நீர்நிலைகளைப் பாதுகாப்போம்!
நீர்நிலைகளைப் பாதுகாப்பது பற்றிய நடுப்பக்கக் கட்டுரை....

பெ.நா. மாறன்
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் 2017-18-இல் கணக்கெடுக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி (மற்றும் மாநில நீர்வளத் துறை தரவுகளின்படி), தமிழ்நாட்டில் பெரிய ஆறுகள், சிற்றாறுகள், ஓடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நீர்நிலைகளாக 1,06,000-க்கும் மேற்பட்டவை பதிவாகியுள்ளன.
இவற்றில் பாசன ஏரிகள் மற்றும் குளங்கள் 41,100-க்கும் மேல். அவற்றில் நீர்வளத் துறை மூலம் சுமார் 14,000 பெரிய ஏரிகள் பராமரிக்கப்படுகின்றன; உள்ளாட்சி அமைப்புகள்மூலம் சுமார் 27,000-க்கும் மேற்பட்ட சிறிய பாசன ஏரிகள், ஊருணிகள் மற்றும் குளங்கள் பராமரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த நீர்நிலைகளில் சுமார் 89.000 (83%) பயன்பாட்டில் உள்ளவை; 18,000 நீர்நிலைகள் (17%) வறண்டு போதல், தூர்வாரப்படாமை, கட்டமைப்புகள் சேதமடைதல், தொழிற்கழிவு மாசுபாடு மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆகிய காரணங்களால் பயன்பாட்டில் இல்லாதவை.
எந்த நீர்நிலையிலிருந்தும் நிலத்தடி நீராக உறிஞ்சப்படுவது, ஆவியாவது, கசிவு இழப்புகளில் வீணாவது போக, மீதமுள்ள நீர்தான் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு, குடிநீருக்கு, சிறிய பெரிய தொழிற்சாலைகளுக்கு, கால்நடைகளுக்கு மற்றும் விவசாய உபயோகத்துக்குக் கிடைக்கிறது.
எனவே, பெரிய சிறிய அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று சாத்தியம் உள்ள நீர்நிலைகளில் எல்லாம் போதுமான அளவு நீரைச் சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ள தமிழ்நாடு, 18,000 நீர்நிலைகளை அலட்சியத்தால் இழந்திருப்பது எவ்வளவு அதிர்ச்சியான விஷயம்?
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் இணைந்து வெளியிட்ட 2020-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், நச்சு ரசாயன சாயங்கள், தெர்மாகோல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொண்டு சிலைகள் செய்யக் கூடாது; சிலைகள், ஆடைகள், மாலைகள், பூக்கள், அலங்காரப் பொருள்களை நீர்நிலைகளில் போடக் கூடாது; இவற்றைக் கரைப்பதற்கு முன்பே தனியாகப் பிரித்து எடுத்து மறுசுழற்சி செய்ய வேண்டும்; ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் சிலைகளைக் கரைப்பதற்குப் பதிலாக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனியாகத் தற்காலிகச் செயற்கைக் குளங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் கரைக்க வேண்டும்; விதியை மீறி நீர்நிலைகளை மாசுபடுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை ஆகிய வழிவகைகள் உள்ளன.
அதுபோக நீர் நிலையங்களின் பாதுகாப்புக்காக, நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்-1974, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம்-2007, பாரதிய நியாய சன்ஹிதா-2023 என்று நிறைய சட்டங்கள் உள்ளன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை விநாயகர் சதுர்த்தி மற்றும் பிற திருவிழாக்களின்போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு முழுமையாக தடை விதித்துள்ளன.
இருக்கிற சட்டங்கள் எல்லாமே நீர்நிலைகளை முதன்மையாக மாசுபடுத்துவது தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் மட்டுமே என்கிற அடிப்படைக்குள் சுருங்கி விட்டது நிதர்சனம். தனி மனிதத் தவறுகளுக்கும் மேற்குறிப்பிட்டுள்ள சட்டங்களில் தண்டனைகள் இருக்கின்றன. ஆனால், தனி மனிதத் தவறுகளில் ஆன்மிகம் தொடர்பான மத நம்பிக்கைகளின் பங்கும் இருப்பதால், சட்டம் தன் கடமையைச் செய்ய கரம் நீட்ட முடியாமல் போகிறது என்பது கசப்பான உண்மை.
பாவநாசினி என்று மக்கள் நம்புகிற நீர்நிலைகளில் நோயில் இருந்து மீண்டவர்கள், ஜோதிடப் பரிகாரம் செய்பவர்கள், குறிப்பிட்ட தோஷம் உள்ளவர்கள், தங்களின் நோயும் துயரமும் நீங்க அணிந்திருந்த துணியை ஆற்றில் விட்டுவிட வேண்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இறந்தவர்களின் துணிகளை வீட்டில் வைப்பது அசுபமாகக் கருதப்படுவதால், நீர்நிலைகளில் அவற்றை விட்டுவிட்டால் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. பல இடங்களில் தோஷப் பரிகாரம் செய்து வைப்பவர்கள் "துணியை ஆற்றில் நனைத்து அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பாமல் வந்துவிட வேண்டும்' என்று பரிகாரப் பரிந்துரையாகக் கூறுவது இன்றும் தொடர்கிறது.
பல்லாண்டு காலமாக மக்களின் நம்பிக்கையின் பேரிலான சில வழக்கங்களை சட்டம் இயற்றியோ, தண்டனை மிரட்டல்களாலோ தடுக்க எந்த அரசும் முனையாது. ஆனால், மாற்று ஏற்பாடுகள், தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தீவிர கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சி எடுக்க முடியும்.
மக்களுக்குத் தேவையான அளவுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படுவதற்கு அரசு முன்னெடுப்பில், ஆன்மிகவாதிகள், ஜோதிடக் கலைஞர்கள், வாழும்கலைப் பயிற்சியாளர்கள், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற குருமார்கள் என்று அனைவரும் ஒத்த மனத்துடன் பெருமளவில் ஈடுபாடு காட்ட வேண்டியது அவசியம்.
அனைத்து நீர்நிலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். எல்லா நீர்நிலைகளும் ஏதோ ஓர் உள்ளாட்சி அமைப்புக்குள் வருவதால், அவற்றின் பாதுகாப்பு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்; அலட்சியம் காட்டும் மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் தேர்தலில் நிற்க இயலாதவாறு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து நீர்நிலைகள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, அமாவாசை மற்றும் ஆடிப் பெருக்கு போன்ற திருவிழா நாள்களில் ஆற்றங்கரைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசேஷ நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாக ஆற்றுக்கு வரும் பக்தர்களிடம் "ஆற்றில் துணிகளையோ பிளாஸ்டிக்கையோ போடாதீர்கள்' என்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்ய வைக்க வேண்டும்.
மேற்சொல்லப்பட்டவை அனைத்தும் புதிய விஷயங்கள் அல்ல. தமிழ்நாட்டின் சில ஊர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முழுமையாகவோ பகுதியாகவோ கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒழுங்கு நடவடிக்கைகள்தான்.
"என்விரான்மென்ட்டல் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா', தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம், திருநெல்வேலி சமூக சேவை சங்கம் மற்றும் உள்ளூர் பசுமை அமைப்புகள் இணைந்து திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் தொடர்ச்சியாக தூய்மை முகாம்களை நடத்துகின்றன. ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளூர் பெரியவர்கள் பலர் தங்கள் சொந்த செலவில் ஆள்களை அமர்த்தி, ஆற்று நீரின் ஓட்டத்தைத் தடுக்கும் டன் கணக்கிலான பழைய துணிகளையும் நெகிழிக் கழிவுகளையும் சேகரித்து அகற்றி வருகின்றனர்.
சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து, ஆற்றில் வீசப்படாமல் சேகரிக்கப்படும் ஆடைகளையும், ஆற்றங்கரைகளில் கழற்றிப் போடப்படும் துணிகளையும் சேகரித்துத் தூய்மைப்படுத்தி, அவற்றிலிருந்து மிதியடிகள், பாய்கள் மற்றும் கைவினைப் பொருள்களைத் தயாரிக்கும் மறுசுழற்சி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
பக்தர்கள் கழற்றிப் போடும் பரிகாரத் துணிகளை நேரடியாக ஆற்றில் வீசுவதைத் தடுக்க, பாபநாசம் ஆற்றங்கரை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரத்யேக சேகரிப்புப் பெட்டிகளைத் தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகமும் வைத்துள்ளன. பூக்கள், மாலைகள், பூஜை சடங்குப் பொருள்களைப் போடுவதற்குத் தனித் தொட்டிகள் வைக்கப்பட்டு, அவை உரமாக்கலுக்கு அனுப்பப்படுகின்றன.
இவை எல்லாம் மாநிலம் முழுவதும் எல்லா ஊர்களிலும் எல்லா நீர்நிலைகள் சார்ந்தும் பின்பற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தனி மனித அலட்சியங்களால் தூர்ந்து போன நீர்நிலைகளின் எண்ணிக்கை 18,000 என்கிற எச்சரிக்கைப் பலகை எல்லா நீர்நிலைகளின் கரைகளிலும் வைக்கப்பட வேண்டும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யப்பட்டு கோயில்களின் புனிதத்துவம் புதுப்பிக்கப்படுவதுபோல் எல்லா நீர்நிலைகளையும் அவற்றின் அளவைப் பொருத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையோ முழுமையாகச் சுத்தம் செய்து, அவற்றின் முழுக் கொள்ளளவைக் காக்கும் வகையில் ஓர் ஆன்மிக வழக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அணுமின் நிலையங்களுக்கும் அணு ஆராய்ச்சி நிலையங்களுக்கும் தரப்படுகிற அளவுக்கான கவனமும் முக்கியத்துவமும் நீர்நிலைகளுக்கும் தர வேண்டும். புனித உணர்வுடனும் எச்சரிக்கை உணர்வுடனும் மட்டுமே நீர்நிலைகளை அணுகும் மனநிலை அனைவருக்குள்ளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
எதிர்காலத் தலைமுறை உப்புநீரைக் குடித்து உயிர்வாழத் தயாராக இருந்தாலும், சுத்தமான கடல்நீர்கூட இல்லாத நிலையை நோக்கி நம் நம்பிக்கை சார்ந்த நடைமுறைகள் இட்டுச் செல்வதை அனுமதிக்கலாமா?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

