
அதிகரிக்கும் இணையவழி முதலீட்டு மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
குறைந்த முதலீடு-அதிக லாபம்' என்ற ஆசை வார்த்தைகள்தான் பல மோசடிகளுக்கு அடித்தளமாகின்றன.

மோசடி - பிரதிப்படம்
அறிவும், ஆய்வும்...
"குறைந்த முதலீடு-அதிக லாபம்' என்ற ஆசை வார்த்தைகள்தான் பல மோசடிகளுக்கு அடித்தளமாகின்றன. அதிக லாபம், உறுதியான வருமானம் என்று ஆசைகாட்டும் விளம்பரங்களை நம்பி அவசரமாக முதலீடு செய்யக் கூடாது. முதலீடு செய்யும் நிறுவனம் அல்லது ஆலோசகர் "செபி'யில் பதிவு செய்யப்பட்டவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆசைக்கு முன் அறிவு; முதலீட்டுக்கு முன் ஆய்வு-இதுவே இணையவழி மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி.
பா.நூருல்லாஹ், மதுரை.
பாதுகாப்பான முதலீடு
இணையவழியில் மோசடி செய்பவர்கள் அனைத்து நுணுக்கங்களும் தெரிந்தவர்களாக உள்ளனர். மோசடி செய்பவர்கள், தாங்கள் பிடிபட்டால் எப்படி அதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் குற்றவாளிகளைத் தண்டிப்பது சவாலான செயலாக உள்ளது. வீட்டுக்குக்கூட தெரியக் கூடாது என ரகசிய முதலீடு செய்பவர்களே நஷ்டப்படுகிறார்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் முதலீடு செய்தால் மட்டுமே நமது முதலீடு பாதுகாப்பாக இருக்கும். அப்படி முதலீடு செய்பவர்கள் அதை முறைப்படி வீட்டில் தெரிவிப்பது நல்லது.
எஸ். வேணுகோபால், சென்னை.
தூண்டிலில் சிக்கும் மீன்கள்
தூண்டிலில் சிக்கிக் கொண்ட மீனுக்கு என்ன நிலையோ அதே நிலைதான் இணையவழி மோசடியில் தன் சொத்தை இழந்த பிறகு ஏற்படும் நிலை. இத்தனை பெருநஷ்டத்துக்கும் காரணம் மனிதனின் பேராசையே. ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். மக்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே தப்பிக்க முடியும். இணையவழி குற்றவாளிகள் உளவியல் ரீதியாகத் திட்டம் போட்டு காய் நகர்த்துகிறார்கள். பேராசை கொண்டோரும், உழைப்பை நம்பாமல் மாற்று வழிகளில் மகிழ்ச்சியாக வாழ விரும்புவோரும் மட்டுமே தூண்டிலில் சிக்கும் மீன்கள்.
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
தேவை சுயக்கட்டுப்பாடு
இன்றைய உலகமய சூழலில் இணையவழி முதலீட்டு மோசடிகளுக்குக் காரணம், தனி மனிதர்களின் பேராசை மற்றும் சுயநலம் என்று மட்டுமே சுருக்கிவிட முடியாது. தொழில்நுட்பம் வேகமாக வளரும் அதே நேரத்தில், அது சார்ந்த குற்றங்களும் அதிகரிக்கின்றன. விழிப்புணர்வு, சுயக் கட்டுப்பாடு என்பது பிரதானமானது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வது, இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் நம்பகத்தன்மையை ஆய்வுக்கு உட்படுத்துவதும், சந்தேகம் ஏற்படின் சைபர் கிரைம் தளத்தில் புகார் அளிப்பதும் அவசியம்.
க. சக்திவேல், கும்பகோணம்.
கவர்ச்சிகளை நம்பி...
அதிக லாபம், குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலர் பணத்தை இழக்கின்றனர். முதலீடு செய்வதற்கு முன்பாக நிறுவனத்தின் நம்பகத்தன்மை, பதிவு மற்றும் அனுமதிகளை சரிபார்க்க வேண்டும். தெரியாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளைத் திறக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் கிடைக்கும் முதலீட்டு ஆலோசனைகளை உடனடியாக நம்பாமல், அதிகாரபூர்வ தகவல்களைப் பார்க்க வேண்டும். ஆசையை விட, முதலீட்டுக்கு முன்பாக முழுமையான ஆய்வே பாதுகாப்பான முதலீட்டின் முதல் படியாகும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
தவிர்க்க வேண்டும்
இந்த வகையான மோசடிகள் குறித்த விழிப்புணர்வுகளை கூடுதல் கவனத்துடன், மக்களுக்காக அரசு முன்னெடுக்க வேண்டும். அதே சூழலில் மக்களும் இன்றைய மோகத்தில் சிக்கிக் கொள்ளாமல் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள கவனத்துடன் இணையவழி முதலீட்டு நிறுவனங்களின் அரசு அனுமதிகள், நிதித் துறை அனுமதிகள், சான்றுகள் போன்றவற்றை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். இணையவழி கவர்ச்சியான விளம்பரங்களையும், போலியான நம்பிக்கைகளையும் வைத்து மக்கள் முதலீடு செய்வதைத் தவிர்த்தலும், அரசு இரும்புக்கரம் நீட்டி இந்த மோசடி நிறுவனங்களைத் தடுத்து நிறுத்துவதுமே தீர்வாகும்.
ம. சக்திவேலாயுதம், சுத்தமல்லி.
வருமுன் காத்தலே...
இணையம் வழியாக வரும் தெரியாத "லிங்க்'கை தெரிந்தோ- தெரியாமலோ தொட்டால் தங்களது பணம் போய்விடும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த முதலீடு-குறைந்த காலம்-அதிக வட்டி வருமானம் என்ற பொறியில் மாட்டிக் கொண்டு மொத்த பணத்தையும் இழப்பது வாடிக்கையாக இருக்கிறது. தெரிந்த இடங்களில் முதலீடு செய்வதுதான் நல்லது என்பதை உணர வேண்டும். சைபர் கிரைம் போலீஸôர் குற்றவாளிகளைப் பிடிக்கும் வேகத்துடன், போலி விளம்பரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். பொதுமக்களும் வந்த பிறகு வருந்துவதற்குப் பதிலாக வராமல் காத்துக் கொள்வதே சிறந்தது.
சீனி செந்தில்குமார், தேனி.
ஆசை வார்த்தைகள்
வெள்ளை காக்காய் பறக்கிறது என்றால் உடனே மேலே பார்க்கும் குணமுடையவர்கள்தான் இன்றைய சமுதாய மக்கள். இது போன்ற நபர்களைத் தேர்ந்தெடுத்து ஆசை வார்த்தைகளை விதைக்கிறார்கள். நடுத்தர மக்களும் கீழ்த்தட்ட மக்களும் இது குறித்துச் சிந்திக்காமல், கொடுக்கும் முதலீட்டுக்கு அதிக பணம் வருகிறது என்ற ஆசையில் ஏமாந்து போவதுதான் உண்மை. முதலீட்டுக்கு அதிகமாக பணம் கொடுக்கிறார்கள் என்றால், பலமுறை யோசித்து அவர்களைப் பற்றி நன்றாக தீர விசாரித்து, பிறகு முதலீடு செய்தால் இது போன்ற பொருள் இழப்புகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.
உஷா முத்துராமன், மதுரை.
பேராசை
பேராசையின் காரணமாகவே மோசடி முதலீட்டுத் திட்டங்களில் பலர் சிக்குகின்றனர். எளிதில் கிடைக்கும் அதிக லாபம் நிரந்தரமானது அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும். மேலும், மத்திய-மாநில அரசுகள் இணையவழி மோசடிகள், போலியான முதலீட்டு அழைப்புகள் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, எச்சரிக்கையுடன் செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
மு. மகாராஜன், சங்கரன்கோவில்.
அவசரத்தைத் தவிர்க்கவும்
தெரிந்த தொழிலை விட்டவனும், தெரியாத தொழிலை தொட்டவனும் முன்னேறியது இல்லை. ஏற்கெனவே பணம் அனுப்பி விட்டால், மேலும் பணம் அனுப்ப வேண்டாம். உடனடியாக உங்கள் வங்கி, யுபிஐ சேவை வழங்குபவரைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனை குறித்து தெரிவியுங்கள். அதிக லாபம் என்ற ஆசையைவிட, பணத்தை இழக்காத பாதுகாப்பே முதன்மையானது. முதலீடு செய்வதற்கு முன்பாக குடும்பத்தினர் அல்லது நம்பகமான நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள். குறைந்த முதலீடு- அதிக லாபம் என்று அவசரப்படுத்தும் வார்த்தைகள் வந்தால் நிறுத்தி யோசியுங்கள்.
எம். முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
ஆராய்தலே பாதுகாப்பு
சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மாற்றி யோசித்து ஏதாவது தூண்டிலிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த அரசும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. மின்சாரம்போல் இன்று இணையமும் அவசியத் தேவை என்றாகிவிட்டது. ஆனால், முதலீடு செய்வதற்கு இணையத்தைத் தேடுவது பாதுகாப்பற்றது என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். பொறுமையும் விவேகமும்தான் எந்த மோசடியில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும். இணையம் எப்போதும் நம்மை வேவு பார்த்துக் கொண்டே இருக்கிறது என்ற உண்மையை நாம் அறிவோம். பேராசைப்படாமல், இருப்பதை இழக்காமல் எதையும் ஆராய்ந்து அறிந்து செய்தால் வெற்றியே!
தே.ச. மங்கை, திருநெல்வேலி.
போக்குவரத்து விதிபோல...
இணையவழியில் முதலீடு செய்வதற்கு முன்பாக போக்குவரத்து விதிபோல "நில்-கவனி-செல்' என்ற வழிமுறையைப் பின்பற்றுவது அவசியம். முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் செபி, ஆர்பிஐ, ஐஆர்டிஏஐ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என அதிகாரபூர்வ இணையதளங்களில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சிறிய லாபம் காட்டி நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர், அதிக பணத்தை முதலீடு செய்யச் சொல்லும் நிறுவனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்; "இன்றே முதலீடு செய்யுங்கள்' என்ற அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம். விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
தவறான பரப்புரை
இப்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இணையவழி மோசடிகள் அதிகரித்திருக்கக் காரணம் பணத்தை இரட்டிப்பாக்க சாத்தியமில்லாத பேராசைக்குப் பலியாவதேயாகும். முதலில் முதலீடு செய்து லாபம் ஈட்டியோரின் தவறான பரப்புரையும் மற்றொரு காரணமாகும். நியாயமான வழியிலும், ஏமாறாமலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படாதவரை காலத்துக்கேற்றவாறு தொழில்நுட்ப அடிப்படையில் புதிய புதிய மோசடிகள் தோன்றவும், தொடரவுமே செய்யும். நாம் பிறரை ஏமாற்றவும் வேண்டாம்; ஏமாறவும் வேண்டாம்.காலத்துக்கேற்ற விழிப்புணர்வு தேவை.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
பாதுகாப்பு முக்கியம்
ஆசையே துன்பத்துக்குக் காரணம்; தெரியாத துறையில் துணிந்து இறங்கக் கூடாது. தெளிவாய் தெரிந்த பின்னரே முடிவெடுங்கள். வருமானத்தைவிடப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசு மற்றும் நன்கு தெரிந்த நம்பத் தகுந்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் முதலீடு என்ற பெயரில் பணத்தைக் கொடுத்தால் அது திரும்பி வருவது சிரமம்தான். குறுகியகால பலனை விரும்பாமல், நீடித்த பலனை மட்டுமே விரும்பி முதலீடு செய்தால் மட்டுமே மோசடி வலையில் விழாமல் தவிர்க்கலாம்.
மு. சிதம்பர வில்வநாதன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




