
விழிப்புணர்வே தீர்வு!
விழிப்புணர்வு, விரைவான நடவடிக்கைகள்மூலம் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது சமுதாயக் கடமை.

விழிப்புணர்வே தீர்வு - சித்திரிப்பு
வி. பாலகிருஷ்ணன்
அண்மையில் எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் பணியில் இருந்து ஓய்வுபெற்று சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் எண்மக் கைது என்ற சட்டத்தில் இல்லாத இணையவழி குற்றத்தின் வாயிலாக கண்ணுக்குத் தெரியாத ஒரு களவாணியிடம் இழந்துள்ளார்.
அதேபோல், நான் பணிபுரியும் மத்திய காவல் மண்டலத்தில் ஓர் இளம் விதவை தன் வருமானத்துக்காக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வந்த வாட்ஸ்ஆப் இணைப்புச் செய்தியை நம்பி, சொல்லும் வேலையை செய்து முடித்தால் பணம் கிடைக்கும் என்ற ஒரு ஏமாற்று வித்தையை உண்மை என நம்பி தன் மொத்த சேமிப்பாக இருந்த ஒரு லட்சம் ரூபாயை ஒரே நாளில் இழந்து பரிதாபமாக காவல் நிலையத்துக்கு வந்தார். இந்தச் சம்பவங்கள் ஒரு மாதிரிதான்.
இதுபோல், அண்மையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்திருப்பதாகக் கூறி, இணையவழி குற்றம் மூலம் ஏழை மக்களிடம் இருந்து பணத்தைத் திருடும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன.
சமூகத்தில் எல்லா நிலைகளில் உள்ள மக்களும் பாதிக்கப்படும் குற்றம் இணையவழிக் குற்றம்தான். கடந்த 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,68,147 இணையவழிக் குற்றங்களால் ரூ. 2,176 கோடி ரொக்கம் இழக்கப்பட்டிருக்கிறது.
ஆகவேதான், தேசிய அளவில் எந்தக் குற்றத்துக்கும் இதுவரை கொடுக்காத முக்கியத்துவம் மத்திய, மாநில அரசுகளால் கொடுக்கப்பட்டு இணையவழி குற்றங்களுக்கு எதிராக போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. இணையவழி குற்ற உதவி எண் 1930 மற்றும் என்.சி.ஆர்.பி. இணையதள சேவை எனப் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கும் அவர்கள் இழந்த பணத்தை மீட்பதற்கு காவல் துறை மற்றும் வங்கிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைந்த நடவடிக்கை எனப் பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணையவழிக் குற்றவாளிகள் இந்தியாவில் எங்கு இருந்தாலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள இணையவழிக் குற்றப் பிரிவுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வசதி உள்ளது.
இத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் ஏன் இணையவழி குற்றங்கள் குறையவில்லை என்ற கேள்வி எழலாம். மிக முக்கியமான காரணம் இணையக் குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை செய்வதற்கு அடிப்படை முதலீடாக நம்பி இருப்பது மூன்று விஷயங்கள்; ஒன்று - ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உணர்வுகளான ஆசையைத் தூண்டியோ அல்லது பயத்தை உருவாக்கியோதான் இணையவழிக் குற்றங்கள் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக, பங்குச் சந்தை, பிட்காயின் மற்றும் பிற முதலீடு தொடர்பான ஏமாற்று வேலைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேபோல, பயத்தை உருவாக்கி பலன் பெறுவது எண்மக் கைது என்று காவல் துறையில் இல்லாத நடைமுறையை மையப்படுத்தி பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது, ஆர்.டி.ஓ. அலுவலக அபராத மோசடி என்று போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு அபராதம் செலுத்துவதற்கான இணைப்பை அனுப்பி ஏமாற்றுவது, கடன் கொடுப்பதாகக் கூறி பிறகு பாதிக்கப்பட்டவரின் பெயரைப் பொது வெளியில் அசிங்கப்படுத்த உருவ மாற்றம் செய்து, அவர்களுடைய தொடர்பில் உள்ள எண்களுக்கு அனுப்புவது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இரண்டாவதாக, இணையவழிக் குற்றங்கள் ஓர் ஒருங்கிணைத்த குற்றமாக மாஃபியாபோல தேசிய அளவிலும், உலக அளவிலும் செயல்படுவதும் உலகின் எங்கேயோ இருந்துகொண்டு, எங்கேயோ இருக்கும் நபரைத் தொடர்பு கொண்டு செயல்படுவதும், மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார்களைத் தாமதமாக அனுப்புவதும் ஆகும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் சிறிதளவு பணத்தைக் கொடுத்து நூற்றுக்கணக்கான போலி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, அவற்றின் மூலம் இணையவழிக் குற்றங்களில் திருடக்கூடிய பணங்களை மடை மாற்றுவதும், அந்தந்த மொழி பேசும் குற்றவாளிகளைப் பயன்படுத்துவதும் இணையவழிக் குற்றங்களை தடுப்பதற்கும், பணத்தை மீட்பதற்கும் கடினமாக இருக்கிறது.
அதேபோல், கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு என்ற ஆசைகாட்டி படித்த இளைஞர்களைக் கவர்ந்திழுத்து அவர்களுக்கு நல்ல ஊதியமும் கொடுத்து இந்தக் குற்றங்களை செய்வதற்காக பயன்படுத்துவதும் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்களைக் குறிவைத்து இணையவழிக் குற்றவாளிகள் திட்டமிடும்போது, தமிழ் பேசும் இளைஞர்களுடைய உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதனால், அது போன்று இளைஞர்கள் அதிக அளவில் கவரப்பட்டு அவர்கள் இணைய அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர்.
பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று எண்ணி பங்குச் சந்தை குறித்து முழுமையான விவரங்களை, அறியாததால் போலி இணைய தளங்கள் மூலம் முதலில் லாபம் கொடுப்பது போல் போலியாகவும், உண்மையாகவும் கொடுத்து பிறகு பெரும் தொகையை ஏமாற்றிச் செல்கின்றனர்.
இணையவழிக் குற்றங்களைப் புரிவதற்கான தொழில்நுட்ப உதவி இணையதளத்தில் எளிதாக கிடைப்பதும், இணையக் குற்றவாளிகள் உலக அளவில் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதையும் காண்கிறோம். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் ஒரு பக்கம் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும் உதவி செய்தாலும், இணையக் குற்றவாளிகள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாகவும், மறைமுகமாகவும் இணையக் குற்றங்களைச் செய்கின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் இணையவழிக் குற்றத்துக்கான காவல் நிலையங்கள் இருப்பதும், அந்தக் காவல் நிலையங்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், குற்றங்களை புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்வதும், இழந்த பணத்தை வங்கிகளில் முடக்கி உரியவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்னவெனில், பணம் இழந்த 24 மணி நேரத்துக்குள் 1930 எண்ணில் புகார் செய்தால் உடனடியாக அந்தப் பணம் குற்றவாளிகளின் கைகளுக்கு சேராமல் வங்கிகள் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், பெரும்பாலான நேரங்களில், இந்த காலஅளவைத் தாண்டி புகார்கள் கொடுக்கப்படுவதால் புகார்கள் வருவதற்கு முன்பே திருடப்பட்ட பணம் ஏராளமான வங்கிக் கணக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு பிரித்து ஆங்காங்கே சென்று குற்றவாளிகளைச் சென்றடைகிறது.
ஆகையால், இதில் புலன் விசாரணை எந்தெந்த கணக்குகளுக்கு திருடிய பணம் போய் இருக்கிறது? என அத்தனைக் கணக்குகளையும் தேடிக் கடைசியாக குற்றவாளிகளை அடைவதற்கு முன்பாக காலம் கடந்து விடுவதாலும், குற்றவாளிகள் பணத்தைப் பயன்படுத்தி விடுவதாலும், ஒரே வங்கிக் கணக்கில் பல்வேறு பாதிக்கப்பட்டவர்களுடைய பணம் முடங்கி இருப்பதால் யாருக்கு எவ்வளவு கொடுப்பது? என்ற பிரச்னையும் இருக்கிறது. மேற்சொன்ன நடைமுறைச் சிக்கல்கள் தொடர்கின்றன. சராசரியாக, இழந்த பணத்தில் 10 சதவீதம் பணத்தை மட்டுமே திரும்பிக் கொடுக்க முடிகிறது.
இணையவழிக் குற்றங்கள் தடுக்கப்படுவதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை. இணையவழிக் குற்றங்கள் பற்றி பல தளங்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்போதுதான் முழுமையான விழிப்புணர்வு ஏற்படும்.
அதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களில் உள்ள குடியிருப்போர் சங்கங்களிலும், அடுக்குமாடி குடியிருப்பு அமைப்புகளிலும் இணையக் குற்றம் பற்றிய செய்திகள் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரிமாறப்படுவதுடன், ஒவ்வொரு வாட்ஸ்ஆப் குழுக்களில் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒருவரை நியமித்தும் அவரே இணையவழிக் குற்ற தடுப்புத் தன்னார்வலராகச் செயல்பட்டு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும்.
எல்லா கிராமங்களிலும், கிராம அலுவலகங்கள், முக்கியச் சந்திப்புகளில் இணையவழிக் குற்றம் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகள் வைப்பதும் இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வேகப்படுத்தும்.
இணையவழிக் குற்ற விழிப்புணர்வுக் காணொலிகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்தால் நூற்றுக்கணக்கான காணொலிகளும் சுவாரஸ்யமான செய்திகளும் கிடைக்கும். அவற்றை ஒருங்கிணைத்து ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இணையவழிக் குற்றம் குறித்த விழிப்புணர்வு தேடி வரக்கூடியவர்களுக்கு ஒரே இடத்தில் எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடிய வகையில் செய்யலாம்.
ஏற்கெனவே தொலைக்காட்சி, வானொலி, எஃப்.எம்., கைப்பேசி சேவைகள், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதைப் பார்க்கும்போது இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது என்று தெரிகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இணையவழிக் குற்றத் தடுப்பு சாட்பாட் உருவாக்கப்பட்டு எந்நேரமும் பொதுமக்களுக்கு அவர்கள் சந்தேகங்களை தீர்க்கக் கூடிய வகையில் உதவிகள் கிடைக்கப் பெற வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், இணையக் குழுக்கள் உருவாக்குதல் கல்விக்கும் விழிப்புணர்வுக்கும் உதவும். இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுச் செய்திகள் மக்களைச் சென்று சேர வேண்டும். விழிப்புணர்வு, விரைவான நடவடிக்கைகள்மூலம் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது சமுதாயக் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






