயின் துயரத்தை உணர்ந்த அவர்கள், சந்தனம், முத்து, யாழ் ஆகிய மூன்று உவமைகளால் ஆறுதல் கூறுகின்றனர்.

மலையில் பிறக்கும் சந்தனம் மலையிலேயே தங்குவதற்காகப் பிறக்கவில்லை; கடலில் தோன்றும் முத்து கடலுக்குள் கிடப்பதற்காக உருவாகவில்லை; யாழில் பிறக்கும் இசை யாழுக்காக மட்டுமே ஒலிப்பதில்லை. இவற்றின் பயன் அவை பிறந்த இடத்தைத் தாண்டியே வெளிப்படுகின்றன. அதுபோல, ’நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!' எனக் கூறி மகள் உங்களிடம் பிறந்தவள் என்பதற்காக உங்களுக்காக மட்டுமே வாழ வேண்டியவள் அல்லள், என்பதைச் சான்றோர் உணர்த்துகின்றனர்.

இந்தப் பாடலை இன்றைய தனி மனித உரிமைக் கோட்பாட்டின் நேரடி வெளிப்பாடாகக் கருதாமல் அதன் பண்பாட்டுப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். எனினும், அன்பு என்பது ஒருவரைச் சொந்தமாக்கும் உரிமையல்ல; அவருடைய விருப்பத்தையும் வாழ்வையும் மதிக்கும் பண்பு என்ற சிந்தனைக்கு இப்பாடல் இடமளிக்கிறது. தாயின் துயரத்தை மறுப்பதோ, மகளின் முடிவை எல்லாச் சூழல்களிலும் சரியானதாக அறிவிப்பதோ இப்பாடலின் நோக்கமல்ல. பிரிவின் வலியைக் கடந்து, பிறருடைய வாழ்வை அவர்களுடைய விருப்பத்தின் வழியாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை இப்பாடல் முன்வைக்கிறது.

பெற்றோர் பிள்ளைகளுக்காகக் கனவு காண்பதில் தவறில்லை. தாங்கள் அடையாத உயரங்களைப் பிள்ளைகள் அடைய வேண்டும் என்று விரும்புவது இயல்பானது. ஆனால், அந்தக் கனவுகள் பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்காத கட்டளைகளாக மாறும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது.

ஒருவர் மருத்துவத்தைவிட இசையைத் தேர்ந்தெடுக்கலாம்; எதிர்பார்க்கப்படும் பணியைவிடத் தனக்குப் பிடித்த துறையை நாடலாம்; வெளிநாட்டு வாய்ப்பைவிடத் தன் ஊரிலேயே வாழ விரும்பலாம். பெற்றோர் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் கருதுகிறார்கள்; பிள்ளைகள் தங்கள் விருப்பத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கருதுகிறார்கள்.

இரு தரப்பிலும் நியாயம் இருக்கலாம். இருப்பினும், ஒருவரது வெற்றியை மற்றொருவரின் அளவுகோலால் மட்டும் அளந்துவிட முடியாது. பெற்றோரின் அனுபவம் வழிகாட்டலாம்; ஆனால், அவர்களுக்குப் பதிலாக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியாது. அறிவுரைகள் சிந்திக்க உதவ வேண்டுமே தவிர, சிந்தனையை முடக்கக் கூடாது.

இதே உண்மை கல்வியிலும் பொருந்துகிறது. ஆசிரியர், மாணவருக்குத் தகவல்களை வழங்குபவர் மட்டுமல்லர்; கேள்வி கேட்கவும், புதியவற்றைத் தேடவும் கற்றுத் தருபவர். மாணவர் - ஆசிரியரின் கருத்துடன் முரண்படலாம்; அவருக்குத் தெரியாத ஒன்றைக் கண்டறியலாம்.

மாணவர் தன்னைக் கடந்து சிந்திப்பதையே ஆசிரியர் தமது கற்பித்தலின் வெற்றியாகக் கருத வேண்டும். ஆசிரியரின் பணி அறிவைப் பகிர்வது; அந்த அறிவின் எல்லையை மாணவருக்கு வகுப்பது அல்ல. உண்மையான கல்வி கீழ்ப்படிதலை உருவாக்குவதில் இல்லை; சுயமாகச் சிந்திக்கும் அறிவையும் கேள்வி எழுப்பும் துணிவையும் வளர்ப்பதில்தான் இருக்கிறது.

நெருக்கமான உறவுகளில், அக்கறைக்கும் ஆதிக்கத்துக்கும் வேறுபாடு உண்டு. ஒருவர் யாருடன் பேச வேண்டும்; எப்படிச் செயல்பட வேண்டும் என்று தீர்மானிப்பது அன்பின் வெளிப்பாடு ஆகாது. அதேவேளை, தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பிறருக்கான பொறுப்புகளைப் புறக்கணிப்பதும் சரி அல்ல.

ஒருவரின் முடிவு மற்றொருவரைப் பாதிக்கும்போது உரையாடலும் ஒருவரையொருவர் உணரும் பக்குவமும் தேவை.

கருத்து வேறுபாடு உறவின் தோல்வியல்ல; வேறுபாடுகளுடனும் ஒருவரையொருவர் மதிப்பதே உறவின் முதிர்ச்சி. நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைக் கவனிக்கிறோமா, அல்லது நாம் விரும்பியபடி வாழ்கிறார்களா என்பதை எதிர்பார்க்கிறோமா? இந்த வேறுபாட்டில்தான் உறவுகளின் அமைதியும் நெருக்கமும் அடங்கியிருக்கின்றன.

பெற்றோரின் அன்பில் தொடங்கும் ஒரு வாழ்க்கை, பெற்றோரின் கனவுகளுக்குள் முடங்கிவிட வேண்டியதில்லை; ஆசிரியரின் அறிவில் வளரும் சிந்தனை அவரது எல்லைகளுக்குள் சிறைபட்டுவிட வேண்டியதில்லை.

ஒரு மரம் தன் நிழலில் பிறந்த செடிகளையும் வளர அனுமதிப்பதுபோல, நாம் நேசிப்பவர்களின் வளர்ச்சிக்கும் அவரவர் பாதையில் பயணிப்பதற்கும் இடமளிக்க வேண்டும்.

நம்மிடமிருந்து பெற்ற அன்பையும் அறிவையும் துணையாகக் கொண்டு, அவர்கள் நம்மைக் கடந்து உயரும்போதுதான் நம்முடைய பங்களிப்பு முழுமை பெறுகிறது. ஒருவரைத் தன்னுடன் தக்கவைத்துக் கொள்வதல்ல அன்பின் பெருமை; அவர் தனக்கான வானத்தை நோக்கிப் பறக்கச் சிறகளிப்பதில்தான் அதன் மேன்மை இருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.