சென்னை, ஜூன் 25: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஆசியாவின் மிகப் பெரிய பொது மருத்துவமனையாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நாள்தோறும் 15 முதல் 20 சடலங்கள் வரை பிரேத பரிசோதனைக்கு கொண்டுவரப்படும்.
இங்கு வரும் சடலங்கள் அனைத்தும் 48 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். பிரேத பரிசோதனைகள் மாலை 6 மணி நேரத்துக்கு பின்பு நடைபெறாது, ஆகையால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை மட்டுமே பிரேத பரி சோதனைகள் நடைபெறும்.
இப்போதுள்ள பிரேத பரிசோதனைக்கூட கட்டடம் பழமையானதாக இருந்தாலும், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பிரேத பரிசோதனை மேஜை வாங்கப்பட்டது.
இது எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தானியங்கி மேஜையாகும். இந்தப் புதிய வகை மேஜையில் பிரேத பரிசோதனை செய்வதால் மருத்துவர்கள் விரைவாகவும், எளிதாகவும் தங்களது பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
இப்போது, இந்தப் புதிய வகை மேஜையுடன் சேர்த்து 4 மேஜைகள் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் உள்ளன.
எலி, கரப்பான் தொல்லை: சடலங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தன. இந்த அறைகள் முறையாக சீரமைக்கப்பட உள்ளன. மேலும், பிரேத பரிசோதனைக் கூடங்களில் உள்ள எலி மற்றும் கரப்பான் தொல்லையை ஒழிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. பிரேத பரிசோதனைக் கூடங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மருத்துவமனைக்கு வருபவர்களை சங்கடப்படுத்துகிறது. இதற்காக உள்ளிருக்கும் காற்றை வெளியேற்றும் மின் விசிறிகள் பொருத்தப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவர்களுக்கு "கேலரி': பிரேத பரிசோதனைக் கூடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்கு உயரமான "கேலரிகள்' புதுப்பிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மருத்துவ மாணவர்கள் உயரமான இடத்தில் இருந்து பிரேத பரிசோதனையைக் கண்டு குறிப்பெடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபை கூறியது: "சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தை புதுப்பிக்கும் பணிகளும், சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்போது பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட பழைய அமரர் அறையில் 56 சடலங்களும், புதிய அறையில் 120 சடலங்களையும் வைக்கலாம். மேலும், யாரும் உரிமை கோராத ஆதரவற்ற 44 சடலங்கள் அமரர் அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவை போலீஸôர் அனுமதியுடன் விரைவில் அப்புறப்படுத்தப்படும்' என்றார் அவர்.
புதுப்பொலிவுடன்...
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2 மாதங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை கூடம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இங்குள்ள பிரேத பரிசோதனைக் கூடம் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து, புதுப்பொலிவுடன் பிரேத பரிசோதனை கூடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தை புதுப்பிக்க, மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரலில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு வரும் அனைத்து சடலங்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து பழுதடைந்த கட்டடங்கள் சீரமைப்பு, குளிர்சாதன இயந்திரங்கள் பழுது நீக்குவது போன்ற பராமரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்து புதுப்பொலிவுடன் பிரேத பரிசோதனைக் கூடம் மீண்டும் செயல்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


