காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இயற்கை எல்லை அறியாது!

இமயமலைக்கு எல்லை தெரியாது; வெள்ளத்துக்கும் எல்லை தெரியாது. அதனால், உயிர்களைக் காப்பாற்றும் தகவல்களுக்கும் எல்லை இருக்கக் கூடாது.

இயற்கை எல்லை அறியாது! - பிரதிப் படம்

Published On :

ஒரு பனிப்பாறை உடைவதற்கு அரசியல் அனுமதி தேவையில்லை.ஆனால், அதன் எச்சரிக்கை செய்தி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்ல அரசியல் நடைமுறைகள் தேவைப்படுகின்றன.

அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் குறித்து வெளியான ஒரு கட்டுரை இந்தப் பிரச்னையின் இன்னொரு முகத்தை நமக்குக் காட்டியது. சீனா ஒரு பக்கம்; இந்தியா ஒரு பக்கம்; நடுவே நேபாளம்.

இந்த மூன்று நாடுகளையும் பிரிப்பது எல்லைகள். ஆனால், மூன்று நாடுகளையும் இணைப்பது இமயமலை. மனிதன் வரைந்த எல்லைக் கோடுகள் வரைபடத்தில் இருக்கின்றன; இயற்கைக்கு அவை தெரியாது.

பனிப் பாறைக்கு சீன எல்லை தெரியாது; நீருக்கு நேபாள எல்லை தெரியாது; வெள்ளத்துக்கு இந்திய எல்லை தெரியாது.மேலே இமயமலையில் ஒரு பனிப் பாறை உடைந்தால், அதன் விளைவு கீழே எந்த நாட்டில் முடியும் என்று சொல்ல முடியாது.

அப்படியிருக்கும்போது, அந்த ஆபத்தை மூன்று நாடுகளும் ஒன்றாகக் கண்காணிக்க வேண்டாமா? நிச்சயமாக வேண்டும். இன்று அதற்கான தொழில்நுட்பமும் இருக்கிறது. நவீன செயற்கைக்கோள்கள் பூமியை, பனிப் பாறைகளை, அவற்றின் பரப்பளவில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிகின்றன. பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களைக்கூடப் பதிவு செய்ய முடிகிறது.

ஒரு செயற்கைக்கோள் ஒரு மாற்றத்தைப் பதிவு செய்வது வேறு; அந்த மாற்றம் பேரழிவாக மாறப் போகிறது என்பதை உடனடியாகப் புரிந்துகொள்வது வேறு; அதைப் புரிந்துகொண்ட பிறகு எச்சரிக்கை விடுப்பது வேறு. அந்த எச்சரிக்கை பாதிக்கப்படக் கூடிய பகுதியில் இருக்கும் மக்களைச் சென்றடைவது இன்னொரு விஷயம்.

இவற்றுக்கு இடையில் சில நிமிஷங்கள் தாமதமானால்கூட பேரழிவின் அளவு மாறிவிடும். நேபாளத்தில் நடைபெற்ற சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டு. அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறிய தகவலின்படி, அதிகாலை பனிப்பாறை உடைந்ததற்கும் அவர் இருந்த பகுதியில் வெள்ளம் வந்து சேர்ந்ததற்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரமே இருந்தது.

அதிகாரிகள் தகவலைச் சரிபார்க்க வேண்டும்; எச்சரிக்கை விடுக்க வேண்டும். மக்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதற்கெல்லாம் இரண்டு மணி நேரம் என்பது மிக நீண்ட காலம் அல்ல.

ஆனால், அந்த இரண்டு மணி நேரமே ஆயிரக்கணக்கான உயிர்களுக்கும் பேரழிவுக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்க முடியும்.

அப்படியானால் கேள்வி ஒன்றுதான். அந்த இரண்டு மணி நேரத்துக்குள் எச்சரிக்கை ஏன் எல்லோரையும் சென்றடையவில்லை? இது சீனாவின் தவறா?, நேபாளத்தின் தவறா?, இந்தியாவின் தவறா? - குறிப்பிட்ட ஒருவரை குற்றம் சொல்லிவிட முடியாது.

ஆனால், ஒரு விஷயம் தெளிவாகிறது. மூன்று நாடுகளுக்கும் இடையே பேரிடர் தகவல் பரிமாற்றம் இன்னும் நாம் விரும்பும் அளவுக்கு வேகமாகவும் தானியங்கியாகவும் இல்லை. இதுதான் உண்மையான பிரச்னை.

ஒரு நாட்டில் கிடைக்கும் தகவல் முதலில் அந்த நாட்டின் அதிகாரிகளிடம் செல்கிறது. அவர்கள் அதை ஆய்வு செய்கிறார்கள். பின்னர் தேவையான அமைப்புகளுக்குத் தெரிவிக்கிறார்கள். அதன்பிறகு அடுத்த நாட்டுடன் பகிரப்படுகிறது. அங்கிருந்து மீண்டும் அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது.

இது சாதாரண நிர்வாகச் செய்தியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், வெள்ளம் வரப்போகிறது என்ற செய்திக்கு இப்படிப்பட்ட நடைமுறை ஆபத்தானது.

செயற்கைக்கோள் ஓர் ஆபத்தான மாற்றத்தைக் கண்டறிந்தால், அந்தத் தகவல் உடனடியாக மூன்று நாடுகளின் பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கும் செல்ல வேண்டும். மலையில் பொருத்தப்பட்ட சென்சார் ஆபத்தை உணர்ந்தால், அந்தத் தகவல் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் செல்ல வேண்டும். நீர்மட்டம் திடீரென உயர்ந்தால், அதுவும் உடனடியாகப் பகிரப்பட வேண்டும். அதிலும் முக்கியமாக, அரசு அலுவலகங்களில் மட்டும் தகவல் தங்கி விடக் கூடாது.

அது மாவட்ட நிர்வாகம், காவல் துறை, மீட்புக் குழுக்களுக்குச் செல்ல வேண்டும்.தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் இருக்கும் மக்களின் கைப்பேசிகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.

அந்த எச்சரிக்கை தகவல் சரியான நேரத்தில் சென்றிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை எல்லோரிடமும் பகிர முடியாது. ஆனால், பேரிடர் எச்சரிக்கை என்பது, ரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல் அல்ல.

ஒரு பனிப்பாறை உடையப் போகிறது என்று தெரிந்தால், அதைச் சொல்வதில் எந்த நாட்டின் இறையாண்மையும் குறைந்துவிடாது.

ஓர் ஆபத்தான செய்தி ஒரு மனிதனின் கைப்பேசியைச் சென்றடைய இரண்டு நாடுகளின் அதிகாரபூர்வ அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தால், தொழில்நுட்பத்தின் பயன் என்ன? இது சீனா, நேபாளம், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து கேட்க வேண்டிய கேள்வி.

இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்கின்றன. ஒரு நாட்டின் மலையில் தொடங்கும் பேரிடர் இன்னொரு நாட்டின் நகரத்தை அடையலாம். ஒரு நாட்டின் பனிப் பாறை உருகுவது இன்னொரு நாட்டின் ஆற்றை நிரப்பலாம்.

ஒரு நாட்டில் பெய்யும் மழை இன்னொரு நாட்டின் மக்களை வெள்ளத்தில் சிக்க வைக்கலாம். இயற்கை நம்மைவிட புத்திசாலி. நாம் எல்லைகளை வரைகிறோம். இயற்கை அந்த எல்லைகளைத் தாண்டுகிறது. அதனால்தான் இனிமேல் நமது பாதுகாப்புச் சிந்தனையிலும் ஒரு மாற்றம் தேவை.

எல்லைகளைப் பாதுகாப்பது மட்டும் போதாது. எல்லைகளைக் கடந்து வரும் பேரிடர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இன்று இமயமலை நமக்கு ஓர் எளிய செய்தியைச் சொல்கிறது. நீங்கள் மூன்று நாடுகளாக இருக்கலாம்; நான் ஒன்றுதான்; இமயமலைக்கு எல்லை தெரியாது; வெள்ளத்துக்கும் எல்லை தெரியாது. அதனால், உயிர்களைக் காப்பாற்றும் தகவல்களுக்கும் எல்லை இருக்கக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.