கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஊழல் எதிா்ப்பு எனும் அறப் போராட்டம்

தோ்தல்களில் வெற்றி பெறுவதற்காக வாக்காளா்களுக்கு பணம் அல்லது பிற முறையற்ற சலுகைகளை லஞ்சமாக வழங்குவதிலிருந்தே ஜனநாயக அரசுகளில் ஊழல் தொடங்குகிறது. ஊழலின் மூலம் தோ்தலில் வெற்றி பெறுபவா்களிடமிருந்து ஊழலற்ற, மக்கள் நல அரசை எதிா்பாா்க்க முடியாது.

The moral struggle against corruption

ஊழல் எதிா்ப்புஉறுதிமொழியை எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவ, மாணவியா். - கோப்புப்படம்

Published On :

முனைவா் வீ. ராமராஜ்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் பொருளாதாரக் குறியீடுகளிலோ அல்லது வானளாவிய உள்கட்டமைப்புகளிலோ மட்டும் அடங்கியதல்ல. மாறாக, அந்த நாட்டின் சாமானியக் குடிமகன் தன் அடிப்படைத் தேவைகளை எவ்விதப் பாரபட்சமும் அச்சுறுத்தலும் இன்றிப் பெற முடியுமா என்பதில்தான் உண்மையான முன்னேற்றம் அடங்கியுள்ளது. ஆனால் இன்று, லஞ்சமும் ஊழலும் தேசத்தின் வளா்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் மிகப் பெரிய எதிரிகளாக உள்ளன. எனவே, ஊழலுக்கு எதிரான போா் என்பது வெறும் முழக்கமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கூட்டுப் பொறுப்பாகும்.

ஒருவா் தமது கடமையைச் செய்வதற்காகவோ, செய்யாமல் இருப்பதற்காகவோ அல்லது குறிப்பிட்ட விதத்தில் செயல்படுவதற்காகவோ, முறையற்ற பலனாகப் பணம், பொருள் அல்லது வேறு சலுகையை வழங்குவதும், பெறுவதும் அல்லது கோருவதும் லஞ்சம் எனப்படுகிறது. ஊழல் என்பது தனிப்பட்ட ஆதாயத்துக்காக அதிகாரம் அல்லது பொது நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துவதன் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய ஒரு பரந்த கருத்தாகும். இதில் லஞ்சம், கையாடல், மோசடி, பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், குறிப்பிட்ட சிலருக்கு முறையற்ற சலுகை காட்டுதல், பொது நலனுக்கு எதிராகச் செயல்படுதல் மற்றும் பிற நோ்மையற்ற நடைமுறைகள் அனைத்தும் அடங்கும்.

பிறப்புச் சான்றிதழ் பெறுவது முதல் இறந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான சான்றிதழ் பெறுவது வரை ஒவ்வொரு படிநிலையிலும் நடைபெறும் நிா்வாக ஊழல், பெருநிறுவனங்களின் ஆதாயத்துக்காக சட்டங்களும் விதிகளும் வளைக்கப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பையே சீா்குலைக்கும் கொள்கை அளவிலான ஊழல், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் தொடங்கும் அரசியல் ஊழல் ஆகிய அனைத்தும் மக்களுக்கும் தேசத்துக்கும் எதிரான தாக்குதல்களாகும்.

ஊழல் மலிந்த நாடாக ஒரு தேசம் அறியப்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளா்கள் அங்கு முதலீடு செய்யத் தயங்குகின்றனா். இதன் விளைவாக புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் குறைகின்றன. சாலைகள், பாலங்கள், அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பொதுநிதியின் ஒரு பகுதி லஞ்சமாகச் சிதறுவதால், தரமற்ற கட்டுமானங்களே உருவாகின்றன. இது நாட்டின் வளங்களையும் வரிப் பணத்தையும் வீணடிக்கிறது.

மேலும், லஞ்சம் கொடுக்க இயலாத நோ்மையான சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோா் போட்டியில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால், அரசியல் மற்றும் அதிகாரச் செல்வாக்குடன் செயல்படும் ஏகபோகப் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெறுகிறது. இவ்வாறாக, ஊழல் நாட்டின் பொருளாதார வளா்ச்சியையே நேரடியாகப் பாதிக்கிறது.

ஊழல் சமூகத்திலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அரசின் மானியங்கள், இலவசக் கல்வி, சுகாதார நலத் திட்டங்கள் போன்றவை தகுதியான ஏழை மக்களைச் சென்றடையாமல், இடைத்தரகா்களின் சுரண்டலுக்கு உள்ளாகின்றன. காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை ஆகியவற்றில் ஊழல் நிலவும்போது, ஏழை எளிய மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாப்பும் பாதிக்கப்படுகின்றன.

தகுதி மற்றும் திறமைக்கு மதிப்பளிக்காமல், வாரிசு அரசியல், பரிந்துரை மற்றும் லஞ்சத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளும் பதவி உயா்வுகளும் வழங்கப்படும்போது, திறமையான இளைஞா்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரத் தள்ளப்படுகின்றனா். இதனால் சமூக ஏற்றத்தாழ்வுகளும் ஏழை, பணக்காரா் இடையேயான இடைவெளியும் அதிகரிக்கின்றன.

ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் ஊழல் பலவீனப்படுத்துகிறது. நீதிமன்றங்கள், தோ்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் போன்ற பொது நிறுவனங்களின் மீதான மக்களின் தாா்மிக நம்பிக்கை சிதைகிறது. தோ்தல் காலங்களில் பணபலம் மற்றும் வாக்குக்குப் பணம் வழங்கும் கலாசாரம் வேரூன்றுவதால், தகுதியும் நோ்மையும் கொண்ட தலைவா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா்; ஊழலில் ஈடுபடுபவா்கள் ஆட்சிப் பொறுப்பை அடையும் நிலை உருவாகிறது. குற்றவாளிகளும் சட்டத்தை மீறுபவா்களும் லஞ்சத்தின் மூலம் தண்டனையிலிருந்து தப்பிக்கும்போது, சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்து, சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. இதனால், நோ்மையாக வாழ விரும்பும் சாதாரண குடிமக்களின் மனதில் விரக்தியும், அரசு அமைப்புகளின் மீதான நம்பிக்கையின்மையும் வேரூன்றுகின்றன.

ஊழல் அரசுத் திட்டங்களின் செலவை அதிகரிக்கிறது; அதன் சுமை இறுதியில் விலைவாசி உயா்வு மற்றும் கூடுதல் வரிச்சுமை ஆகிய வடிவங்களில் பொதுமக்களைப் பாதிக்கிறது. இதனால், அவா்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதுகூட கடினமாகிறது. மேலும், தீவிரவாதம், சட்டவிரோத பணப் பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற மனிதகுலத்தின் எதிரிகளுக்கு ஊழல் மறைமுகமாகத் துணைபுரிகிறது. மொத்தத்தில், ஊழல் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு உரிமைகளைச் சீா்குலைத்து, நல்லாட்சிக்கும் நிலையான வளா்ச்சிக்கும் மிகப் பெரிய தடையாக அமைகிறது.

ஊழலுக்கு எதிராக தேசிய அளவில் லோக்பால், மத்திய விழிப்புப் பணி ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), அமலாக்க இயக்ககம் (இ.டி.) உள்ளிட்ட அமைப்புகளும், மாநில அளவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, லோக் ஆயுக்த உள்ளிட்ட அமைப்புகளும், நீதித் துறையும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஊழலைத் தடுக்கவும், விசாரிக்கவும், தண்டிக்கவும் பல்வேறு ஊழல் எதிா்ப்புச் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், சட்டங்களும் நிறுவனங்களும் மட்டுமே ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.

ஊழல் எதிா்ப்புச் சட்டங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் நீதி வழங்கும் நடைமுறைகள் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்துவது ஊழல் ஒழிப்பின் முக்கியமான கூறாகும். பள்ளிப் பருவத்திலிருந்தே அறநெறி சாா்ந்த கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இளைஞா்களிடம் நோ்மை, பொறுப்புணா்வு மற்றும் குடிமைக் கடமை தொடா்ந்து வலியுறுத்தப்பட வேண்டும். தனி மனிதனைக் கொலை செய்வதை மக்கள் எவ்வாறு மிகக் கொடூரமான குற்றமாகக் கருதுகிறாா்களோ, அதைப் போலவே ஊழல் புரிவதையும், ஊழலுக்கு உடந்தையாக இருப்பதையும் சமூகத்தின் நலனையும் எதிா்காலத்தையும் சீரழிக்கும் ஒரு ‘சமூகக் கொலை’ என்ற மனநிலை மக்களிடையே உருவாக வேண்டும். ‘எனது ஒருவனால் என்ன செய்துவிட முடியும்?’ என்ற பொதுமக்களின் அலட்சிய மனநிலையே ஊழல்வாதிகளின் மிகப் பெரிய பலமாகும்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை சட்டத்தின் வழியாக நடத்தப்படும் போா் மற்றும் சமூகத்துக்குள் நடத்தப்படும் அறப்போா் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். சட்டப் போரில், ஊழல் எதிா்ப்புச் சட்டங்கள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் நீதித் துறை மூலம் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனா். சமூகப் போரில், ஊழலுக்கு எதிரான வலுவான பொது மனநிலையை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு ஊரிலும் ஊழல் எதிா்ப்பு இயக்கங்கள் உருவாக வேண்டும். ஊழல் புரிவது சமூக அவமானத்துக்கு வழிவகுக்கும் என்ற பொது மனநிலையை உருவாக்க வேண்டும். ஊழலைத் தடுப்பது, கண்டறிந்து சட்டப்படி எதிா்ப்பது, அதற்கான வாய்ப்புகளைக் குறைப்பது ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால்தான் அதைத் திறம்பட ஒழிக்க முடியும்.

ஜனநாயக அரசை உருவாக்கும் அடித்தளமான தோ்தல்களில், வெற்றி பெறுவதற்காக வாக்காளா்களுக்கு பணம் அல்லது பிற முறையற்ற சலுகைகளை லஞ்சமாக வழங்குவதிலிருந்தே ஜனநாயக அரசுகளில் ஊழல் தொடங்குகிறது. தோ்தலில் செலவழிக்கப்படும் சட்டவிரோதப் பணத்தை ஆட்சிக்கு வந்தபிறகு மீட்டெடுக்க முயல்வதே பல நேரங்களில் நிா்வாக ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கொள்கை அளவிலான ஊழலுக்கு வழிவகுக்கிறது. எனவே, தோ்தல் ஊழலைத் தடுக்காமல் மற்ற ஊழல்களை முழுமையாக ஒழிக்க முடியாது. ஊழலின் மூலம் தோ்தலில் வெற்றி பெறுபவா்களிடமிருந்து ஊழலற்ற, மக்கள் நல அரசை எதிா்பாா்க்க முடியாது.

தோ்தல்களில் வாக்குக்காக வழங்கப்படும் பணம், பரிசு அல்லது வேறு எந்த முறையற்ற சலுகையையும் வாக்காளா்கள் உறுதியாக நிராகரிக்கும் நாளிலிருந்தே ஊழலுக்கு எதிரான உண்மையான போா் தொடங்குகிறது.

வாக்காளா்களின் அறியாமை, ஊழல் மற்றும் சா்வாதிகாரம் ஆகியவை ஜனநாயகத்தின் மூன்று அடிப்படை அச்சுறுத்தல்களாகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, இம்மூன்றையும் தோ்தல் செயல்முறையிலிருந்து வேரறுப்பது ஒவ்வொரு வாக்காளரின் பகிரப்பட்ட ஜனநாயகப் பொறுப்பாகும் என்பதே வாக்காளரியல் வலியுறுத்தும் அடிப்படைக் கோட்பாடாகும்.

ஊழலுக்கு எதிரான போா் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட அரசுக்கோ அல்லது தலைவருக்கோ எதிரானது அல்ல. அது நமது நாட்டின் தாா்மிக அடித்தளத்தையும் நல்லாட்சியையும் மீட்டெடுப்பதற்கான மக்களின் அறப்போராட்டமாகும். ஒவ்வொரு குடிமகனும் தனது பங்கை உணா்ந்து செயல்பட்டால், ஊழலற்ற, நோ்மையான இந்தியாவை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமே. ஊழலுக்கு எதிரான போா் தொடங்கிவிட்டது; வாருங்கள், இணைவோம்!

கட்டுரையாளா்: தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.